தனது சொந்தங்களைத் தேடும் யானை ‘சின்னத்தம்பி’

தனது செந்தங்களை தேடும் யானை 'சின்னத்தம்பி'

கோவையில் கிருஷ்ணபுரம் பகுதியில் இருக்கும் சின்னத்தம்பி என்ற யானை, அதனுடைய யானை கூட்டத்தோடு சென்று சேர பழைய இடத்திற்கு செல்ல முயற்சித்து ஊர்களுக்குள் சுற்றி வருகிறது.

கோவை ஆனைகட்டி, மாங்கரை, சின்ன தடாகம், பெரிய தடாகம், பன்னிமடை, ஆகிய பகுதிகளில் காட்டு யானை ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தியதாக விவசாய சங்கத்தினர் புகார் தெரிவித்து போராட்டங்கள் நடத்திவந்தனர்.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் விநாயகன் என்ற ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் பிடித்து முதுமலை புலிகள் காப்பகத்தில் விட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து கடந்த 25ஆம் தேதி பெரிய தடாகம் பகுதியில் சின்னத்தம்பி யானைக்கு மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.

அப்போது லாரியில் ஏற்றும்போது சின்னத்தம்பியின் தந்தங்கள் உடைந்தது, மேலும் கும்கி யானைகள் குத்தியதில் அதன் உடலில் காயங்கள் ஏற்பட்டன.

இதனையடுத்து லாரி மூலம் டாப்சிலிப் புலிகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வரகளியாறு வனப்பகுதியில் நள்ளிரவில் விடப்பட்டது.

இந்த சின்னத்தம்பி யானையை தேடி ஊருக்குள் தாய் யானை மற்றும் குட்டியானை சுற்றி வரும் நிலையில், வனப்பகுதியில் விடப்பட்ட சின்னத்தம்பி மீண்டும் அதன் பழைய இடத்திற்கு செல்ல முயற்சி செய்து வருகிறது.

அதன் காரணமாக டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த சின்னத்தம்பி கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த அங்கலக்குறிச்சி கிராம பகுதிக்குள் புகுந்தது.

இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சின்னத்தம்பி யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டனர். ஆனால் வனத்துறையினரின் முயற்சி பலனளிக்கவில்லை.

பழைய இடத்திற்கே செல்ல முயற்சிக்கும் யானை சின்னத்தம்பியை சுற்றி பொதுமக்களும், வனத்துறையினரும் சூழ்ந்து இருப்பதால் ஊருக்குள்ளேயே சுற்றி சுற்றி வருகிறது சின்னத்தம்பி.

பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப் வனப்பகுதியில விடப்பட்ட சின்னத்தம்பி கடந்த 3 நாட்களில் 100 கிலோ மீட்டருக்கு மேலாக கடந்து வந்துள்ளது.

வரகளியாறு, அங்கலக்குறிச்சி, கோட்டூர், உடுமலைப்பேட்டை தீபாலபட்டி, அம்மாபட்டி, வழியாக வந்து தற்போது கிருஷ்ணபுரம் பகுதியில் நிற்கிறது.

ஏற்கனவே சமூக வலைதளங்களில் சின்னத் தம்பியை மீண்டும் கோவை பெரிய தடாகம் பகுதியில் விடவேண்டும் என கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில் வனப்பகுதியில் விடப்பட்ட சின்னத்தம்பி மீண்டும் ஊருக்குள் புகுந்து உள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :