பிளாஸ்டிக் தடையால் ஏற்படும் மாற்றம்: இறைச்சி கடைகளில் ‘பனை ஓலை பை’

பிளாஸ்டிக்

பிளாஸ்டிக்கை ஒழிக்க தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்ட மக்கள் பனை ஓலைகளில் செய்யப்படும் பொருள்களுக்கு மாறி வருகின்றனர். இதனால் இறைச்சி கடை முதல் காய்கறி கடை வரை மக்கள் பனை ஓலைகளால் செய்யப்பட்ட பைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

பனை தொழிலாளர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு பனை ஒலைகளால் நவீன தொழில்நுட்ப முறையில், கை வினை பொருள்களை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்த பயிற்சி வழங்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார். இதன்மூலம் தங்களின் வாழ்வாதாரம் மேம்படும் என பனைத்தொழிலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வாழ்வாதாரம் மேம்படும்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல பகுதிகளில், பனை ஓலையை கொண்டு, பாய், கூடை, பை, விசிறி மற்றும் தட்டு உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை பனைத் தொழிலாளர்கள் உற்பத்தி செய்து வருகிறார்கள். பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதையடுத்து, தங்களின் தயாரிப்புகளை பொதுமக்கள் வாங்கிப் பயன்படுத்தினால், பிளாஸ்டிக்கையும் ஒழிக்கலாம், இதனால் தங்களின் வாழ்வாதாரமும் காப்பாற்றப்படும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

ராமநாதபுரம் சுற்று வட்டார கிராமங்களில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பனைத் தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். பொதுவாகவே தை மாதத்திலிருந்து ஆடி மாதம் வரை மட்டுமே பனைவெல்லம் எனப்படும் கருப்பட்டி தயாரிக்கும் பனைத் தொழில் இருக்கும். அதன் பிறகு மீதி உள்ள ஆறு மாத காலங்களுக்கு பனை மரத்தில் இருந்து கிடைக்கும் ஓலைகளை வெட்டி, காய வைத்து அதன் மூலம் பாய்கள், விசிறிகள், கூடைகள், பைகள் மற்றும் கொட்டான்கள் என பனை ஓலைகளை பயன்படுத்தி கைவினைப் பொருள்களை விற்பனை செய்து வருகிறார்கள்.

அதிகரிக்கும் பனை ஓலை பொருட்கள்

2019 ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு அதை செயல்படுத்தி வருவது வரவேற்கத்தக்க விஷயம் என்று மகிழ்ச்சி தெரிவிக்கும் இவர்கள், தங்களின் தயாரிப்புகளான ஓலைப்பாய், ஓலைப்பெட்டி, ஓலை விசிறி மற்றும் ஓலைத் தட்டு உள்ளிட்ட அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களையும் பொதுமக்கள் வாங்கி பயன்படுத்த முன்வர தொடங்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க முடியும் என வணிகர்கள் மற்றும் பொது மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்ததில் இருந்தே வணிகர்கள் பனை ஓலைகளில் ஆன பைகளை பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர், குறிப்பாக ராமேஸ்வரம், சாயல்குடி, கன்னிராஜபுரம், நரிப்பையூர், கீழக்கரை, ஏர்வாடி தர்ஹா உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் இறைச்சி கடைகளில், மீன், ஆடு மற்றும் கோழி இறைச்சிகள் பனை ஓலைகளில் பார்சல் செய்து கொடுக்கப்படுகின்றன.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், "ராமநாதபுரம் மாவட்டத்தில் 2500 ஏக்கரில் சுமார் 1 கோடியே 80 ஆயிரம் பனை மரங்கள் உள்ளன. இதனை நம்பி 5000த்திற்கும் மேற்பட்ட தொழிலார்கள் உள்ளனர். சுய உதவி குழுக்கள் மூலமாக 3000 பெண்கள் பனை ஓலைகளை கொண்டு கைவினை பொருள்களை உற்பத்தி செய்து வருகின்றனர். ப்ளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக பனை ஓலைகளால் செய்யப்பட்ட பைகளில் பொருள்கள் வாங்கினால் உடல்நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது.

எனவே, பனை ஓலைகளின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வுகள் தெரு கூத்து மற்றும் நாடகங்கள் மூலமாக அனைத்து தரப்பு மக்களை சென்றடையும் வகையில் மாவட்டம் முழுவதும் நடத்த ஏற்பாடு செய்யப்படும்" என தெரிவித்தார்.

இது குறித்து சாயல்குடி வணிகர் சங்க தலைவர் பெத்தராஜ் பிபிசி தமிழிடம் கூறியது, "பனை ஓலைகளை பொருத்தவரை பெட்டிகள், பெண்கள் பயன்படுத்தும் தூக்கு பை உட்பட அனைத்து விதமாக பொருள்களும் கிடைக்கின்றன, பனை மரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்து பொருள்களுமே நன்மை தரக்கூடியது பக்க விளைவுகள் இல்லாதது ஆனால் மக்களிடம் அது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் மக்கள் மத்தியில் பனை ஓலை பெருள்கள் குறித்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது" என கூறினார்.

பிபிசி தமிழிடம் பேசிய மீன் வியாபாரி ஓரிராஜா, "நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு மீன்களை பனை மற்றும் வாழை இலைகளில்தான் கொடுத்து வருகிறோம். அதிலும், பனை ஓலைகளில் கொடுப்பது மிகவும் சந்தோஷம் அளிக்கிறது.

பிளாஸ்டிக் பைகளில் கொடுக்கும் இல்லாத மன நிறைவு தற்போது ஆரோக்கியமான முறையில் ஓலை பைகளில் கொடுக்கும் போது கிடைக்கிறது. அதனை வாடிக்கையாளர்களும் விரும்புகின்றனர் பிளாஸ்டிக் பைகளில் போட்டால் மீன்கள் சீக்கிரம் கெட்டு போகும் ஆனால் பனை ஓலைகளில் மீன்கள் வாங்கினால் சீக்கிரம் கெட்டு போகாது" என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :