'இது தேர்தலுக்கான வான வேடிக்கை' - இடைக்கால பட்ஜெட் குறித்து ப. சிதம்பரம்

சிதம்பரம் படத்தின் காப்புரிமை Getty Images

இன்று (வெள்ளிக்கிழமை) 2019-20 ஆண்டுக்கான மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார்.

ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வரி ஏதும் செலுத்த தேவையில்லை எனபது உள்ளிட்ட பல அறிவிப்புகள் இந்த இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்தன.

இந்த இடைக்கால பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரம் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் இடைக்கால பட்ஜெட் என்று கூறமுடியாது. இது ஒரு முழு ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கையை போல தயாரித்து அறிவித்துள்ளார்கள்'' என்றார்.

''இது அரசியல் சாசனத்திற்கு முரணானது மட்டுமல்ல, மரபு மற்றும் சம்பிரதாயத்துக்கு மிக மிக முரணானது'' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

''இந்திய வருமானவரி சட்டத்தை இடைக்கால பட்ஜெட்டில் திருத்தக்கூடாது. அடுத்து வரும் அரசு நடுத்தர வர்க்க மக்களுக்கோ அல்லது மற்ற பிரிவினருக்கோ வேறு வகையில் சலுகை அளிக்க நினைத்தால் இன்று இவர்கள் செய்யும் திருத்தம், அடுத்து வரும் அரசை முடக்கும். அவர்களின் கைகளை கட்டிப்போடும்'' என்று சிதம்பரம் தெரிவித்தார்.

''இது தேர்தலுக்கு தயாரிக்கப்பட்ட அறிக்கை என்று மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இது தேர்தலுக்கான வான வேடிக்கை என்று மக்களுக்கு தெரியும்'' என்றார்.

படத்தின் காப்புரிமை PRAKASH SINGH

'இப்போது அறிவித்துள்ளவற்றை 5 ஆண்டுகளாக ஏன் செய்யவில்லை. 5 ஆண்டுகளாக இல்லாத ஞானோதயம் இப்போதுதான் பிறந்துள்ளதா?'' என்றும் ப. சிதம்பரம் வினா எழுப்பினார்.

இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி உச்ச வரம்பை அதிகரிக்காமல், ரிபேட் எனப்படும் வரி தள்ளுபடியை அதிகரித்துள்ளது குறித்து கேட்டதற்கு, ''அது அவசியமல்ல, ரிபேட்டை அதிகரிக்கலாம். ஏற்கனவே 2500 ரூபாய் இருந்த ரிபேட் தற்போது 12,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ரிபேட் மூலமாகவும் வரி சலுகை அறிவிக்கலாம். அதேபோல் வருமான வரி உச்ச வரம்பை திருத்தி அமைத்தும் சலுகை அறிவிக்கலாம்'' என்றார்.

2014 இடைக்கால பட்ஜெட்டும் இது போன்றே தாக்கல் செய்யப்பட்டது, சலுகைகள் அளிக்கப்பட்டது என்று சில பாஜக தலைவர்கள் கூறுவது குறித்து கேட்டதற்கு '' அவர்கள் 2014 இடைக்கால பட்ஜெட்டை முழுமையாக படித்துவிட்டு பேச வேண்டும்'' என்று கூறினார்.

''2014 இடைக்கால பட்ஜெட்டில் மோட்டார் வாகனங்களுக்கான கலால் வரியை குறைத்தபோது, இந்த கலால் வரி குறைப்பு நான்கு மாதங்களுக்கு மட்டுமே செல்லும். அதற்கு பிறகு அடுத்து வரும் அரசு இது தொடருமா இல்லையா என்று முடிவெடுக்கும் என்று கூறியே அத்னை அறிவித்தேன். இவர்களை போல வருமான வரி சட்டத்தை நிரந்தரமாக திருத்தவில்லை'' என்று சிதம்பரம் பதிலளித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :