அறிவிக்கப்பட்டது பட்ஜெட்டா? பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையா?

பாஜக படத்தின் காப்புரிமை Hindustan Times

ஆண்டு வருமானம் 5 லட்சம் வரை உள்ளவர்கள் இனி வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்று இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள் என்று பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

அதற்கு நேயர்கள் அளித்த நூற்றுக்கணக்கான கருத்துகளில் சிலவற்றை தொகுத்து வழங்கியுள்ளோம்.

"தேர்தல் கால சிறப்பு தள்ளுபடிகளை தன்னகத்தே கொண்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தவறாமல் இடம்பெறும் வரிச்சலுகையே இந்தத் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பை உயர்த்துதல் ஆகும். மற்றபடி இதனால் நலிந்த நடுத்தர வர்க்கத்தினர் பயனடைவதை காட்டிலும் தேர்தலில் வெல்வதற்கு வகுக்கும் அரசியல் சதுரங்க விளையாட்டில் வெல்வோர் அடையும் பயனே அதிகமாக இருக்கும் என்பது அரசியல் அறிந்தோர்க்கே வெளிச்சம்" என்று பதிவிட்டிருக்கிறார் பேஸ்புக் நேயர் சக்தி சரவணன்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள யஷீர் அஹமத், தேர்தல் வருவதால் மக்களை ஏமாற்ற்ற வேறு வழியின்றி இதுபோன்ற அறிவிப்புகள் வருவது சகஜம் தான். எதிர்பார்த்த ஒன்று தான். கடந்த நான்கரை ஆண்டுகள் மக்களுக்கென்று ஒன்றும் செய்யவில்லை.. இப்போது கபட நாடகம் ஆடுகிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது என்றும் வளர்ச்சி நாயகன் மோதி தலைமையில் பாஜக மீண்டும் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் கூறியுள்ளார் எம்.குமார்.

உண்மையில் நடுத்தர மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் மோதி அவர்கள் 2015 பட்ஜெட்டிலேயே இதனை அறிவித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் இந்த நிதி ஆண்டாவது இதை அமலுக்கு கொண்டு வந்து இருக்கலாம் என்றுள்ளார் அஹமத் கணி.

"தேர்தல் நாள் நெருங்கும் ஒரே காரணத்திற்காக, மக்கள் எதிர் பார்க்கும் திட்டங்களை கொண்டுவந்து ஆட்சியை தக்க வைத்து கொள்ள நினைக்கிறார்கள்" என்று ராஜேஷ்வரன் பதிவிட்டுள்ளார்.

2.5 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்த்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், 5 லட்சம் என்பது மிகப்பெரிய தொகை. இதன் மூலமாக, வருமான வரி செலுத்தும் சில மக்கள் பயனடைந்தாலும், இதனால் ஏற்படும் இழப்பு, ஏழை மக்கள் அனைவரையும் பாதிக்கும் என்கிறார் இன்ஸ்டாகிராம் நேயர் சதீஷ்.

"வரவேற்கிறேன்.. ஆனால், தாமதமான அறிவிப்பு" என்று பதிவிட்டுள்ளார் இன்ஸ்டாகிராம் நேயர் இளங்கோ.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :