ஜாக்டோ ஜியோ குறித்து மக்கள்: `போராட்டம் சரிதான். ஆனால் போராடும் நேரம் தவறு`

பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் அரசு ஊழியர் சங்கங்கள் நடத்திவரும் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து உங்கள் கருத்து என்ன? என்று நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

அதற்கு நேயர்கள் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் தளத்தில் பதிவிட்ட கருத்துகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

ஆசிரியர்கள் குழந்தைகள் இனிமேல் அரசுபள்ளியில் படித்தால் மட்டுமே அரசு வேலை என்று சட்டத்தை இயற்றுங்கள். தனியார் பள்ளியின் கட்டனம் குறையும் , அரசு பள்ளியின் தரம் உயரும் என்கிறார் ராஜ்குமார் நல்லு என்னும் முகநூல் நேயர்.

பொதுத்தேர்வு வர இருப்பதால் இதுப்போன்ற நேரத்தில் போராட்டத்தில் ஈடுபடுவது சரியல்ல என்கிறார் தீனு தமிழ் என்னும் நேயர்.

அரசு வேலைகளை தனியார்மயபடுத்துவதற்காக அரசின் ஒடுக்குமுறை என்கிறார் நவி நவீன் என்னும் முகநூல் நேயர்.

வருத்தமான ஒன்று விவசாயத்திற்கு அடுத்து அழிந்துவரும் நிலைமையில் அரசு பள்ளிகள் உள்ளன. இந்த அரசு நிர்வாகம் அரசு பள்ளிகளை மூடிவிட்டு தனியார் பள்ளி வளர்வதற்கும், நவதோய பள்ளிகள் தமிழ்நாட்டில் தொடங்குவதற்குமான மறைமுகமாக செயற்பாடாக தான் கருத முடியும். ஆசிரியர்களின் பக்கம் நியாயமுள்ளது. என்கிறார் கோ.பார்த்திபன்

அரசு ஊழியர்களை நிலையை அரசு பேசி தீர்க்க வேண்டும் . அரசு ஊழியர்களுக்கே இப்படி என்றால், சாதாரண' மக்களின் நிலை ...? என்று கேள்வி எழுப்புகிறார் பரமசிவம் கந்தசாமி.

அரசும் சரி, ஜாக்டோ-ஜியோவும் சரி பொது நலனுக்காக அன்றி சுயநலமாக செயல்படுகிறார்கள் என்று டிவிட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார் சத்ய காமராஜ் செல்வதுரை.

போரட்டம் மக்களை பாதிக்காத அளவிலும், அரசு கோரிக்கையை கோரிக்கையின் தன்மையை புரிந்து ஏற்றுகொள்ளும் வகையிலும் இருந்தால் நல்லது என்கிறார் மைதீன் ரிஃபா.

கோரிக்கை நியாயமானதாக இருந்தாலும் அதற்கான நேரம் இதுவல்ல என்கிறார் மிடில் பென்ச் என்னும் டிவிட்டர் நேயர்.

அவர்களது உழைப்பிற்கான ஊதியம் கேட்பது உரிமையே... தருவதாக சொல்லப்பட்டதை மறுக்கும்போது ஏற்பட்ட போராட்டம்... என்கிறார் மு.சூரியபாண்டி

தேர்தல் அருகில் வந்தால் தமிழ்நாட்டில் பல போராட்டங்கள் வருவது வாடிக்கையாகி விட்டது. ஆசிரியர்கள் மறு பரிசீலணை செய்வது நல்லது என்கிறார் அவுரங்கசீப் என்னும் நேயர்.

அரசின் நிதிநிலை கருதி தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற நம் அலுவலர்கள் முன்வர வேண்டும். அரசும் அவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகளை முழுமையாக வாபஸ் பெற்று அவர்களை அழைத்து கனிவுகாட்ட வேண்டும் என்கிறார் அன்புடன் அனீஸ் என்ற நேயர்.

ஆசிரியர்கள் வெறும் சம்பளத்திற்காக மட்டும் போராட வில்லை. அவர்கள் சேர்த்து வைத்த பிஎஃப் பணம் 80,000 கோடி எங்கே என்று கேட்கிறார்கள். அரசு அவர்களை அழைத்துப் பேசவேண்டும் என்கிறார் நேயர் சரோஜா பாலசுப்ரமணியம்.

பள்ளித் தலைமை ஆசிரியர்கள், தனிநபர்கள், தொண்டு நிறுவனங்களிடம் நன்கொடை வாங்கிதான் பள்ளியின் இதர நிர்வாக செலவுகளை நடத்துகின்றனர். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இல்லையென்றால், அரசுப்பள்ளிகளே இல்லை என்பதுதான் உண்மை என்கிறார் செந்தில் குமார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :