ரஃபேல் விவகாரம்: ''ரூ. 30,000 கோடியை திருடி அம்பானியிடம் நரேந்திர மோதி கொடுத்துவிட்டார்'' - ராகுல் காந்தி

காங்கிரஸ் படத்தின் காப்புரிமை TWITTER

"பிரதமர் மோதி உங்களின் 30 ஆயிரம் கோடி ரூபாயை திருடி, அவரது நண்பர் அனில் அம்பானியிடம் வழங்கியுள்ளார்" என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தி இந்து நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான என்.ராம், ரஃபேல் விவகாரம் தொடர்பாக அந்நாளிதழில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட அதிகாரப்பூர்வ குழுவின் அதிகாரத்தை தாழ்த்தும் வகையில் பிரதமர் அலுவலகமும் பேச்சுவார்த்தை நடத்தியதற்கான ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக நவம்பர் 24, 2015ஆம் ஆண்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு, பாதுகாப்பு துறைச் செயலாளர் ஜி.மோகன் குமார் கடிதம் எழுதியுள்ளார்.

ரஃபேல் விவகாரத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் குழு நடத்தும் பேச்சுவார்த்தைக்கு இணையாக இன்னொரு பேச்சுவார்த்தையை பிரதமர் அலுவலகமும் நடத்தியதாக அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை TWITTER / THE HINDU

இந்த கட்டுரை வெளியானதை அடுத்து, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார்.

"ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோதி நேரடியாக ஈடுபட்டுள்ளார் என்று ஒரு வருடத்திற்கும் மேலாக சொல்லி வருகிறோம். தற்போது பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கடிதமே அதனை உறுதிப்படுத்தியுள்ளது" என்று கூறினார்.

"நான் இந்நாட்டு இளைஞர்களிடம் பேச விரும்புகிறேன். மேலும் ஆயுதப்படையில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருடனும் பேச விரும்புகிறேன். இது உங்கள் எதிர்காலத்தை பற்றியது. நீங்கள்தான் இந்த நாட்டை பாதுகாக்கிறீர்கள். பிரான்ஸ் நிறுவனத்திடம் பிரதமரே பேச்சுவார்த்தை நடத்தியது அம்பலமாகி உள்ளது" என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற ரஃபேல் வழக்கு விசாரணையின் போது, அரசு நீதிமன்றத்தில் பொய் சொல்லி இருக்கிறது இதன் மூலம் தெரிய வருவதாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.

ரஃபேல் ஒப்பந்தத்திற்காக பிரதமர் மோதி பின்கதவு வழியாக பிரெஞ்சு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது தேசிய அவமானம் என்றும், அவரது நண்பர்கள் பலன் பெற வேண்டும் என்பதற்காக, தேசிய பாதுகாப்பை அடமானம் வைத்துள்ளதாக குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி ட்வீட் செய்துள்ளார்.

ஒப்பந்தத்தின் பின்னணி

முதலில் 126 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு 2007ம் ஆண்டு இந்த பேச்சுவார்த்தை ஆரம்பித்தது.

2011ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இருந்தபோது, டஸ்ஸோ ஏவியேசன் (டஸ்ஸோ பிரான்ஸ் நிறுவனம்) மிகவும் குறைவான தொகையில் விண்ணப்பம் செய்திருந்ததால் அவர்களிடம் வேலையை ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டது.

ஆனால், அந்த பேச்சுவார்த்தை முழுமை அடையவில்லை. ஹெச்.ஏ.எல் எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் லிமிடெட் நிறுவனம் 108 போர் விமானங்களை இந்தியாவின் பெங்களூருவில் தயாரிக்கும். 18 போர் விமானங்கள் பறக்கக்கூடிய அளவில் பிரான்சில் இருந்து நேரடியாக வழங்கப்படும் என்ற நிலையில் பேச்சுவார்த்தை தொடர்ந்து வந்தது. அதுவொரு வணிக ஒப்பந்தம் என்று கூறப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :