பட்ஜெட் 2019: 2 ஹெக்டேருக்கு குறைவாக உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000 #Budget2019

பியூஸ் கோயல் படத்தின் காப்புரிமை PIB

இரண்டுஹெக்டேருக்கு குறைவாக இருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000 வழங்கும் புதிய திட்டம் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

“பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனா” திட்டத்தின் மூலம் இந்த தொகை 3 தவணையாக விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதனால் 12 கோடி விவசாயிகள் பயனடைவர்.

வரயிருக்கும் நிதியாண்டில் விவசாயிகளின் இந்த உதவி திட்டத்திற்கு ரூ. 75 ஆயிரம் கோடி நிதி முன்மொழியப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 2018 தொடக்கத்தில் இருந்து விவசாயிகளுக்கு உதவி வழங்கும் இந்த திட்டத்திற்கு இந்த நிதியாண்டில் ரூ. 20 ஆயிரம் கோடி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,

படத்தின் காப்புரிமை Getty Images

பியூஸ் கோயல் பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்

 • வங்கிகளின் வாராக் கடன் 3 லட்சம் கோடியை வசூல் செய்திருப்பதாக பியூஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார்.
 • பின்தங்கிய 115 மாவட்டங்களுக்குசிறப்பு திட்டங்களுக்கு உதவி அளிக்கப்படும். மீன்வளத் துறைக்கு தனிப்பட்ட அமைச்சகம் உருவாக்கப்படும்.
 • பிரதமர் திறன் மேம்பாட்டு திட்டம் மூலம் ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
 • ஜனவரி மாதம் வரை ரூ. 1,3000 கோடி ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டுள்ளது.
 • வீடு வாங்கும்போது ஜிஎஸ்டி வரி குறைக்க முன்மொழிவு வழங்கப்பட்டுள்ளது.
 • சிறிய வியாபாரிகள் வளர ஜிஎஸ்டி நிவாரணம் வழங்க முயல்கிறது. இந்த நிவாரண உதவி 40 லட்சம் வரை இருக்கும்.
 • வரி செலுத்துவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு கண்டுள்ளது. 12 லட்சம் கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது.
 • கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க, உயிரி எரிபொருள் திட்டங்களில் கவனம் செலுத்தப்படும்.
 • 2022ம் ஆண்டுக்குள் முற்றிலும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோளை இந்தியா விண்ணில் செலுத்தும்.
 • 2030ம் ஆண்டுக்குள் நாட்டின் எல்லா ஆறுகளையும் இந்திய அரசு சுத்தப்படுத்தும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 • அடுத்த ஐந்தாண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா மாறும். அடுத்த 8 ஆண்டுகளில் 10 டிரில்லியன் டாலர் மதிப்புடைய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவது இந்திய அரசின் கனவாகும்..
 • சௌபாக்கியா திட்டத்தின் மூலம் இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் எல்லா வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்படும்.

இடைக்கால பட்ஜெட் 2019-யின் விவரங்கள் வெளியானவுடன் மதியம் சுமார் 1.30 மணி அளவில் பங்கு சந்தை ஏற்றம் கண்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

இதன் மூலம் ஆண்டுக்கு 5 லட்சம் வரை சம்பளம் வாங்குவோர் வரி கட்ட வேண்டியதில்லை.

இந்த வரிச் சலுகை மூலம் 3 கோடி நடுத்தர வர்க்கத்தினர் பயனடைவர் என்று தெரிவிக்கப்படுகிறது. 2வது வீடு வாங்கினாலும் வரி சலுகை இந்த இடைக்கால பட்ஜெட்டில் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி விலக்கு சலுகை வழங்கியிருப்பதன் மூலம் ரூ. 18,500 கோடி வருமான இழப்பு ஏற்படும்.

நிரந்த வைப்பு நிதிகள் மற்றும் அஞ்சலக வைப்பு நிதிகளில் இருந்து பெறுகின்ற 40 ஆயிரம் ரூபாய் வரையான வட்டிக்கு டிடிஎஸ் (TDS) விலக்கு அளிக்கப்படுகிறது. இதுவரை ரூ. 10 ஆயிரத்திற்குதான் டிடிஎஸ் விலக்கு அளிக்கப்பட்டு வந்தது.

வீட்டு வாடகை டிடிஎஸ் விலக்கு ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

2030ம் ஆண்டு இலக்கு

 • டிஜிட்டல் இந்தியா
 • அடுத்த தலைமுறை உள்கட்டுமான வசதிகள்
 • மாசுபாடுகளை குறைக்க மின்சாரத்தால் இயங்குகிற வாகனங்கள்
 • பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுத்தமான ஆறுகள்
 • கடலோர பகுதிகளை மேம்படுத்துவது, நீல பொருளாதாரத்தை செயல்படுத்துதல்
 • இந்திய விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்புதல்
 • உணவில் தன்னிறைவு அடைந்த நாடாக மாறுதல், உணவை ஏற்றுமதி செய்தல் மற்றும் இயற்கை விவசாயம்
 • நோய் இல்லாத சுகாதார பராமரிப்பு, மற்றும் ஒருங்கிணைத்த நலவாழ்வு அமைப்பு கொண்ட சுகாதார மிக்க இந்தியா
 • அதிகபட்ச ஆட்சி செயல்திறன்

ஒருங்கிணைக்கப்படாத தொழில் பிரிவினருக்கு புதிய ஓய்வூதிய திட்டம்

ஒருங்கிணைக்கப்படாத தொழில்துறையில் புதிய ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

60 வயதில் ஓய்வு பெற்ற பின்னர், தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 3000 வழங்கப்படும். இதனால் 10 கோடி தொழிலாளர்கள் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தொழிலாளரின் வயதுக்கு தக்கப்படி ஒவ்வொருவருக்கும் ரூ. 50 முதல் ரூ. 100 வரை அரசு வழங்கவுள்ளது.

படத்தின் காப்புரிமை TWITTER @FINMININDIA

நெடுஞ்சாலை வசதி

ஒரு நாளைக்கு 27 ஆயிரம் கிலோ மீட்டர் நெஞ்சாலைகள் அமைத்து, சாலை வசதி கட்டுமானத்தில் முன்னோடியாக இந்தியா விளங்கி வருகிறது.

உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து வட கிழக்கு மாநிலங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

ரயில்வே துறை ஒதுக்கீடு

ரயில்வே துறைக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த துறையில் முதலீடும் அதிகரித்துள்ளது.

விபத்துக்களை குறைப்பதில் இந்த ஆண்டு ரயில்வே துறை வெற்றி கண்டுள்ளது.

அகல ரயில்வே பாதைகளில் ஆளில்லா ரயில்வே கேட்டுகள் ஒழிக்கப்பட்டுள்ளன.

மருத்துவ துறை

50 கோடி மக்களுக்கு மருத்துவ காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

22 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 14 தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியில் நிறுவப்பட்டவை. 22வது எய்ம்ஸ் மருத்துவமனை ஹரியானாவில் அமைகிறது.

இலவச எரிவாயு திட்டம்

“உஜ்வாலா” யோஜனாவின் கீழ் ஓராண்டுக்குள் கிராம புறங்களில் 8 கோடி எரிவாயு இணைப்புகள் இலவசமாக வழங்கப்படும்.

சோலார் திறன் கடந்த ஐந்தாண்டுகளில் 10 மடங்கு அதிகரித்துள்ளது. வட கிழக்கு பகுதி மக்கள் உள்கட்டுமான வசதிகளில் வளாச்சி கண்டுள்ளனர்.

பியூஷ் கோயல் பட்ஜெட் தாக்கல்

இன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் இடைக்கால பட்ஜெட்டை இடைக்கால நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

நிதியமைச்சர் அருண் ஜெட்லி மருத்துவ சிகிச்சை பெற்று வருவதால், அவருக்கு பதிலாக பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால், நாட்டின் வரி வருவாயை பாதிக்கும் திட்டங்கள் இல்லாமல், சில சலுகை திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

மத்திய அரசின் மீது அதிருப்தி கொண்டுள்ள விவசாயிகள், வேலைவாய்ப்புகள் ஏற்படும் என்ற நம்பிக்கையில் வாக்களித்த இளைஞர்களை கவருவதற்கு இந்த இடைக்கால பட்ஜெட்டை மத்திய அரசு பயன்படுத்தி கொள்ளும் என்று தெரிகிறது,

இந்நிலையில், இந்த பட்ஜெட்டில் சர்ச்சைகள் இல்லாத மசோதாக்களை விவாதிக்க வேண்டும் என்றும், தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்க வேண்டும் என்றும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்