‘புள்ளினங்காள்…ஓ…புள்ளினங்காள்…’: காயமடைந்த வெளிநாட்டுப் பறவைக்கு அறுவைச் சிகிச்சை

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப் படம்

தினமணி : காயமடைந்த வெளிநாட்டு பறவைக்கு அறுவைச் சிகிச்சை

ஆஸ்திரேலியாவிலிருந்து இரை தேடி புதுவைக்கு வந்தபோது, இறக்கையில் அடிபட்டு காயத்துடன் மீட்கப்பட்ட பிளமிங்கோ பறவையை வனத் துறையினர் அறுவைச் சிகிச்சை செய்து காப்பாற்றினர் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

பூநாரை அல்லது செங்கால் நாரை என்றழைக்கப்படும் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த 7 வயது ஆண் பிளமிங்கோ பறவை ஒன்று இரை தேடி கடந்த 15 நாள்களுக்கு முன்பு புதுவை வந்தபோது, தமிழகப் பகுதியான புதுக்குப்பத்தில் அடிபட்டுக் கிடந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த, கண்ணதாசன் தலைமையிலான புதுவை வனத் துறையினர், காயத்துடன் கிடந்த அந்தப் பறவையை மீட்டு, வனத் துறை அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு கால்நடை மருத்துவர் குமரன், பிளமிங்கோ பறவையை பரிசோதனை செய்தபோது, அதன் இறக்கைகளில் ஒன்றில் இருந்த எலும்பு உடைந்திருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, பிளமிங்கோ பறவைக்கு முதலுதவியும், அதைத் தொடர்ந்து, சில நாள்களில் அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. அறுவைச் சிகிச்சையின் போது, பறவையின் உடைந்த எலும்பு ஒட்டவைக்கப்பட்டு, கிழிந்த சதைப்பகுதிக்கு தையலும் போடப்பட்டது.

கடந்த சில நாள்களாக, பிளமிங்கோ பறவையின் உடலுக்கு குளுக்கோஸ் உதவியுடன் சத்துகள் ஏற்றப்பட்டு வந்த நிலையில், தற்போது, அந்த பறவைக்கு உணவாக வாய் வழியாக சிறிய அளவிலான இறால் மீன் துண்டுகளை வனத் துறையினர் வழங்கி வருகின்றனர். தற்போது நலமாகவுள்ள இந்தப் பறவையை பறக்க வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுகுறித்து புதுச்சேரி வனத் துறை துணை இயக்குநர் எஸ். குமாரவேலு கூறியதாவது: விரைவில் அதன் காயங்கள் ஆறி, நல்ல நிலைமைக்கு வந்தவுடன், தானாகவே உணவு உள்கொள்ள ஆரம்பிக்கும் என நம்புகிறோம். இருப்பினும், பிளமிங்கோ பறவை மீண்டும் வெளியில் பறப்பது என்பது கடினம்தான். எனவே, அந்தப் பறவையை இங்கேயே பராமரிக்கலாமா என ஆலோசித்து வருகிறோம் என்றார்.

- இவ்வாறாக அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.


இந்து தமிழ்: "அப்போலோ, சசிகலாவுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை"

ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சிகளின் அடிப்படையில் அப்போலோ மருத்துவமனை மற்றும் சசிகலாவுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை என்று வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

அந்நாளிதழ் செய்தி,

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையின் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள ஆணையம் பிப்ரவரி 24-ம் தேதிக்குள் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன், தம்பிதுரை எம்பி ஆகியோர் ஆணையத்தில் அளித்த வாக்குமூலத்தின் நகலை தனக்கு வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வத்தின் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்து, பின்னர் அதை திரும்ப பெற்றுக் கொண்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சசிகலா

இதைத்தொடர்ந்து வருகிற 5-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டுள்ளார். 21 சிறப்பு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை ஏற்படுத்த வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை ஆணையம் தள்ளுபடி செய்துள்ளது.

சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் கூறும் போது, "ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. அவரிடம் விசாரணை நடத்தினால்தான் பல மர்மங்களுக்கான முடிச்சுகள் சரியாகும்.

ஓ.பன்னீர்செல்வம் விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பதால் வேகமாகச் சென்று கொண்டிருந்த ஆணையப் பணிகள் சற்று தாமதமடைந்துள்ளன. அமைச்சர்கள் பலர் பொதுவெளியில் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அப்படி பேசும் 9 அமைச்சர்களிடம் விசாரிக்க வேண்டும். லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவிடமும் குருமூர்த்தியிடமும் நிச்சயம் விசாரிக்க வேண்டும். இது தொடர்பாக ஆணையத்தில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்துள்ளேன்.

சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அப்போலோ மருத்துவமனை மற்றும் சசிகலாவுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் எதுவுமே இல்லை என்பது ஆணையத்துக்கு தெரியும். கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களுக்கும் ஜெயலலிதா மரணத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்று பெரிய அரசியல் தலைவர்களே பேசுகின்றனர். அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டியது ஆணையத்தின் கடமை" என்றார்.


படத்தின் காப்புரிமை தினமணி

தினத்தந்தி: 'அயோத்தி: 67 ஏக்கர் நிலத்தை திருப்பி அளிக்கஅனுமதி கோரும் அரசு'

அயோத்தியில் கூடுதலாக கையகப் படுத்திய 67 ஏக்கர் நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் திருப்பி ஒப்படைக்க அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளதென்றும், 33 பக்கங்களை கொண்ட அந்த மனுவில், "1991-ம் ஆண்டு அன்றைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அயோத்தியில் பிரச்சினைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சுற்றிலும் உள்ள 67 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது. இதில் ராமஜென்ம பூமி நிவாஸ் என்ற ராமர் கோவில் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட இந்து அறக்கட்டளை தனக்கு சொந்தமான 42 ஏக்கர் கூடுதலாக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை திரும்ப ஒப்படைக்கும்படி கேட்டுள்ளது. உச்சநீதிமன்றத்திலும் இதுதொடர்பாக அந்த அமைப்பு விண்ணப்பித்துள்ளது. எனவே கூடுதலாக கையகப்படுத்திய நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கலாம் என்று மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது." என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்த செய்தி அனைத்து நாளிதழ்களிலும் பிரதானமாக இடம்பிடித்துள்ளது.

ஆசிரியர் போராட்டம்

பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர் என்கிறது தினத்தந்தி நாளிதழ்.

"9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கீழ் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 7 நாட்களாக நடைபெற்று வந்த வேலைநிறுத்தத்தில் பங்கு பெற்ற ஆசிரியர்களில் 1,273 பேரை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை நடவடிக்கை எடுத்து இருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் உயர்நீதிமன்ற மதுரை கிளை கோரிக்கைகளுக்காக தெருவில் இறங்கி போராடுவதா? என்று கண்டனம் தெரிவித்து, வழக்கை ஒத்திவைத்தது.

உயர்நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்த நிலையிலும், ஆசிரியர்கள் மீது அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வரும் நிலையிலும் கடந்த 7 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்களில் பெரும்பாலானோர் நேற்று பணிக்கு திரும்பியதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்." என்கிறது அந்நாளிதழ்.


தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் வாக்களிக்க முடியாது

நீர்நிலையை ஆக்கிரமித்தவர்களின் பெயர்களை வாக்காள பட்டியலில் சேர்க்கக் கூடாதென தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்.

கே.கே. ரமேஷ் என்பவர் போட்ட பொதுநல வழக்கில் நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலி அடங்கிய அமர்வு இவ்வாறான உத்தரவை பிறப்பித்துள்ளதாக அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :