ரஃபேல் ஒப்பந்தம்: 'மத்திய அரசு குறைவான வெளிப்படைத் தன்மையுடனேயே இருந்துள்ளது'

  • மரிய மைக்கேல்
  • பிபிசி தமிழ்

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமைக்கப்பட்ட அதிகாரப்பூர்வ குழுவின் அதிகாரத்தை பலவீனப்படுத்தும் வகையில் பிரதமர் அலுவலகமும் வேறொரு பேச்சுவார்த்தை நடத்தியதற்கான ஆதாரங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

2015ஆம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு, அப்போதைய பாதுகாப்பு துறைச் செயலாளர் ஜி.மோகன் குமார் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

ரஃபேல் விவகாரத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் குழு நடத்திய பேச்சுவார்த்தைக்கு இணையாக இன்னொரு பேச்சுவார்த்தையை பிரதமர் அலுவலகமும் நடத்தியதாக அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தி ஹிந்து பத்திரிகையில், இது தொடர்பான கட்டுரை வெளிவந்த அன்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடத்திய செய்தியாளர் சந்திப்பில், ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோதி நேரடியாக ஈடுபட்டுள்ளதை பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கடிதமே உறுதிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.

"பிரதமர் நரேந்திர மோதி 30 ஆயிரம் கோடி ரூபாயை திருடி அவருடைய நண்பரான அனில் அம்பானியிடம் வழங்கியுள்ளார்," என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.

ரஃபேல் விவகாரத்தில் இந்த குற்றச்சாட்டு வைக்கப்படுவது பற்றி ஓய்வு பெற்ற துணை ஏர் மார்ஷல் கபில் காக் பிபிசியிடம் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

அவர் தெரிவித்த கருத்துகளை கீழே தொகுத்து வழங்குகிறோம்.

ரஃபேல் போர் விமான கொள்முதல் பிரச்சனை மத்திய அரசுக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய பெரும் பிரச்சனையாக இருந்து வருவதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த கொள்முதலில் விமானங்களுக்கு கொடுக்கப்படும் சில விலை அம்சங்கள், சில நடைமுறை அம்சங்கள், சில முறையான அமைப்பு சார்ந்த ஒழுங்குகள், தனியார் துறையில் குறிப்பிட்ட அரசுக்கு வலிமை சேர்க்கும் வகையில் ரஃபேல் விமானங்களைத் தயாரிக்கும் டஸ்ஸோ நிறுவனத்தைத் தவிர்த்துவிட்டு செய்தவை முறையற்ற நடைமுறைகளா? என்பவை அனைத்தும் ரஃபேல் போர் விமான கொள்முதலில் காணப்படும் மிக முக்கியமான பிரச்சனைகளும், விவாத பொருள்களுமாகும்.

இது தொடர்பாக எந்தவொரு கட்சியாக, தரப்பாக இருந்தாலும், அதனிடம் கிடைக்கின்ற தகவலை முக்கியமாக எடுத்துக்காட்டி, பிரச்சனையை மீண்டும் மீண்டும் விவாதிக்க செய்கிறார்கள். இதுதான் ஹிந்து ராமின் கட்டுரையில் வெளிவந்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் நாட்டின் இறையாண்மை உத்தரவாதம் (Sovereign Guarantee) வழங்குவதற்கு பதிலாக ஆறுதல் கடிதத்தை (Letter of comfort) இந்தியா ஏற்றது ஏன்? இந்த ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலகம் தலையிட்டது ஏன்?

என்.ராமின் முந்தைய கட்டுரையில் ஒவ்வொரு போர் விமானத்தின் விலை உயர்வு பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.

படக்குறிப்பு,

என்.ராம்

இவை எல்லாவற்றையும் இணைத்து பார்க்கும் வேளையில், இந்நேரம் தேர்தல் நெருக்கும் நேரம். இந்திய தேர்தல் இந்நாட்டின் ஜனநாயகத்தை செயல்படுத்தும் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

எனவே, மிக பெரிய, வலிமையான ஜனநாயக நாடாக இந்தியா புதிய வழிமுறைகளையும், பிரச்சனைகளையும், கருத்துகளையும் ஏற்றுக்கொள்வது நமது பார்வைகளை மேம்படுத்துகின்றன. இந்த மேம்பாடு தேர்தலில் பல்வேறான கட்சிகள் நடந்து கொள்வதில் வெளிப்படுகிறது.

இன்று மக்கள் ஒன்றை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதில்தான் எல்லாம் அடங்கியிருக்கிறது. அவர்கள் சான்றுகள் வைத்திருக்கிறார்களா? இல்லையா? அதெல்லாம் பரவாயில்லை. வாக்களிக்கின்றபோது, யாரும் சான்றோடு வாக்களிப்பதில்லை.

உங்களுடைய சிந்தனை திசை, பார்வைதான் தேர்தல் தளத்தில் உங்களுடைய முடிவை தீர்மானிக்கின்றது. ரஃபேல் பிரச்சனையில் மத்திய அரசு குறைவான வெளிப்படைத் தன்மையுடனே இருந்துள்ளது.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் அரசின் நடவடிக்கை விமர்சனம் செய்யப்படும் நிலையில்தான் உள்ளது. எனவே, இந்த ஒப்பந்தம் நிறைவேற்றிய முறை, இந்திய அரசின் ஏமாற்றம் அளிக்கக்கூடிய பகுதியாக இருக்கிறது.

இங்கு உண்மைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளனவா? ஏதாவது தவறு நடைபெற்றுள்ளதா? என்பதெல்லாம் நாம் முடிவு செய்வதற்கில்லை. இதை நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும்.

தாக்கல் செய்யப்பட்ட புகாருக்கு இந்திய உச்ச நீதிமன்றம் பாதி தகவல்களையே அளித்துள்ளது. இதுதொடர்பாகத்தான் ஹிந்து ராம் முழுமையான தகவல்கள் வழங்கப்படவில்லை என்கிறார்.

பாதுகாப்பு துறையின் எதிர்ப்பையும் கண்டுகொள்ளாமல், அந்த துறையில் இருக்கும் நடைமுறை விதியான 47இன்படி, தங்களின் வேலையே இல்லாத பேச்சுவார்த்தையை பிரதமர் அலுவலகம் செய்துள்ளது.

இவ்வாறு ஏன் செய்ய வேண்டும்? இதுவொரு பேரம் பேசுதல் மட்டுமே என்கிறது அரசு.

2016 ஏப்ரல் 13ம் தேதி இந்திய வெளியுறவு துறை செயலர் பாரிஸில் இருந்தார். ரஃபேல் விமான கொள்முதல் பேச்சுவார்த்தை அல்ல என்று அவர் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு 48 மணிநேரத்திற்கு முன்பாக அவ்வாறு சொல்லப்பட்டது. மேலும், அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் அங்கு சென்றிருக்கவில்லை. அவர் கோவாவில் இருந்தார்.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்பு எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

இந்த ஒப்பந்தத்தை வழக்கமாக பிரதமர் செய்வதில்லை. பாதுகாப்பு அமைச்சர் இந்த ஒப்பந்தம் செய்து கொள்வதில் ஒரு பகுதியாக இருந்திருக்க வேண்டும்.

இதுபோன்ற பல தகவல்களை தேர்தல் வரவுள்ள இந்த மாதங்களில் நாம் காண இருக்கின்றோம். வரவிருக்கும் தேர்தலில் இந்த பிரச்சனை மிகவும் விவாதிக்கப்படும் சர்ச்சையாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

பிரதமர் அலுவலகத்திற்கு குறைவான பங்கு

தேசிய பேச்சுவார்த்தை குழுவின் அதிகாரத்தை பிரதமர் அலுவலகம் பலவீனப்படுத்தியதா என்று கேட்டதற்கு, "பிரதமர் அலுவலகத்திற்கும் அரசியல் மட்டத்தில் அதிகாரம் உள்ளது. இதில் ஐயமில்லை. எந்தவொரு ஒப்பந்தமும் அரசியல் மட்டத்தில் அதிகரமுடைய ஒன்றுதான். சில முடிவுகள் அரசியல் மட்டத்தில்தான் எடுக்கப்படுகின்றன. அலுவலக மட்டத்தில் அல்ல," என்று அவர் கூறினார்.

பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கும்போது, நிச்சயமாக பிரதமர் அலுவலகம் தலையிடலாம். செயல்பாடுகளை கண்காணிக்கலாம். முடிவுகளை தெளிவுப்படுத்தி கொள்ளலாம்.

படக்குறிப்பு,

முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர்

ஆனால், பிரதமர் அவலுலகம் பேச்சுவார்த்தை தரப்பாக செயல்படக் கூடாது அல்லது பேச்சுவார்த்தைக்கு அவர்கள் குழு அமைக்கக்கூடாது.

இவை அனைத்துமே பாதுகாப்பு துறையின் நடைமுறையில் 2011 முதல் வந்துள்ள விதிமுறைகளில் ஏற்கெனவே உள்ளதுதான் இதற்கு காரணம்.

ஒவ்வோர் ஆண்டும் பாதுகாப்பு துறையின் நடைமுறை விதிகள் மீளாய்வு செய்யப்படுகின்றன. இவற்றை இணையதளத்தில் வாசிக்க முடியும். எனவே, பிரதமர் அலுவலகத்திற்கு மிக குறைவான பங்குதான் இதிலுள்ளது.

இதில் ஒன்றை தெளிவுப்படுத்த வேண்டும். நடைமுறைகளுக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளை விலை நிர்ணய குழு எப்போதுமே ஏற்றுக்கொள்ளாது.

ஜெனரல் ரெப்பின் தலைமையில் இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் பிரான்ஸ் அரசு, இதுவொரு அரசுக்கும் இன்னொரு அரசுக்கும் இடையிலான ஒப்பந்தம் என்று கூறியுள்ளது.

வெளிப்படையாக தெரிவிக்கப்படாதது என்னவெனில், இதுவொரு அரசுக்கும் இன்னொரு அரசுக்கும் இடையிலான ஒப்பந்தமாக இருந்தாலும், ஊடக தகவல்களின்படி வெளிநாட்டு நிறுவனம் அல்லாத தனியார் நிறுவனத்தையும் உள்ளடக்கியது என்பதுதான்.

எனவே, அரசுக்கும் இன்னொரு அரசுக்கும் என்ற நிலையில், பிரான்ஸ் அரசிடம் இருந்து நாட்டின் இறையாண்மை உத்தரவாதம் (sovereign guarantee) பெற வேண்டும் என்று விலை நிர்ணய குழு வலியுறுத்தியது.

சட்டப்படி சர்வதேச அளவில் நாட்டின் இறையாண்மை உத்தரவாதம்தான் வழக்கமாக ஏற்றுக்கொள்ளப்படும்.

ஆனால், இந்த ஒப்பந்தம் அரசியல் மட்டத்தில் அறிவிக்கப்பட்டதால், அரசியல் முடிவாக எடுத்துக்கொள்வதாக பிரான்ஸ் அறிவித்தது. பின்னர்தான் அலுவலக மட்டத்தில் கையெழுத்தானது

எனவே, அரசியல் முடிவாக ஏற்றுகொள்வதால் மட்டுமே இந்த நாட்டின் இறையாண்மை உத்தரவாதத்திற்கு பதிலாக கடன் உத்தரவாத கடிதத்தை வழங்குவதற்கான நிலையை உருவாக்கும் என்று கருதினர்.

படக்குறிப்பு,

அப்போதைய பிரான்ஸ் அதிபர் ஒலாந்த் உடன் மோதி

மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் ரஃபேல் விவகாரம் தொடர்பாக பொய் கூறிவிட்டது என்று குறிப்பிடுவதை எப்படி பார்க்கிறீாகள் என்று கேட்டபோது, "ஒரு குறிப்பிட்ட தரப்பு, அரசு பொய் சொல்லியது என்பது பற்றி நான் எந்த கருத்தையும் சொல்ல விரும்பவில்லை," என்று மார்ஷல் கபில் காக் கூறினார்.

"எனது கருத்து என்னவென்றால், உச்ச நீதிமன்றம், மக்கள் மற்றும் எதிர் கட்சியினருக்கு முழுமையான தகவல்களை வழங்காமல், மிகவும் தெரிவு செய்து, இந்த நடைமுறை பற்றிய விரிவாக இல்லாமல் குறைவான தகவல்களை வழங்குகிறர்கள் என்பதே," என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த நடைமுறையை அரசின் நிலைக்குழு கண்காணித்தது என்று முன்னதாக சொன்னார்கள். பின்னர், இந்த நிலைக்குழு அதனை பார்க்கவேயில்லை என்று பின்னர்தான் கண்டறியப்பட்டது.

அடுத்ததாக, அட்டர்னி ஜெனரல். இந்த வகையில் பார்த்தால், இது உண்மையில் இருந்து சற்று விலகியிருக்கும் நிலையே தெரிகிறது. இது சட்டபூர்வமானதா, இல்லையா? என்பதை சான்றுகள்தான் உறுதி செய்ய வேண்டும்.

போர் விமான விலை மற்றும் நாட்டின் இறையாண்மை உத்தரவாதம் ஆகியவற்றின் மூலம் சில தனிநபர்களுக்கு உதவி செய்ய இந்திய அரசு முனைத்திருக்கிறது என்று சொல்லக்கூடிய அளவுக்கு அரசு செயல்பட்டுள்ளது என்று கூற வேண்டிய நிலைதான் உள்ளது.

படக்குறிப்பு,

அனில் அம்பானி

அனில் அம்பானியை இந்த ஒப்பந்தத்தில் இந்திய அரசு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாங்கள் விரும்பிய நிறுவனத்தை பாஜக இதில் சேர்க்க முனைந்திருக்கிறது என்று கூறலாமா? என்பதற்கு காக் பதிலளித்தார்.

ஒப்பந்த நிபந்தனை சொற்களில் சொல்ல வேண்டுமென்றால் ஆம். கருவியை தயாரிக்கின்ற அசல் தயாரிப்பாளர் ஒரு ஒப்பந்தத்தில் நுழைகிறபோது, ஒப்பந்த மதிப்பில் இதனை செயல்படுத்தக்கூடிய (இந்த ஒப்பந்தத்தில் 50 சதவீதம்) தரப்புகளையும், நிறுவனங்களையும் அவர் தேர்வு செய்கிறார். இதில் ஐயமில்லை.

ஆனால், இதில் அதிக ஐயம் எழுந்துள்ளது என்றால், தனது ஒட்டுமொத்த வர்த்தகத்தில் தன்னுடைய கடன்களில் ரூ. 45,000 கோடி பற்றாக்குறையுடைய ஒரு நிறுவனம் (ரிலையன்ஸ் டிஃபன்ஸ்) இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டதில்தான்.

இரண்டாவது இத்தகைய தொழில் அதிபர்களிடம் அரசு நட்புறவோடு இருப்பது ஐயத்தை உருவாக்கியுள்ளது.

கடைசியாக, இந்த கம்பெனி முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் எதையும் இதுவரை கையாண்டதில்லை. ரஃபேல் போர் விமானம் மிகவும் நவீனமான போர் விமானம். யூரோ பைட்டர் போன்றதற்கு சமமான தரத்துடன் இது உள்ளது.

இத்தகைய மட்டத்தில் நவீன முறையடைய எதையும் இந்த கம்பெனி இந்நாள் வரை கையாண்டதில்லை.

இவ்வாறு சொல்வதில் இந்த போர் விமானத்தின் தரத்தை நான் குறிப்பிடவில்லை. இந்த விமான அமைப்புகளின் தரங்கள், துணை அமைப்புகளின் நவீனங்கள் என எதையும் இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ள கம்பெனி இதுவரை செய்ததில்லை. பிரான்ஸ் இந்த கம்பனியை எவ்வாறு சேர்க்க முடியும்.

மேலும், அப்போதைய பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஓலாந்த் அளித்த பேட்டியில், இந்த குறிப்பிட்ட கம்பெனியை தேர்வு செய்தால்தான் பிரான்ஸூக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்படும் என்று இந்திய அரசு தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த பேட்டியை இணையத்தில் இப்போதும் பார்க்க முடியும்.

பல்வேறு பட்ட பிரச்சனைகள் ரஃபேல் விவகாரத்தை சுற்றியுள்ளன. இந்த ஒப்பந்தம் செல்லுபடியாவது மற்றும் ஒழுங்கான செய்முறை பற்றிய பல பிரச்சனைகள் உலக அளவில் பேசப்படுகின்றன.

இது தொடர்பாக கருத்துக்களை பகிர்ந்து கொண்ட முன்னாள் ராணுவ செய்தியாளரும், தற்போதைய ஹிந்துஸ்தான் டைம்ஸ் மூத்த ஆசிரியருமான சுகிர் ரஞ்ஜன், "ஹிந்து செய்தித்தாள் எழுப்பியுள்ளது மிக முக்கிய செய்தி. ஆனால், ஹிந்து தொடக்கத்தில் விவாதித்தது விமானத்தின் விலை உயர்வோடு தொடர்புடைய விவகாரமாகும்," என்றார்.

ஹிந்து நாளிதழ் மூலம் வெளியாகியுள்ள இந்த கடிதத்திற்கும் விலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இதுவொரு அரசியல் சர்ச்சை என்று தெரிவித்தார்.

மேற்கொண்டு பேசிய அவர் பின்வருமாறு தெரிவித்தார். வெளியாகியிருக்கும் இந்த கடிதம் இறையாண்மை உத்தரவாதத்தை பற்றியும், அது தொடர்பாக நிகழ்ந்தவை பற்றியும்தான் குறிப்பிடுகிறது.

இந்த இரு வேறு பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தத்தை பாதித்தது என்று சொல்வதை பார்த்தால், பிரதமர் அலுவலகமும் இதில் அதிகாரம் கொண்டுள்ளதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

YouTube பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்பு எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 2

இந்தியா ஆங்கிலேயரிடம் இருந்து பெற்றுக்கொண்ட வெள்ளை சுவர் போன்ற அமைப்பை (whitewall system) கடைபிடிப்பதுதான் உண்மை.

இந்த வெள்ளை சுவரில் பலரும் பல்வேறு பட்ட கருத்துகளை எழுதுகிறார்கள், தெரிவிக்கிறார்கள். இது அந்ததந்த அரசியல் தலைவர்களை பொறுத்து அமைகிறது.

இந்த விவகாரத்தில் அரசியல் தலைமை முடிவு ஒன்றை எடுத்துள்ளது. இங்கே தலையீடு இருந்துள்ளது. பிற நபாகளின் தலையீடும் இருந்துள்ளது.

இதில் பிரச்சனை போர் விமானத்தின் விலை மற்றும் இறையாண்மை உத்தரவாதம். பேச்சுவார்த்தை தலையீட்டால் எல்லாம் சீர்குலைந்து விட்டது என்று சொல்ல முடியுமா? எனக்கு தெரியவில்லை. பிற நபர்களும் இது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர் என்றுதான குறிப்பிடுகிறது.

இந்தியாவில் கடைபிடிக்கப்படும் வெள்ளை சுவர் அமைப்பில் பிரதமர்தான் முதன்மையானவர். பேச்சுவார்த்தை குழுவிற்கு மட்டுமே உரித்தான கடமையான விலை பற்றியது தவிர, பிற அம்சங்களில் பிரதமர் அலுவலகம் பேச்சுவார்த்தை நடத்துகின்ற உரிமை உள்ளது. இது பற்றிய முழு விவரங்களும் இன்னும் நமக்கு தெரியவில்லை.

பிரதமர் அலுவலகத்திற்கென கடமைகள் உள்ளன. சில அதிகாரிகள் இந்த அலுவலகம் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்று சொல்லியுள்ளனர்.

"பிரதமர் அலுவலகத்தின் கூட்டு செயலாளர் பிரான்சிலுள்ள அவருக்கு ஒத்த தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதில் ஊழல் எதுவும் தெரிகிறதா? இல்லையே," என்று அவர் குறிப்பிட்டார்.

மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பொய் கூறிவிட்டதாக சிலர் சொல்கிறார்களே என்று கேட்டபோது, இதுவொரு அரசியல் குற்றச்சாட்டு என்கிறார் சுகிர் ரஞ்சன்.

உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது பற்றி நீதிமன்றம் முடிவு செய்து கொள்ளட்டும். உச்ச நீதிமன்ற சொல்ல போவதாக எதையும் முன்கூட்டியே நாம் எண்ண வேண்டியதில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அனில் அம்பானியின் நிறுவனத்தை இந்த ஒப்பந்தத்தில் இணைத்திருப்பதாக கூறுவதும் எதிர் கட்சியின் ஒரு குற்றச்சாட்டுதான்.

இந்த கொள்முதல் விவகாரத்தில், முதலாவது போர் விமானம் இந்தியாவுக்கு வழங்கப்படும் வரை, இது தொடர்பான வேலைகளை செய்கின்ற பிரான்ஸ் நிறுவனத்திற்கும், ஆஃப்செட் நிறுவனத்திற்கும் இடையில் எந்த வேலையும் ஒப்பந்தத்தில் இல்லை.

அந்த ஆஃப்செட் நிறுவனம் செய்ய வேண்டிய கடமையே முதல் விமானம் வழங்கப்பட்ட பின்னர்தான் தொடங்குகிறது.

இந்த விடயத்தை பொறுத்தவரை, நம்முன் இருக்கின்ற உண்மைகளை பார்ப்போம். அந்த நிறுவனத்தின் வழிமுறை செயல்பாட்டுக்கு வரும்போது அதனை பார்த்துக் கொள்ளலாம் என்கிறார் சுகிர் ரஞ்ஜன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :