காதல் தோல்வியின் காயங்கள்: மீண்டெழுவது எப்படி?

காதல் தோல்வியின் காயங்கள் படத்தின் காப்புரிமை Spencer Platt

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரே மதம் 'காதல்'. காதல் பல போர்களை தோற்றுவித்துள்ளது. பல போர்களை முடித்தும் வைத்துள்ளது. வரலாறும், புராணங்களும், நம் சினிமாக்களும் காதலை கொண்டாடாத விதமில்லை.

சொல்லப்போனால் திகட்ட திகட்ட இந்த உலகம் காதலை கொண்டாடியிருக்கிறது. இன்னும் கொண்டாடிக் கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் காதலை புனிதப்படுத்தி, மிகைப்படுத்திவிடவும் நாம் தவறவில்லை.

யார் பிறந்த தினமும், இறந்த தினமும் மறந்தாலும், உலகில் யாருக்கும் காதலர் தினம் மறந்து போவதில்லை.

அப்படி கொண்டாடப்படும் காதல், தோல்வி அடைந்தால், அந்த நபரின் நிலை என்னவாகும். நிச்சயம் உங்கள் நண்பரோ, தோழியோ காதல் தோல்வியால் புலம்பி அழுது கேட்டிருப்பீர்கள். அல்லது நீங்களேகூட ஒரு காதல் தோல்வியை சந்தித்து இருக்கலாம். அதை இப்போது நினைத்தாலும், மனதில் ஏதோ ஒரு ஓரத்தில் நீங்கள் பூட்டி வைத்திருக்கும் வலி சற்று வெளிவந்து செல்லலாம்.

படத்தின் காப்புரிமை Horacio Villalobos - Corbis

காதல் துளிர்த்து, ஒன்றாக பீச், பார்க்க என்று சுற்றித்திரிந்து, சில முத்தங்கள் அளித்து, ஒன்றாக லாங் டிராவல் சென்று, உங்கள் கூடவே உங்கள் சுகதுக்கங்களை பகிர்ந்து கொண்ட நபர் இன்று இல்லையென்றால், அதிலிருந்து வெளிவருவது சுலபமான காரியமாக இருக்க முடியாது.

அப்படி காதல் தோல்யில் இருந்த மீண்டுவர முயற்சிக்கிறீர்கள் என்றால், இக்கட்டுரை உங்களுக்கானது.

மனதை உங்களுக்கு பிடித்தமான விஷயத்தில் செலுத்துங்கள்

இது சொல்வது சுலபம்தான். ஆனால் செய்வது அவ்வளவு எளிதானதல்ல. எந்த ஒரு விஷயம் நம்மிடம் இல்லையோ அதைத் தேடிதான் நம் மனது செல்லும். இது மனித இயல்பு என்றாலும் மனதை நம் கட்டுக்குள் வைக்க வேண்டியது மிகவும் அவசியம்.

தொலைக்காட்சி பார்ப்பது, புத்தகங்கள் படிப்பது, வெளியே செல்வது என்று உடலுக்கும் மனதுக்கும் ஏதேனும் ஒரு வேலையை கொடுத்துக் கொண்டே இருங்கள். உங்களுக்கு பிடித்தமான விஷயங்களை கண்டறிந்து அதில் கவனம் செலுத்துங்கள்.

ஒரு காகிதத்தை எடுத்து உங்களுக்கு எது பிடிக்கும், பிடிக்காது என்று பட்டியலிடுங்கள். அப்படி எழுதும்போது உங்களுக்குள் ஒரு தெளிவு பிறக்கும். நீங்கள் எதை செய்தால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்பதை உங்களால் உணர முடியும்.

நமக்கு பிடித்தமான நபர் அல்லது ஒரு விஷயத்தில் இருந்து விலக வேண்டும் என்றால் நீங்கள் எடுக்க வேண்டிய முதல் முயற்சி, கவனத்தை அதிலிருந்து திசை திருப்புவது.

தனிமை வேண்டாம்

படத்தின் காப்புரிமை NurPhoto

காதல் முறிந்து சில மாதங்கள் தனிமையை தவிர்ப்பது நல்லது. தனிமையில் பல எதிர்மறையான எண்ணங்கள் வரலாம்.

முடிந்தவரை உங்கள் நண்பர்களுடனோ, உறவினர்களுடனோ இருங்கள். அல்லது உங்களுக்கு பிடித்த நண்பர்/தோழிக்கு அருகே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி நண்பர்களை சந்திக்கும்போது, முக்கியமாக உங்கள் முன்னாள் காதலன்/காதலியை பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும்.

ஒரு விஷயத்தை பற்றிப் பேசிக் கொண்ட இருந்தால், அதிலிருந்து எப்படி வெளிவருவது?

பயணங்கள்

பயணம் பல பாடங்களை நமக்கு கற்றுக் கொடுப்பதோடு, மனதிற்கு ஒரு புத்துணர்ச்சியையும் அளிக்கிறது. காதல் தோல்வியின் வலியில் இருக்கும்போது, தனிமையாக அல்லாமல் நண்பர்களுடன் பயணம் செய்வது சிறந்தது.

புது இடங்களாலும் புதிய மனிதர்களாலும் உங்களுக்குள் நல்ல உணர்வை ஏற்படுத்த முடியும்.

புதிய பாதை

பழைய நினைவுகளில் இருந்து உங்களை வெளிகொண்டுவர, புதிய விஷயங்கள் எதையேனும் செய்ய தொடங்குங்கள். உதாரணமாக உடற்பயிற்சி செய்யத் தொடங்கலாம். உங்கள் மனதையும் உடலையும் ஒருநிலைப்படுத்த அது உதவும். ஒரு வாரம் செய்துவிட்டு அதிலிருந்து விலகாமல், அதனை சரியாக தொடர்ந்து செய்ய வேண்டும்.

சமையல், ஓவியங்கள் வரைவது, புதிய இசைக்கருவி கற்றுக் கொள்வது என ஏதேனும் இதுவரை உங்கள் வாழ்க்கையில் செய்திடாத விஷயத்தை செய்யத் தொடங்குங்கள்.

மது பழக்கம் வேண்டாம்

படத்தின் காப்புரிமை NurPhoto

காதல் தோல்வியை சந்தித்த அனைவருக்கும் ஒரு நண்பர்/தோழி இருப்பார். மது அருந்தி, வலியை சரிசெய்து கொள்ளுமாறு அறிவுரையும் வழங்குவார்.

காதல் தோல்வியில் இருந்து வெளிவர, குடிப்பழக்கத்தை கையில் எடுப்பது ஆரோக்கியமற்ற செயல்.

சமூக ஊடக நினைவுகள்

நவீன உலகில், தொழில்நுட்பம் நம்மை ஆளும் இந்த உலகில், நினைவுகளை அழிப்பது அவ்வளவு எளிதானதல்ல. எதையோ செய்து அவற்றை நம் மனதில் இருந்து அழித்தாலும், டிஜிட்டல் பதிவாகியுள்ள நினைவுகளை என்ன செய்வது?

உங்கள் முன்னாள் காதலன்/காதலியை சமூக ஊடகங்களில் ப்ளாக் செய்ய வேண்டுமா, அல்லது நட்பில் இருக்க வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

இதையெல்லாம் தாண்டி, நமக்கு நடப்பதை, அல்லது நடந்தவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் நினைத்தவாறு நடக்காமல் போனதையே எண்ணி கொண்டிருப்பதால் எந்த பலனும் இல்லை என்பது உங்களுக்கும் தெரியும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்