முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவு

ஜார்ஜ் பெர்ணான்டஸ் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜார்ஜ் பெர்ணாண்டஸ்

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த தொழிற்சங்கத் தலைவருமான ஜார்ஜ் பெர்ணான்டஸ் தமது 88 வயதில் காலமானார்.

சோஷியலிஸ்ட் மரபில் வந்த பெர்ணான்டஸ், 1974ல் நடந்த ரயில்வே தொழிற்சங்கப் வேலை நிறுத்தம் மூலம் அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தியை அசைத்துப் பார்த்ததாக புகழப்படுபவர்.

அந்தப் போராட்டத்தை நடத்திய ஆல் இந்தியா ரயில்வேமென் ஃபெடரேஷனின் தலைவராக இருந்தவர் ஜார்ஜ் ஃபெர்ணான்டஸ்.

அனைத்திந்திய அரசியல் தலைவர்களிலேயே இலங்கையில் தமிழர்களுக்கு என்று தனி ஈழம் உருவாவதை ஆதரித்த வெகுசில தலைவர்களில் ஒருவர் பெர்ணான்டஸ்.

வாஜ்பேயி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகித்தவர். அப்போது, வெளியான கார்கில் சவப்பெட்டி ஊழல் குற்றச்சாட்டு, அவரது புகழுக்கு களங்கமானது.

கடைசி காலத்தில் அல்ஸைமர்ஸ் என்னும் மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

"கடும் காய்ச்சலிலிருந்து மீண்டு வந்துகொண்டிருந்த ஜார்ஜ், இன்று காலை சுமார் ஆறு மணியளவில் டெல்லியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்" என்று ஜார்ஜின் உறவினரான டோனா பெர்னாண்டஸ் பிபிசியிடம் கூறினார்.

வைகோ இரங்கல்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வைகோ

இந்திய நாட்டின் ஜனநாயகத்தைக் காக்க, தொழிலாளர்களைக் காக்க தன் வாழ்வையே அர்ப்பணித்த மாபெரும் புரட்சியாளர்தான் ஜார்ஜ் பெர்ணான்டஸின் மறைவு நாட்டிற்கு பெரும் இழப்பு என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரான வைகோ தெரிவித்துள்ளார்.

"நெருக்கடி நிலை காலத்தில் அவர் தலைமறைவு வாழ்க்கை நடத்தியபோது, 1975 இல் முதல்வராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்கள் பெர்ணான்டஸ் தலைமறைவாக இருப்பதற்கு பெரிதும் உதவினார். 1978 முதல் நான் அவரது உயிர் நண்பனானேன். பின்னர் உடன் பிறவாத தம்பியாகவே என் மீது பாசம் கொண்டார்" என்று தனது அறிக்கையில் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

"விடுதலைப் புலிகளுக்கும், தமிழ் ஈழத்துக்கும் அவர் செய்த உதவிகள் கொஞ்ச நஞ்சம் அல்ல. எண்ணில் அடங்காதவை.

பிரதமர் வாஜ்பாய் ஆட்சியில் ஈழத் தமிழர்களுக்கு, குறிப்பாக புலிகளுக்கு அவர் கவசமாகத் திகழ்ந்து செய்த உதவிகளை எண்ணும்போதே என் கண்களில் கண்ணீர் வடிகிறது. ஈழத்தமிழர் வரலாற்றிலும், இந்திய ஜனநாயக வரலாற்றிலும் அழியாத புகழ் ஒளியாக ஜார்ஜ் பெர்ணான்டஸ் நிலைத்து இருப்பார்" என்று அந்த இரங்கல் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்