இந்தியாவின் #MeToo இயக்கத்தில் எதிரொலிக்காத பெண் குரல்கள்

அமைப்பு-சாரா தொழிலாளர்கள் பாலியல் குற்றங்கள் குறித்து புகார் அளிப்பது குறைவு படத்தின் காப்புரிமை PUNEET BARNALA
Image caption அமைப்பு-சாரா தொழிலாளர்கள் பாலியல் குற்றங்கள் குறித்து புகார் அளிப்பது குறைவு

இந்தியாவின் #MeToo இயக்கம், கோடிக்கணக்கான ஏழைகளையும், பாதிக்கப்படும் சூழலில் உள்ள அமைப்பு-சாரா வேலைகள் செய்யும் பெண்களையும் இன்னும் சென்றடையவில்லை என்கிறார் பேராசிரியர் ஸ்ரீபர்னா சட்டோப்பாத்யாய்.

45 வயதாகும் மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பெங்களூவில் வீட்டு வேலை செய்து வருகிறார். இவர் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார்.

பல்வேறு வீடுகளில் வீட்டு வேலை செய்யும் மீனா, மாதம் 6000 ரூபாய் சம்பாதிக்கிறார். முன்னர் இதை விட மூன்று மடங்கு அதிகமாக சம்பாதித்து வந்தார். ஆனால், அவர் வேலை பார்த்த இடங்களில் இருந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து இவர் குற்றச்சாட்டு வைத்ததால் பல வீடுகளில் வேலையை இழந்துள்ளார்

தன் மூத்த மகளின் திருமணத்திற்காக தான் வேலை செய்த ஒரு வீட்டில் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார் மீனா. அங்குதான் இந்த பாலியல் துன்புறுத்தல் தொடங்கியதாக கூறுகிறார். வயதான தம்பதிகள் இருந்த அந்த வீட்டில் மீனா 3 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

தான் தரையை சுத்தம் செய்யும்போதும் மற்ற வேலைகள் பார்க்கும்போதும், அந்த வீட்டில் இருந்த ஆண் தன்னை உரசிவிட்டு சென்றார் என்றும், தன்னை தொட முயற்சி செய்து சில சமயம் தன் புடவையையும் இழுத்தார் எனவும் மீனா குற்றஞ்சாட்டினார்.

படத்தின் காப்புரிமை PUNEET BARNALA
Image caption அமைப்பு-சாரா தொழிலாளர்கள் குறித்த தரவுகளை எடுப்பதும் கடினமாக உள்ளது

அந்த நபரின் மனைவி பாதி நேரம் தூங்கிக் கொண்டே இருப்பார் என்பதால், இதுகுறித்து அவருக்கு தெரியவில்லை. இதை தடுக்க மீனா முயற்சி செய்திருக்கிறார்.

ஆனால், ஒருநாள் அந்த நபரின் மனைவி படுக்கையறைக்கு சென்று தாழிட்டுக் கொண்டு தூங்கப்போனார். அன்று அந்த நபர் தன்னை இழுத்து சோஃபாவில் தள்ள முயற்சித்ததாக மீனா குற்றச்சாட்டுகிறார்.

அந்த நபருக்கு வயது 70களில் இருந்தாலும் பலமாக இருந்தார். அவரை தள்ளிவிட்டு அந்த வீட்டைவிட்டு தப்பியோடிய மீனா, திரும்ப அங்கு செல்லவே இல்லை.

தன்னை யாரும் நம்பமாட்டார்கள் என்ற அச்சத்தில் போலீஸில் மீனா புகார் அளிக்கவில்லை. ஆனால், தான் வாங்கிய கடனை திரும்பிக் கொடுக்குமாறும், இல்லையென்றால் வேலைக்கு வருமாறும் அந்தத் தம்பதியினர் மீனாவை மிரட்டி உள்ளனர்.

மேலும், தன் கணவரை தூண்டும் வகையில் மீனா ஆடை அணிந்ததாக அவரது மனைவி கூறியிருக்கிறார்.

தான் பயந்துபோய் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறும் மீனா, தன் கடனை முழுவதுமாக அடைக்க முடியாமலும், அங்கு மீண்டும் வேலைக்கு செல்ல முடியாமலும் தவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை PUNEET BARNALA

அவர் வேலை பார்த்த வேறொரு வீட்டில், தனக்கு நடந்தவற்றை பகிர்ந்தார் மீனா. அந்த வீட்டில் உள்ளவர்கள் மீனாவை தொழிலாளர்கள் சங்கத்திலும், பெங்களூருவில் உள்ள பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் அமைப்பிலும் சேர்த்து விட்டனர்.

தொழிலாளர்கள் அமைப்பு பிரதிநிதி, அந்த வயதான தம்பதியிடம் பேசி மீனாவை துன்புறுத்துவதை நிறுத்தவில்லை என்றால், காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்படும் என்று மிரட்டியுள்ளார்.

கொஞ்சம் பணம் சேர்த்து வைத்திருந்த மீனா, எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடுத்து கடனை அடைக்க முடிவு செய்தார்.

அவரது துயரம் முடிந்தாலும், இன்னும் போராடிக் கொண்டே இருக்கிறார். அவரது மகள் பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். யாராவது ஒருவர் தொடர்ந்து அவரை பார்த்துக் கொள்ள வேண்டும்.

தான் சேர்த்து வைத்த பணத்தை எல்லாம், தன் மகளை பள்ளிக்கு கூட்டிச் சென்று அழைத்து வரவே செலவழித்து வருகிறார்.

மீனாவை போன்று அமைப்பு-சாரா தொழில்கள் செய்யும் பல பெண்கள் இங்குள்ளனர். வீட்டு வேலை பார்ப்பவர்கள், கட்டட தொழிலாளிகள், ஆடைத் தொழிலாளர்கள், விற்பனையாளர்கள் என இந்தியாவின் பெண் தொழிலாளர்களில் 94% பேர் இதில் ஈடுபட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தங்களுக்கு உரிய பலன்கள் அளிக்குமாறு அமைப்பு-சாரா தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்

ஆனால், அவர்கள் அனுபவிக்கும் பாலியல் பிரச்சனைகள் பெரும்பாலும் வெளிச்சத்திற்கு வருவதில்லை.

இந்த அமைப்பு-சாரா தொழிலாளர்கள் குறித்த தரவுகளை எடுப்பதும் கடினமாக உள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் குறித்த முழுமையற்ற கணக்கெடுப்புகள் மற்றும் தரவுகள் நமக்கு முக்கிய விஷயத்தை உணர்த்துகிறது.

ஆக்ஸ்ஃபாமால் 2012ஆம் ஆண்டில் எட்டு இந்திய நகரங்களில், நிறுவனங்களில் பணிபுரியும் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், 17 சதவீதம் பெண்கள் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக கூறப்பட்டுள்ளது. இதில் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய இடத்தில் இருப்பது பெண் தொழிலாளர்கள் (29%) மற்றும் வீட்டு வேலை செய்பவர்கள் (23%).

2018ஆம் ஆண்டு வீட்டு வேலை செய்பவர்களின் கணக்கெடுப்புப்படி, இந்திய தலைநகர் டெல்லி மற்றும் அதில் சுற்றியுள்ள பகுதிகளில் 29% பேர் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவது தெரிய வருகிறது.

ஆனால், நிறுவனங்களில் பணிபுரிவுர்கள் பற்றிய ஆய்வுடன் ஒப்பிடும்போது இது குறைவாகவே உள்ளது. BPOக்களில் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் 88% இருக்க, சுகாதாரத்துறையில் 57% இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இது ஏன் என்று பார்த்தால், அமைப்பு-சாரா தொழிலாளர்கள் பாலியல் குற்றங்களை வெளியே சொல்வது அல்லது புகார் அளிப்பது குறைவாக இருக்கிறது. அப்படியே செய்தாலும், பல வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில்லை.

இந்தியாவின் #MeToo இயக்கத்தை ஆராய்ந்தால், அதில் பல அந்தஸ்து மிகுந்த ஆட்கள், திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள், கலைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பெயர்கள்தான் இருக்கிறது.

#MeToo இயக்கம், இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும், நகர்ப்புற, படித்த பெண்களுக்காகவே இருந்திருக்கிறது. இதில் சாதாரண பெண்களின் அனுபவங்களும் குரல்களும் எதிரொலிக்கவே இல்லை.

இதில் தலித் மற்றும் ஏழைப் பெண்களும் சேர்க்கப்படவில்லை என்ற விமர்சனமும் வைக்கப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தலித் மேம்பாட்டுக்காக செயல்பட்ட பன்வாரிதேவி கூட்டுப்பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு, அது தொடர்பான வழக்குதான், இந்தியாவில் பணியிடத்தில் பாலியல் வன்முறைக்கு எதிரான முதல் சட்டத்துக்கு வித்திட்டது.

படத்தின் காப்புரிமை COURTESY: VIVIDHA
Image caption 1992ல் ஆதிக்கசாதியினரால் பன்வாரி தேவி (மத்தியில்) பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார்

இந்தியாவில் #MeToo இயக்கம், பெரும் ஆதரவு பெற்று, முக்கிய ஊடகங்கள் இதைப்பற்றி பேசும் அளவிற்கு உருவாகியுள்ளது. ஆனால், அமைப்பு-சாரா பணியாளர்களின் உரிமைகள் குழுவுடன் இன்னும் நாம் இணைந்து செயல்பட வேண்டியுள்ளது.

#MeToo என்பதில் இருந்து #UsAll என்று மாற வேண்டிய காலம் வந்துவிட்டது.

(ஸ்ரீபர்னா சட்டோப்பாத்யாய், இந்திய பொது சுகாதார அறக்கட்டளையில் மூத்த ஆராய்ச்சியாளராக உள்ளார்)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :