நரேந்திர மோதி, சந்திரபாபு நாயுடு - தனிநபர் விமர்சனத்தால் தீவிரமடைந்த மோதல்

நரேந்திர மோதி, சந்திரபாபு நாயுடு - தனிநபர் விமர்சனத்தால் தீவிரமடைந்த மோதல் படத்தின் காப்புரிமை Hindustan Times

ஞாயிற்றுக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோதி மற்றும் ஆந்திர மாநில முதல்வர் ஆகிய இருவரும் ஒருவர் மீது ஒருவர் தொடுத்த தனிப்பட்ட தாக்குதலையடுத்து, ஆந்திர பிரதேசத்தில் பாஜகவுக்கும், அதன் முன்னாள் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசத்துக்கும் இடையேயான மோதல் மேலும் மோசமடைந்துள்ளது.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தருவது மற்றும் அந்த மாநிலம் பிரிக்கப்படும்போது வழங்கப்பட்ட வேறு சில வாக்குறுதிகள் நிறைவேற்றம் ஆகியவற்றில் நரேந்திர மோதி அரசு தவறிவிட்டதாக திங்கள்கிழமையன்று டெல்லியில் சந்திரபாபு நாயுடு ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கவுள்ள நிலையில், இந்த மோதல் நடைபெற்றுள்ளது.

தர்ம போராட்டம் என்ற பெயரில் நடக்கவுள்ள சந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரத போராட்டத்துக்கு காங்கிரஸ் உள்பட 22 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

கடந்த மார்ச் மாதத்தில், மத்திய ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி, பாஜகவுடனான தனது உறவை தெலுங்கு தேசம் கட்சி முறித்துக் கொண்ட பிறகு, முதல்முறையாக ஆந்திரப்பிரதேசத்துக்கு நரேந்திர மோதி வருகை புரிந்துள்ள நாளை 'மோசமான மற்றும் கறுப்பு நாள்' என்று வர்ணித்துள்ள சந்திரபாபு நாயுடு, மாநிலத்துக்கு எதிராக மத்திய அரசின் அநீதிகளை எதிர்த்து போராடுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை ANDHRAPRADESHCM / FACEBOOK

ஆந்திரா வந்துள்ள நரேந்திர மோதியை தெலுங்கு தேசம் கட்சியினரின் கறுப்புக்கொடி போராட்டங்களும், 'மீண்டும் மோதி வேண்டாம்' , 'மோதிக்கு அனுமதியில்லை' போன்ற கோஷங்களும்தான் வரவேற்றன.

நரேந்திர மோதியின் ஆந்திர மாநில வருகையை காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ள நிலையில், பிரதான எதிர்கட்சியான ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் இந்த போராட்டங்களில் இருந்து விலகியே இருந்தது. இதனால் ஓய்.எஸ் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவின் நலனுக்கு எதிரான கட்சியான பாஜகவுடன் உறவு பேணுகிறார் என சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு வைத்தார்.

கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் தனது விஜயத்தின்போது கறுப்புக்கொடி போராட்டங்களை நரேந்திர மோதி சந்தித்து வருகிறார். தமிழ்நாடு மற்றும் அருணாச்சல பிரதேசத்துக்கு அடுத்தபடியாக தற்போது ஆந்திராவிலும் அவர் இது போன்ற போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.

பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்க வேண்டும் என்ற பொதுவான மரபைக்கூட புறக்கணித்து சந்திரபாபு நாயுடுவோ அல்லது வேறு மாநில அமைச்சரோ, மாநிலம் வந்த பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்கவில்லை.

சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷை குறிப்பிட்டு குண்டூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய நரேந்திர மோதி, தெலுங்குதேசம் அரசை ''அப்பா மகன் அரசு' என்று வர்ணித்தார்.

படத்தின் காப்புரிமை Google

ஆந்திராவுக்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்று கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்த பிரதமர், ''நாங்கள் வாக்களித்த விஷயங்களை நிறைவேற்றியுள்ளோம். ஆனால், மாநிலத்துக்கு வழங்கப்பட்ட நிதியை சரியான முறையில் பயன்படுத்தி மாநில வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமாக எதுவும் செய்யாத சந்திரபாபு நாயுடு திடீரென தனது நிலைப்பாட்டில் இருந்து மாறியுள்ளார்'' என்றார்.

தெலுங்கு தேசம் கட்சி, காங்கிரசுடன் கைக்கோர்ப்பதை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோதி, காங்கிரஸ் இல்லாத இந்தியாவை கொண்டுவர என் டி ராமராவ், தெலுங்குதேசம் கட்சியை தோற்றுவித்ததாக கூறினார். "ஒவ்வொரு தேர்தலுக்கும் தன் நண்பர்களை மாற்றிக் கொள்ளும் நாயுடு, அரசியல் காரணங்களுக்காக அவர்கள் காலில் விழுகிறார்" என்று தெரிவித்தார்.

மோதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புச்சட்டை அணிந்து, கறுப்பு பலூன்களை பறக்கவிட்டு, கறுப்புக் கொடி ஏந்தி பைக்குகளில் பலரும் வலம் வர, மோதியின் பொதுக்கூட்டத்துக்கு மக்கள் வரக்கூடாது என்பதற்காக மாநில அரசு இவ்வாறு செய்வதாக அம்மாநில பாஜக தலைவர்கள் குற்றஞ்சாட்டினர். மோதிக்கு எதிராக வைக்கப்பட்ட பலாகைகள் குறித்து காவல்துறையில் அவர்கள் புகார் அளித்ததையடுத்து, சிலவற்றை போலீஸார் நீக்கினர்.

"லோகேஷின் தந்தை" என்று மோதி பேசியவற்றுக்கு பதில்தரும் விதமாக, சந்திரபாபு நாயுடுவும் மோதியை தாக்கி பேசியுள்ளார். இதற்காக அவர் மோதியின் மனைவி ஐஷோதா பென் அவர்களை பற்றிப் பேசினார்.

"நீங்கள் என் மகன் குறித்து பேசியதால், நான் உங்கள் மனைவியை பற்றி பேசுகிறேன். மக்களே! நரேந்திர மோதிக்கு மனைவி இருப்பது உங்களுக்கு தெரியுமா? அவர் பெயர் ஜஷோதா பென்." பிரதமர் மோதிக்கு குடும்ப அமைப்பு குறித்து எந்த மதிப்பு மரியாதையும் கிடையாது என்று அவரைத் தாக்கி பேசினார் சந்திரபாபு நாயுடு.

சந்திரபாபு நாயுடுவின் மகனான லோகேஷ், மாநில அமைச்சராக இருப்பதோடு, கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் பிற முக்கிய பதவிகளையும் வகிக்கிறார்.

படத்தின் காப்புரிமை FACEBOOK

நரேந்திர மோதி பேசிய சில மணி நேரத்திலேயே, குண்டூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோதிக்கு எதிராக சந்திரபாபு நாயுடு உரையாற்றினார். "உங்கள் மனைவி உங்களை விட்டு பிரிந்துள்ளார். குடும்ப அமைப்பு மீது ஏதேனும் மதிப்பு வைத்துள்ளீர்களா" என்று பேசிய நாயுடு, அவரை தன்னுடன் ஒப்பிட்டு, தான் குடும்பத்தின் மீது அன்பும் மதிப்பும் வைத்துள்ளதாக கூறினார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் போன்ற சில செயல்களால், நாட்டின் பொருளாதாரத்தை சேதப்படுத்தி வருவதாகவும் மோதி குறித்து அவர் குற்றஞ்சாட்டினார்.

இவ்வாறான தனிப்பட்ட தாக்குதலால் ஆந்திராவில் அடுத்த சட்டமன்ற தேர்தலில், பாஜகவும் தெலுங்கு தேசமும் கைக்கோர்க்கப் போவதில்லை என்று தெளிவாக தெரிகிறது.

2014 தேர்தலில் இந்த இருக்கட்சிகளும் வெற்றிக்கூட்டணி அமைத்தன. தெலுங்கு தேசம் 15 இடங்களிலும், பாஜக இரண்டு இடங்களும் பெற, ஓய் எஸ் ஆர் காங்கிரஸ் 8 இடங்களை பெற்றது.

தற்போது, மோதிக்கு எதிரான போராட்டம், டெல்லியில் உண்ணாவிரதம் என பிராந்திய உணர்வுகளால் கவனத்தை ஈர்க்க நினைக்கிறார் சந்திரபாபு நாயுடு.

ஒய் எஸ் ஆர் காங்கிரசுடன் நேரடியாக அல்லாமல் பாஜக ஒரு புரிந்துணர்வுக்கு வரும் என்பது போல தெரிகிறது. பாஜகவுக்கு இருக்கும் மற்றொரு தேர்வு, பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :