பட்ஜெட் 2019: யாருக்கெல்லாம் சலுகை கிடைக்க வாய்ப்பு?

  • டேவினா குப்தா
  • பிபிசி

1947ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி ஆர்கே சண்முகம் செட்டி சுதந்திர இந்தியாவின் முதலாவது பட்ஜெட்டை சமர்பித்தார்.

அந்த நேரத்தில் பிரிவினைகள் பொருளாதாரத்தை சீர்குலைத்திருந்தன, வறுமை அதிகமாக இருந்தது, உணவு உற்பத்தி சவாலாக இருந்தது, பாதுகாப்பு பெரும் கவலையாக இருந்தது.

ஆர்கே சண்முகம் ஆற்றிய தனது உரையில், "நாட்டில் இன்னும் இருக்கும் பிரிவினை நீண்டகால பாதிப்புக்களை கொண்டுவரும். அதிருப்தியான நிலமைகளை சந்திக்கும் நிலையில் நாம் இருக்கிறோம். சர்ச்சைகளின் சாம்பல் மறையும்போது, மனித இனத்தின் ஐந்தில் ஒரு பகுதியினரின் இலக்கை நிர்ணயிக்கும் நடவடிக்கையின் அறிவையும், விளைவுகளையும் முடிவு செய்பவராக எதிர்கால வரலாற்று ஆசிரியர்கள் இருப்பார்கள்" என்று கூறினார்.

இந்த வார்த்தைகள் 70 ஆண்டுகளுக்கு பின்னரும் மீண்டும் ஒலித்து கொண்டிருக்கின்றன.

தேசிய இன அடையான அரசியல் நிழலின் கீழ், இந்தியா தேர்தலை நோக்கி செல்கிறது. கடும் பொருளாதார சவால்கள் காணப்படும் நிலையில், சர்ச்சைகளும் அதிகமாகவே உள்ளன.

நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள 2019-ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்படவுள்ள இந்த இடைக்கால பட்ஜெட்டில், விவசாயிகளுக்கான கடன் நிவாரண நடவடிக்கைகள் பற்றிய பெரிய அறிவிப்புகள் இருப்பதற்கான வலுவான சாத்தியக்கூறும், நடுத்தர வர்க்கத்தினருக்கும், வியாபாரிகளுக்கும் வரி குறைப்பு சலுகை அறிவிப்புகளும் இருக்குமென ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிதி சலுகை அளிக்கும் நடவடிக்கைகளை அரசு தவிர்க்குமானால், அது சற்று கடுமையான பாதையில்தான நடைபோட வேண்டிவரும்.

நிதி கணக்கு மீதான வாக்கெடுப்பு விவாதம்

தேர்தலுக்கு முன்னால் "இடைக்கால பட்ஜெட்டை" அல்லது முந்தைய ஆண்டு அடிப்படை நிதி அறிக்கையை குறிப்பிடும் "நிதி கணக்கு மீதான வாக்கெடுப்பை" அரசு வழங்குகிறது.

தேர்தல் வரையான அடிப்படை செலவுகளை பரிந்துரைக்கும் இது, எதிர்கால அரசின் அடுத்து வரும் ஆண்டுக்கான வருவாய் மற்றும் செலவினங்களை குறிப்பிடும்.

இந்த வார தொடக்கத்தில், இந்திய பெண்களின் செய்தி கூட்டமைப்பின் அமர்வில் பேசிய முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சிங்கா, புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறியுள்ளார்.

"அடுத்து வரும் மூன்று அல்லது நான்கு மாதங்கள் செலவினங்களை அனுமதிப்பதற்கு பொருத்தமான மசோதாவை மட்டுமே அவர்கள் அறிமுக்ப்படுத்த முடியும். நிதி கணக்கு மீதான வாக்கெடுப்பு அமர்வில் நிதி மசோதாவை அரசு சமர்பித்தால், இது அரசியல் சாசனத்திற்கு எதிரானதாக அமையும்" என்று யஷ்வந்த் சிங்கா கூறினார்.

ஆனால், கடந்த காலங்களில் இதற்கு மாறாகவும் நடவடிக்கைகள் இருந்துள்ளன.

வரலாற்றுபூர்வ தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட்டுகள்

1996-97இல் நிதி அமைச்சராக மன்மோகன்சிங் ஆற்றிய உரை, நிதி கணக்கு மீதான வாக்கெடுப்புக்கு அப்பாற்பட்டதாக அமைந்தது.

தேர்தலுக்கு முன்னால், தராளமயமான பொருளாதார சீர்திருத்தங்களின் வெற்றி பற்றி கவனமாக எழுதப்பட்ட உரையை அவர் வழங்கினார்.

2009ம் ஆண்டு முன்னாள் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி வழங்கிய உரையும் கூட, ஒவ்வொரு துறையின் பங்குதாரர்களின் நன்மைகளை குறிப்பிடுகின்ற, அவரது அரசு மேற்கொண்ட பொருளாதார முன்னேற்ற மதிப்பீட்டுக்கு ஒத்ததாக அமைந்தது.

2014ம் ஆண்டு பி. சிதம்பரம் கூட பேசிய 80 பத்திகளுக்கு மேலான அறிவிப்பில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார முன்னேற்றத்தை அடையாளப்படுத்தி காட்டினார்.

வாகனங்கள் உள்பட பல்வேறு பொருட்களுக்கு கலால் வரியை குறைத்திருப்பதை தெரிவித்ததன் மூலம், முறையான அரசியல் கூட்டத்திற்கு அப்பாற்பட்டு செயல்பட்டிருந்தார்.

"இது வழக்காமானதொரு பட்ஜெட்டா அல்லது இடைக்கால பட்ஜெட்டா" என்று பேசிய அவர் "அது மாதிரியான ஒன்று இது" என்று கூறியிருந்தார்.

படையினருக்கு "ஒரு பதவி ஓர் ஓய்வூதியம்" என்கிற புதிய வழிமுறையையும், கல்வி கடன்களுக்கு சலுகையையும் அவர் முன்மொழிந்திருந்தார்.

ஆனால், மிகவும் கண்காணிப்புக்குள்ளாகியுள்ள இப்போது, பிப்ரவரி 1ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை சமர்பிக்க இருப்பதாக தற்காலிக நிதி அமைச்சர் பியுஷ் கோயல் தெளிவுப்படுத்தியுள்ளார்.

மோதி அரசின் இடைக்கால பட்ஜெட்டில் எதிர்பார்ப்புகள்

தேர்தலுக்கு முன்னரே, ஜிஎஸ்டி-யின் கீழ் பொருட்களின் அடிப்படை வரிகளை அரசு ஏற்கெனவே குறைத்துவிட்டது.

சிறு வர்த்தகங்கள் வரிகள் செலுத்தாமல் இருக்கவும் சலுகை அளித்துள்ளது. ஆனால் பொருளாதார வல்லுநர்கள் இன்னும் அதிகமாகவே எதிர்பார்க்கின்றனர்.

2014ம் ஆண்டு மக்களவை தேர்தல்கள் பற்றிய தேர்தல் ஆணைய தரவுகளின்படி, 2014ம் ஆண்டு 67 விழுக்காடு வாக்குகள் கிராம பகுதிகளில் பதிவாகியிருந்தன. கிராம பகுதிகளில் பாரதிய ஜனதா கடசி பெற்றிருந்த வாக்குகள் 18 விழுக்காட்டில் இருந்து 30 விழுக்காடாக அதிகரித்திருப்பதை தரவுகள் சுட்டுகின்றன.

பெருமளவு நகர்புற மேல்தட்டு வர்க்கத்தினரின் வாக்குகளை அறுவடை செய்து வந்த பாரதிய ஜனதா கட்சியின் வாக்காளர்கள், கிராம பகுதிகளுக்கு விரிவடைந்ததை இது காட்டுகிறது.

ஆனால், இப்போது விவசாயிகள் மிகவும் கோபம் கொண்டுள்ளனர். இதனை எதிர்கொள்ளும் விதமாக விவசாயிகளுக்கு சலுகைகள் வழங்கும் பெரிய அறிவிப்புகள் இருக்கலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

"விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது அல்லது குறைந்த பட்ச கொள்முதல் விலையை அதிகரிப்பது சிறிய விவசாயிகளுக்கு பெரிதாக உதவவில்லை.

ஒரு ஏக்கரில் ஒருமுறை பயிரிட விவசாயிகளுக்கு ரூ. 4000 வழங்கும் தெலங்கானா மாநில சலுகை மாதிரியை அரசு பின்பற்றலாம். இதனால் மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (ஜிடிபி) 7 விழுக்காடு பாதிப்பு உருவாவதோடு, நிதி நிலைமையில் அழுத்தங்கள் ஏற்படும்" என்று இந்திய கடன் மதிப்பு மற்றும் ஆய்வு நிறுவனத்தின் தலைமை பொருளாதார வல்லுநர் டிகே பான்ட் கூறியுள்ளார்.

மேலும், பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறைகளால் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகர்கள் இந்த பட்ஜெட்டில் நிவாரணம் கிடைக்குமென நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

எல்லா குழும நிறுவனங்களும் செலுத்துகின்ற வரி 30 விழுக்காட்டில் இருந்து 25 விழுக்காடாக குறைக்கப்பட வேண்டுமென இந்திய தொழிலதிபர்களின் கூட்டமைப்பான இந்திய தொழில்துறை கூட்டுறவு பரிந்துரை செய்துள்ளது.

ஆனால், இந்த பட்ஜெட்டில் வரியில் மாற்றங்கள் ஏற்படுத்துவது, இடைக்கால பட்ஜெட் என்றால் எது? என்ற விவாதத்திற்கு வழிவகுக்கும்.

அதிக வேலைவாய்ப்பு ஏற்படும் என்று எதிர்பார்த்து இளைஞர்களில் பலர் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்திருந்தனர்.

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின்படி, கடந்த ஆண்டு ஒரு கோடியே 10 லட்சம் வேலைவாய்ப்புகளை நாம் இழந்துள்ளோம். எனவே, இளைஞர்களை திருப்திபடுத்துவதற்கு அரசால் ஏதாவது செய்ய முடியுமா?

ஆனால், பணம் எங்குள்ளது?

சமூக திட்டங்களில் தேர்தலுக்கு முன்னால் அதிகமாக செலவு செய்வது, வரி வசூலிப்பு குறைய செய்வதோடு பண புழக்க பற்றாகுறையை ஏற்படுத்தலாம்.

மூடிஸ் முதலீட்டு நிறுவனம் போன்ற உலக கடன் மதிப்பீட்டு நிறுவனங்கள் இதற்கு எதிராக எச்சரிக்கையை வழங்கியுள்ளன.

"2019 மார்ச்சில் இந்த நிதியாண்டு முடிவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மத்திய அரசின் நிதி புழக்க பற்றாகுறை 3.4 விழுக்காடாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது பட்ஜெட் இலக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 3.3 விழுக்காடு என்பதை விட அதிகமாகும்" என்று மூடிஸ் நிறுவனம் கூறியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி மீட்பு பணிக்கு வரலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். ரிசர்வ் வங்கி அதன் இருப்பிலிருந்து அதிக பணத்தை பகிர்ந்து கொள்ள அரசு அழுத்தம் கொடுத்துள்ளது. கடந்த மாதம் ரிசர்வ வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் பதவி விலகுவதற்கு முக்கிய காரணமாக இது பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த நடவடிக்கை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வங்கியின் சுதந்திரம் பற்றிய எதிர்மறையான அறிகுறியை வழங்கும். நீண்ட காலத்தில் பொருளாதாரத்தையும் பாதிக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :