மக்களவை தேர்தல் 2019: பாஜக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியதா?

இந்திய நாளிதழ்களில் வெளியான சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

தி இந்து: மக்களை தேர்தல் 2019: பாஜக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியதா?

படத்தின் காப்புரிமை AFP Contributor

நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுக - பாஜகவிற்கு இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பாஜகவுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக, அதிமுக வட்டாரங்கள் தெரிவிப்பதாக அந்நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் விஷயங்களுக்கு பொறுப்பாக உள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் தமிழக அமைச்சர்கள் தங்கமணியும், எஸ் பி வேலுமணியும் இதில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள மொத்தம் 39 தொகுதிகளில் பாஜக 10 தொகுதிகள் கேட்பதாகவும், ஆனால், பாஜகவின் கட்டமைப்பு தமிழகத்தில் முறையாக இல்லையென்பதால், அவ்வளவு தொகுதிகள் வழங்க அதிமுக தயாராக இல்லை. "பாஜகவிற்கு ஆறு தொகுதிகள் ஒதுக்க எங்கள் தலைமை விரும்புகிறது" என்று அக்கட்சியின் நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.

மேலும் பாஜக கேட்கும் தொகுதிகள் பாரம்பரியமாக அதிமுகவுக்கு அதிக பலம் இருக்கும் தொகுதிகள் என்றும் அந்நாளிதழ் செய்தி கூறுகிறது.

தினமலர் வெளியிட்டுள்ள கார்டூன்

படத்தின் காப்புரிமை DINAMALAR

தினமலர் : அபுதாபி நீதிமன்றத்தில் அலுவல் மொழியானது ந்தி

அபுதாபி நீதிமன்ற அலுவல் மொழியாக, அரபு, ஆங்கிலத்திற்கு அடுத்து மூன்றாவது மொழியாக இந்தி சேர்க்கப்பட்டுள்ளது என தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

யு.ஏ.இ., மக்கள் தொகையில் 30 சதவீதத்தினர் இந்தியர்கள். சுமார் 26 லட்சம் இந்தியர்கள் அங்கு பணிபுரிந்து வருகின்றனர். அந்நாட்டிலுள்ள அபுதாபி நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக அரபு, ஆங்கிலம் உள்ளன. இந்நிலையில் மூன்றாவது அலுவல் மொழியாக, தற்போது இந்தியும் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Frank Bienewald

இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள அபுதாபி நீதித்துறை, யு.ஏ.இ.,யில் அதிகம் வசித்து வரும் இந்தி பேசும் மக்கள், வழக்கு குறித்த விவரங்களை பெறுவதற்கு மொழி தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக இந்தி அலுவல் மொழியாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தினமணி: வாழை இலை, பாக்குமட்டை, காகிதப்பை பயன்பாடு அதிகரிப்பு

பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டு ஒரு மாதத்துக்கும் மேலாகி விட்ட நிலையில் சென்னையில் வாழை இலை, பாக்குமட்டை, காகிதப்பை போன்ற மாற்றுப் பொருள்களின் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் நலன் கருதி பாலித்தீன் பை உள்ளிட்ட 14 பொருள்களுக்கு தமிழக அரசு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் தடை விதித்தது. இதையடுத்து அன்றைய தினம் முதல் தடையை நடைமுறைப்படுத்த அரசின் சார்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் ஹோட்டல் உரிமையாளர்கள், மளிகைக்கடை வியாபாரிகள் கள்ளச் சந்தையில் பிளாஸ்டிக் பைகள், கப்புகள், தட்டுகளை வாங்கிப் பயன்படுத்தி வந்தனர்.

இதையடுத்து கள்ளச் சந்தையில் கொண்டுவரப்படும் பிளாஸ்டிக் பொருள்களை மொத்தமாக முடக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டது. இதில் தற்போது குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றிருக்கிறது.

சென்னையைப் பொருத்தவரை தற்போது பெரும்பாலான உணவகங்கள், தள்ளு வண்டிக் கடைகளில் மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். வாழை இலை, பாக்கு மர இலை, மந்தார இலை, அலுமினியத் தாள், காகிதங்கள், பனை ஓலை பொருள்கள், தாமரை இலை, மரக்கரண்டி, மண்பாண்டம் உள்ளிட்ட மாற்றுப் பொருள்களை வியாபாரிகள் நாட தொடங்கியுள்ளனர்.

பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றுப் பொருள்களாக பல்வேறு பொருள்கள் இருந்தாலும் வாழை இலை, பாக்குமட்டை, காகிதப் பை ஆகியவற்றின் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது.

பிளாஸ்டிக் தடை காரணமாக பாக்கு மட்டை தட்டுகளின் விற்பனை இரு மடங்காக அதிகரித்துள்ளது. உற்பத்தி இடத்தில் ரூ.4-க்கு வாங்கும் 12 அங்குல தட்டு வெளி மார்க்கெட்டில் ரூ.8-க்கு விற்கப்படுகிறது. இந்த விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்ததாக அந்நாளிதழ் செய்தி மேலும் விவரிக்கிறது

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
தமிழ்நாட்டை கலக்கும் பிளாஸ்டிக் சாலைகள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :