"பட்ஜெட் நிதிப் பற்றாக்குறை மறைமுகமாக அதிகரிப்பு: ரிசர்வ் வங்கிக்கு அழுத்தம் அதிகரிக்கும்"

மோதி படத்தின் காப்புரிமை Getty Images

2019-20 ஆண்டுக்கான இந்திய மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்துள்ளார் மத்திய நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல்.

அவர் தமது பட்ஜெட் உரையில் 2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் பணம் தரும் திட்டம், திரட்டப்படாத தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பெரிய திட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.

பட்ஜெட்டுக்கு வெளியே பரிவர்த்தனைகள்

இந்நிலையில், இந்த பட்ஜெட் குறித்து சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைத் தலைவர் பேராசிரியர் கே.ஜோதி சிவஞானம் அவர்களிடம் பிபிசி தமிழ் சார்பில் இந்த பட்ஜெட் குறித்து கருத்து கேட்டோம்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நிதியமைச்சர் பியூஷ் கோயல்.

"வழக்கமாக இடைக்கால பட்ஜெட்டில் பெரிய கொள்கை அறிவிப்புகள் வெளியாகாது. இந்த பட்ஜெட்டில் கவலைக்குரிய ஒரு விஷயம் என்னவென்றால், வரவு செலவு பரிவர்த்தனைகள், மிகப்பெரிய அளவில் பட்ஜெட்டுக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளன. முன்பெல்லாம் இப்படிப்பட்ட பட்ஜெட்டுக்கு வெளியே சிறிய அளவில் பரிவர்த்தனைகள் நடக்கும். இப்போதுதான் பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் பட்ஜெட்டுக்கு வெளியே கொண்டுசெல்லப்பட்டுள்ளது," என்று கூறினார் அவர்.

காட்டப்படுவதைவிட அதிக நிதிப்பற்றாக்குறை

நடப்பு நிதியாண்டுக்கான நிதிப்பற்றாக்குறை கடந்த பட்ஜெட்டில் 3.3 சதவீதமாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி 3.4 சதவீதமாகும் என்று தற்போதைய பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய பேராசிரியர் ஜோதி சிவஞானம், "செலுத்தவேண்டிய தொகைகள், செலவினங்கள் போன்றவை அடுத்த நிதியாண்டுக்கு தள்ளிப்போடப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, இந்த நிதியாண்டில் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு தரவேண்டிய மானியத் தொகை, மாநில அரசுகளுக்கு 14-வது நிதிக்குழு பரிந்துரையின்படி வரியில் தரவேண்டிய பங்கீடு ஆகியவற்றை அடுத்த நிதியாண்டுக்கு ஒத்திப்போடப்பட்டுள்ளது. இவற்றை சேர்த்தால் உண்மையில் இந்த நிதியாண்டின் நிதிப்பற்றாக்குறை 4.5 சதவீதம் அல்லது அதற்கு மேல் செல்லும்" என்றார்.

அதைப்போல ரயில்வே பட்ஜெட் கடந்த ஆண்டு முதல் தேசிய பட்ஜெட்டோடு இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ரயில்வே பட்ஜெட்டின் கணக்குகள் தற்போது பட்ஜெட்டின் வரவு செலவுத் திட்டத்தில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில்வே பட்ஜெட்டின் பற்றாக்குறையும் பட்ஜெட்டுக்கு வெளியில் கொண்டு செல்லப்பட்டுள்ளது, என்று மேலும் கூறினார் அவர்.

படத்தின் காப்புரிமை K.Jothi Sivagnanam
Image caption பேராசிரியர் கே.ஜோதி சிவஞானம்

நிதிப்பற்றாக்குறையை கட்டுக்குள் வைப்பதற்கான தேவையை வலியுறுத்திப் பேசிய ஜோதி சிவஞானம், "பட்ஜெட்டின் ஆரோக்கியம், நிதிப்பற்றாக்குறை எந்த அளவுக்கு கட்டுக்குள் உள்ளது என்பதன் மூலம்தான் மதிப்பிடப்படுகிறது. ஓர் அரசு தமது அரசின் செலவினங்களை முடிவு செய்யலாம். ஆனால், தமது நிதி நிலையை அது பொறுப்புணர்வோடு வைத்துக்கொள்வது அவசியம்.

இதை உணர்ந்துதான் நிதிப் பற்றாக்குறை 3 சதவீத அளவைத் தாண்டக்கூடாது என்று 2003ல் 'நிதிப் பொறுப்புணர்வு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டம்' (FISCAL RESPONSIBILITY AND BUDGET MANAGEMENT ACT, 2003) என்ற பெயரில் சட்டமே நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின்படி வருவாய்ப் பற்றாக்குறை என்பது பூஜ்ஜியமாக மட்டுமே இருக்க வேண்டும்" என்றார்.

பாதிப்பு என்ன?

நிதிப்பற்றாக்குறை அதிகரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி குறிப்பிட்ட அவர், "இந்த சட்டத்தை மீறும் வகையில் நிதிப் பற்றாக்குறையை 4 சதவீதம், அதற்குமேல் என்று கொண்டு செல்லும்போது ரிசர்வ் வங்கி மீது அழுத்தம் அதிகரிக்கும். ரூ.7 லட்சம் கோடி அளவுக்கு பணத்தை பொருளாதார அமைப்புக்குள் செலுத்தும்போது அது பணவீக்கத்தை அதிகரிக்கும்" என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்