மோதியின் நம்பிக்கை தரும் கதையை மீண்டும் ஏற்குமா இந்தியா

மோதி படத்தின் காப்புரிமை Getty Images

பிரதமர் மோதி அரசாங்கத்தின் ஆறாவது பட்ஜெட், இடைக்கால பட்ஜெட்டாக, தேர்தல் மூலம் அடுத்த அரசு தேர்ந்தெடுக்கப்படுவது வரையிலான காலத்துக்கு செலவு திட்டங்களை அமைத்துத் தருவதாக இருக்கவேண்டியது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இந்தியாவில் பொதுத் தேர்தல் நடக்கவிருக்கிறது. மே இறுதியில் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோதி நிகழ்காலத்தின் அரசியல் உரையாடலை தன் கட்டுக்குள் வைத்துக் கொள்ள விரும்புவதோடு, அவரது அரசாங்கம் இந்த பொன்னான வாய்ப்பை நழுவ விடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்த இடைக்கால பட்ஜெட்டில் வந்திருக்கக்கூடிய பெரிய அறிவிப்பு, இரண்டு ஹெக்டேருக்கு குறைவாக இருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 வழங்கும் புதிய திட்டம்.

இத்திட்டம் 120 மில்லியன் சிறிய மற்றும் நடுத்தர விவசாய குடும்பங்களுக்கு பயனளிக்கும் என்று அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஒரு இந்திய குடும்பத்தில் சராசரியாக 5 நபர்கள் என்றிருக்க, இத்திட்டம் 600 மில்லியன் தனிநபர்களுக்கு நன்மை பயக்கும், குறைந்தபட்சம் கருத்தளவில். இது பெருமளவிலான வாக்காளர் எண்ணிக்கை. தோராயமாக, இந்தியாவின் மக்கள் தொகையில் பாதிக்கும் கொஞ்சம் குறைவு.

அப்படி பார்த்தால், இத்திட்டம் அமலுக்கு வரும்போது, உலகின் மிகப்பெரிய வருவாய் ஆதரவு திட்டமாக இது இருக்கும்.

இந்தாண்டு இத்திட்டத்திற்கு 200 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு, இது 750 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் இடையே நிலவிவரும் துன்பத்தை சமாளிக்கலாம் என்று அரசாங்கம் நம்புகிறது. ஆனால், விவசாயிகள் துன்பப்படுகிறார்கள் என்பதை அரசு ஒப்புக் கொள்ளாது.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த வாரத் தொடக்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தாம் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டத்தை கொண்டு வருவதாக முன்மொழிந்திருந்தார்.

ஆனால், இத்திட்டத்தை பொறுத்தவரை மற்றொரு குழப்பமும் நிலவுகிறது. இத்திட்டத்திற்கு யாரெல்லாம் தகுதியுடையவர்கள் என்பதே அந்தக் குழப்பம். நிலவுடமை ஆவணங்கள், இந்தியா நெடுகிலும் பல பகுதிகளில் நம்பகமான முறையில் இல்லை. இரண்டாவது கேள்வி, இதற்கான பணம் எங்கிருந்து வரும் என்பது. பொருளாதாரத்தை பொறுத்தவரை, இலவச சாப்பாடு என்ற ஒன்று கிடையாது. அதற்கு யாரோ வரி என்ற பெயரில் பணம் செலுத்துகிறார்கள். அந்த யாரோ என்பது, இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினர்.

இதெற்கெல்லாம் மேலாக, இந்தியாவின் பெரும் முறைசாரா துறையில் வேலைபார்ப்பவர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தையும் அமைச்சர் பியூஷ் கோயல் முன்மொழிந்துள்ளார்.

ஒழுங்குபடுத்தப்படாத பிரிவில் வேலை பார்க்கும் 15 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு, 60 வயதிற்கு மேல் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் என்று கூறப்பட்டுள்ளது. இத்திட்டம் பங்களிப்பு சார்ந்தது மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத பிரிவில் 18 வயதில் ஒருவர் வேலைக்கு சேருகிறார் என்றால், அவர்கள் மாதம் 55 ரூபாய் பங்களிப்பு அளிக்க வேண்டும். இதற்கு சமமாக அரசும் பங்களிப்பு அளிக்கும்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த திட்டத்தை அமல்படுத்துவதில், குறிப்பிடத்தகுந்த பிரச்சனைகள் இருக்கின்றன. பெருவாரியான இத்துறை தொழிலாளர்கள் கையில் பணம் பெற்றே ஊதியம் பெறுகிறார்கள். மேலும், அவர்களில் வருமானம் பெரிதும் மாறுபடும். இப்படி இருக்க, யார் இத்திட்டத்திற்கு தகுதி பெற்றவர்கள் என்று எப்படி கணக்கிட முடியும்? அரசியல் ரீதியாக இது நல்ல திட்டமாக இருந்தாலும் கூட, பொருளாதார ரீதியாக இதனை அமல்படுத்துவது கடினம்.

இடைக்கால பட்ஜெட் என்ற வழக்கமான பாரம்பரியத்தை மீறி, வருமானவரி செலுத்தும் நடுத்தர வர்க்கத்திற்கு பல விஷயங்களை வழங்கியிருக்கிறார் நிதியமைச்சர். ஆண்டு வருமானம், 5 லட்சம் ரூபாய்க்கு கீழ் இருப்பவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை என்று அறிவித்திருக்கிறார். தற்போது இருக்கும் வரம்பு 2.5 லட்சம்.

ஒரு நல்ல விஷயம், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்த 24 மணி நேரத்திற்குள் பரிசீலிக்கப்பட்டு, சேரவேண்டிய தொகையை உடனடியாக திரும்பப் பெறும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.

எனினும், வரும் மே மாத இறுதியில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்று உண்மையான பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, இந்த மாற்றங்களை எல்லாம் கையெழுத்திட்டு ஒப்புக்கொள்ள வேண்டும்.

தனது உரை முழுதும், பிரதமர் மோதிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டே இருந்தார் அமைச்சர் பியூஷ் கோயல். சொல்லப்போனால், ஆளும் பாஜகவின் உறுப்பினர்கள் எல்லாம், "மோதி, மோதி, மோதி…" என்று மோதி நாமத்தையே பாடிக் கொண்டிருந்தார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images

தனது கட்சியின் சாதனைகளை எல்லாம் அடுக்கிக் கொண்டே போன அமைச்சர் கோயல், விஷன் 2030 என்ற என்ற 10 முக்கிய விஷயங்களையும் எடுத்து வைத்தார். விண்வெளியில் இந்திய விண்வெளி வீரர், இந்தியாவில் தன்னிறைவான உணவு, இந்தியாவை மாசில்லாத நாடாக்குவது, பொருளாதாரத்தின் ஒவ்வோரு பிரிவையும் டிஜிட்டல் ஆக்குவது, அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீர் போன்ற யோசனைகள் இதில் அடங்கும்.

இந்தியாவில் வேலையின்மை அதிகரித்திருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியாகியிருந்தது.

ஆனால், இந்தியாவில் போதிய வேலைவாய்ப்புகள் இல்லை என்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்ளவில்லை. பட்ஜெட்டின் போது உரையாற்றிய அமைச்சர் கோயலும், நாட்டில் போதிய வேலைவாய்ப்பு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த முயற்சித்தார்.

ஆனால், ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளாமல், அதனை எப்படி தீர்ப்பது?

2014ஆம் ஆண்டை போலவே, இந்த உரையின் மூலம், மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த மோதி அரசாங்கம் முயல்கிறது. இந்திய மக்கள் இதனை மீண்டும் நம்புவார்களா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

(இந்த கட்டுரை எழுதியுள்ள விவேக் கவுல், ஒரு பொருளாதார நிபுணர் மற்றும் Easy Money Triology என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆவார்.)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :