'பில்லி சூனியம்': ஒடிசாவில் தாயும், 4 குழந்தைகளும் கொலை

இந்த பெண்ணும், அவரது நான்கு குழந்தைகளும் அவர்களது வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றுக்குள் இறந்து கிடந்தனர்.
Image caption இந்த பெண்ணும், அவரது நான்கு குழந்தைகளும் அவர்களது வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றுக்குள் இறந்து கிடந்தனர்.

சூனியக்காரர்கள் என குற்றஞ்சாட்டப்பட்ட தாயையும், அவரது நான்கு குழந்தைகளையும் கொலை செய்தது தொடர்பாக சந்தேக நபர்களை ஒடிசா மாநில போலீசார் தேடி வருகின்றனர்.

இந்தியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இந்த சம்பவத்தில் இன்னும் அதிகமானவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸ் நம்புகிறது.

மான்கிரி முண்டா என்ற பெண் மற்றும் அவரது நான்கு குழந்தைகளின் உடல்கள், அவர்களின் வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றில் ஜனவரி 26ம் தேதி கண்டெடுக்கப்பட்டது.

சூனியக்காரர்கள் என்று கூறி பெண்களை இலக்கு வைத்து தாக்குவது சில மாநிலங்களில் நடந்து வருகிறது.

மூத்த போலீஸ் அதிகாரி கவிதா ஜலான் இது பற்றி பேசுகையில், "கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி தான் ஒரு "மந்திரவாதி" என்று கூறியுள்ளார்.

சுந்தர்காத் மாவட்டத்திலுள்ள பழங்குடியின குடியிருப்பில் வாழ்ந்த முண்டாவும், அவரது குழந்தைகளும் அந்த கிராமத்திலுள்ள இன்னொரு குடும்பத்தின் மீது சூனியம் செய்துள்ளதாக கைதானவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜனவரி 25ம் தேதி இரவு முண்டாவும், அவரது குழந்தைகளும் தூங்கிக்கொண்டிருந்தபோது ஆண் கும்பல் ஒன்று வீட்டுக்குள் நுழைந்துள்ளது. முண்டாவின் குழந்தைகள் முறையே ஒன்று, நான்கு, ஏழு மற்றும் 12 வயதானவர்கள்.

உடல்களை அருகிலுள்ள கிணற்றில் வீசுவதற்கு முன்னால் மரக்கட்டையாலும், கோடரியாலும் அவர்களை இந்த கும்பல் தாக்கியுள்ளது.

பெண்களை சூனியக்காரிகள் என முத்திரை குத்துவது ஒடிசாவிலுள்ள பழங்குடியின சமூகங்களில் இன்னும் ஒரு பழக்கமாக இருந்து வருகிறது.

இந்த கொலையில் ஈடுபட்டுள்ள பிறரையும் தேடி வருவதாகவும், அதிக கைதுகள் இருக்கும் என்றும் காவல்துறை தெரிவிக்கிறது.

"இத்தகைய மூட நம்பிக்கைகள் மீதான விழிப்புணர்வை கிராம மக்களிடம் ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்" என்று ஜலான் தெரிவித்திருக்கிறார்.

சூனியம் தடைசெய்யப்பட்டிருந்தாலும், சூனியத்தோடு தொடர்புடைய கொலைகள் ஒடிசாவில் அதிகரித்து வருகின்றன.

சூனியக்காரர்களாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு குடும்பத்திலுள்ள மூன்று பேரை கடந்த ஆண்டு கொலை செய்த ஒன்பது பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

இதே மாதிரியான காரணங்களால் அஸ்ஸாம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் பெண்கள் அடிக்கடி பாதிக்கப்படுகின்றனர்.

2017ம் ஆண்டு ஒடிசாவில் சூனியம் தொடர்பாக 99 வழக்குகள் போலீஸில் பதிவாகியுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு பதிவான 83 வழக்குகளைவிட இது அதிகமாகும்.

இந்த தாக்குதல்களுக்கு பின்னணியில் மூட நம்பிக்கைகள் உள்ளன என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், மக்கள் சிலர், குறிப்பாக விதவை பெண்கள் நிலத்திற்காகவும், சொத்துக்களுக்காகவும் இலக்கு வைக்கப்பட்ட தருணங்களும் உள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்