கும்பமேளாவில் நீராடிய முதல் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் என்பது உண்மையா? #BBCFactCheck

யோகி படத்தின் காப்புரிமை Getty Images

கும்பமேளாவின்போது கங்கையில் குளித்த முதல் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் என்ற செய்தி பல வலதுசாரி சமூக ஊடக குழுக்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இம்மாதிரி பொது வெளியில் எந்த ஒரு முதலமைச்சரும் புனித நதியில் நீராடியதில்லை என கூறி, யோகி ஆதித்யநாத்தை இந்துக்களின் பெருமை என்று பலர் கூறி வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமையன்று உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அலகாபாத்தின் திருவேணி சங்கமத்தில் நீராடினார் என்பது உண்மை. அவர் அலகாபாத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு தனது அமைச்சர்களுடன் நதியில் நீராடினார்.

மேலும் யோகி ஆதித்யநாத், தனது டிவிட்டர் பக்கத்தில் புனித அத்தி மரத்திற்கு மரியாதை செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் கங்கையில் கும்பமேளாவில் நீராடிய முதல் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் என்ற கூற்று தவறானது.

எங்களது ஆய்வில் இதற்கு முன் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், அர்த் கும்பமேளா எனப்படும் இரண்டு பூரண கும்பமேளாவுக்கு இடையே வரும் அரைக் கும்பமேளாவில் நீராடியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

2009ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதியன்று யாதவ் அலகாபாத் அர்த் கும்பாவில் நீராடினார் அப்போது அவர் முதலமைச்சராக இருந்தார்.

சில பழைய ஊடக செய்திகளின்படி, சிறப்பு விமானத்தில் கும்பமேளாவிற்கான ஏற்பாடுகளை பார்வையிட வந்த முலாயம் சிங் யாதவ் அப்போது கங்கையில் நீராடினார் என்று தெரியவருகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

தனது வருகையின் போது, அனைத்திந்திய சாதுக்களுக்கான அமைப்பான அகாரா பரிஷத்தின் தலைவர் மதந்த் ஞான் தாஸை யாதவ் சந்தித்துள்ளார்.

சில மூத்த பத்திரிகையாளர்களின் கூற்றுப்படி, 2001ஆம் ஆண்டு அப்போதைய உத்தர பிரதேச முதலமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங் அலகாபாத்தின் மகா கும்பமேளாவில் நீராடியுள்ளார். தற்போது பாஜக ஆட்சியில் உள்துறை அமைச்சராக உள்ளார் ராஜ்நாத் சிங்.

மூத்த பத்திரிகையாளர் ராம்தட் திரிபாதி, "முதலமைச்சர்கள் கும்பமேளாவில் குளிப்பது ஒன்றும் புதியதல்ல" என்று தெரிவித்துள்ளார்.

"பழைய வீடியோக்களை ஆராய்ந்தால் பிரிக்கப்படாத உத்தர பிரதேச மாநிலத்தின் முதல் முதலமைச்சர், கோவிந்த் வல்லப பந்த் மகா கும்பமேளாவில் நீராடியதை பார்க்க முடியும், தற்போது அனைத்துமே அரசியல் காரணங்களுக்காக செய்யப்படுகிறது." என்கிறார் திரிபாதி.

ஜனவரி 27ஆம் தேதியன்று உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் கும்பமேளாவில் புனித நீராடினார்.

எனவே யோகி ஆதித்யநாத் கங்கையில் நீராடிய முதல் முதலமைச்சர் என்ற கூற்று தவறானது என்பது தெளிவாகத் தெரிகிறது.

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கும்பமேளாவில் நீராடிய புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டது.

ஐஎன்எஸ் செய்தி முகமையின் செய்திப்படி காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச கிழக்கு பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பிப்ரவரி 4ஆம் தேதி கும்பமேளாவில் புனித நீராட உள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :