"முதல்வர் பதவியிலிருந்து விலக தயார்" - குமாரசாமியின் கோபத்துக்கு காரணம் என்ன?

குமாரசாமி படத்தின் காப்புரிமை Hindustan Times
Image caption குமாரசாமி

தனது தலைமைக்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து முன்வைத்து வரும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் செயல் தொடர்ந்தால் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதற்கு கூட தயங்கமாட்டேன் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு குமாரசாமி மாநில முதல்வராக இருப்பதற்கு நிபந்தையற்ற ஆதரவு வழங்கப்படுமென்று தேர்தலுக்கு அடுத்து நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தையின்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அசோக் கெலாட் உள்ளிட்டடோர் வாக்குறுதி அளித்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் குமாரசாமிக்கு எதிரான, அதே சமயத்தில் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு ஆதரவான கருத்தையும் தெரிவித்து வருவது அம்மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரச்சனைக்கு என்ன காரணம்?

சமீபகாலமாக கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளர்களாக உள்ள காங்கிரஸ் கட்சியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிப்படையாகவே சித்தராமையாவுக்கான தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அதாவது, குமாரசாமியின் ஆட்சியில் அரசின் செயல்பாடு மந்தமாக உள்ளதாகவும், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் வேண்டுமென்றே பாரபட்சம் காட்டப்படுவதாகவும் தெரிவித்தனர்.

படத்தின் காப்புரிமை Hindustan Times
Image caption சித்தராமையா

காங்கிரஸ் கட்சியின் உள்ளேயேயும் வெளியேயும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தங்களது கூட்டணிக்கே அச்சுறுத்தலாக அமையுமென்று கருதிய குமாரசாமி இதுகுறித்து

குறிப்பாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும், சமீபத்தில் பெங்களூரு நகர மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவருமான சோமசேகர், "கூட்டணி ஆட்சி ஏற்பட்டு ஏழு மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், இதுவரை எந்த அரசாங்க நலத்திட்டங்களும் நடைமுறைக்கு வரவில்லை. இதுவே சித்தராமையாவுக்கு மற்றொரு ஐந்து ஆண்டுகள் வாய்ப்பு கிடைத்திருந்தால் நமது மாநிலம் உண்மையான வளர்ச்சியை பெற்றிருக்கும்" என்று கூறியிருந்தார்.

மேலும், காங்கிரஸ் கட்சியின் மற்றொரு சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான புட்டரங்கா, கர்நாடக முதலமைச்சர் பதவியில் தன்னால் "சித்தராமையாவை தவிர" வேறு யாரையும் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்று கூறியிருந்தார்.

ஒரு குறிப்பிட்ட காலம் வரை பாஜகவின் ஆப்பரேஷன் கமலா 3.0, உண்மையிலேயே காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளம் இடையிலான உறவை வலுவாக்கியது என்று கூறலாம். காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளம் இடையிலான பிணைப்பை உடைத்து, சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து தற்போதுள்ள ஆட்சியை கலைத்துவிட்டு, ஆட்சியில் அமர விருப்பப்படும் பாஜகவின் மறைமுக திட்டமே கமலா 3.0.

என்ன சொன்னார் குமாரசாமி

உணர்ச்சிகரமானவராக அறியப்படும் குமாரசாமியிடம், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்து வரும் கருத்துகள் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

"இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள்தான் உற்றுநோக்க வேண்டும். என்னிடம் இதே கேள்வியை அவர்களிடம் கேளுங்கள். இதே சூழ்நிலை தொடர்ந்தால் நான் முதலமைச்சர் பதவியிலிருந்தும் விலகுவதற்கு தயாராக இருக்கிறேன். மேலும், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டணி தர்மத்தின் எல்லையை மீறி செயல்படுகிறார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறேன்" என்று கூறினார்.

குமாரசாமியின் ஆட்சி நீடிக்குமா?

கர்நாடகாவின் 2004 முதல் 2008 வரையிலான அரசியல் நடப்புகளை பார்த்தோமானால், இதேபோன்ற சலசலப்புகளை பார்க்க முடியும். அந்த காலக்கட்டத்தில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளம், மதசார்பற்ற ஜனதாதளம் - பாஜக ஆகிய இரண்டு கூட்டங்களும் தலா இரண்டு ஆண்டுகள் ஆட்சியில் இருந்தன.

இந்த சூழ்நிலையில், தற்போதுள்ள கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வியை அரசியல் விமர்சகர் சந்தீப் சாஸ்திரியிடம் முன்வைத்தபோது, "இது மக்களவை தேர்தலுக்கான தொகுதி பேரத்தை தொடங்குவதற்கு முன்னர் நடக்கும் விவகாரமே ஆகும்" என்று கூறுகிறார்.

"இரண்டு கட்சிகளுக்குமே கூட்டணி தேவை உள்ளது. இரண்டு பேராலும் கூட்டணி இன்றி செயல்பட முடியாது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :