சின்னத்தம்பியை காட்டுக்குள் விட இயலாது - தமிழக வனத்துறை

யானை படத்தின் காப்புரிமை Getty Images

சின்னத்தம்பியை முகாமில் வைத்து பராமரிப்பதே தற்போதைய தீர்வு என தமிழக வனத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சின்னத்தம்பியை பிடித்து கும்கியாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடுக்கப்பட்ட வழக்கு இன்று திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, "சின்னத்தம்பியை பிடித்து முகாமில் வைத்து பராமரிப்பதுதான் தற்போதைய தீர்வாக அமையும்." என தமிழக வனத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், சின்னத்தம்பியை வனத்துக்குள் விரட்ட முயற்சித்தும் மீண்டும் அது ஊருக்குள்ளும், விவசாய நிலத்துக்கும் வந்து விடுகிறது என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது.

"யானை ஆய்வாளர் திரு.அஜய் தேசாய் அவர்களின் அறிக்கையிலும், சின்னத்தம்பியை பிடித்து முகாமில் வைத்து பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால் சின்னத்தம்பி யானைக்கும், விவசாயிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும்." என வனத்துறை கூறியுள்ளது.

இந்த வழக்கை நாளைக்கு விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சின்னத்தம்பி யானை தற்போது உடுமலை -மடத்துக்குளம் அருகே உள்ள விவசாய நிலங்களில் தங்கி உள்ளது.

காட்டுக்குள் விட முடியாது

சின்னத்தம்பியை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் அதிகாரிகள் பல நாட்களாக தவித்து வரும் நிலையில், தற்போது அதனை மீண்டும் காட்டுக்குள் விட இயலாது என வனத்துறை தெரிவித்துள்ளது.

அந்தப்பகுதிகளில் பன்நெடுங்காலமாய் யானைகள் வலசை சென்று கொண்டிருந்த பாதைகளில் பல கட்டடங்கள், கல்வி நிறுவனங்கள், ஆன்மிக நிறுவனங்கள், செங்கல் சூளைகள் எல்லாம் தோன்றி விட்டன. காடுகள் துண்டாக்கப்பட்டதால், ஊரினைக் கடந்துதான் மற்றொரு காட்டுப் பகுதிக்கு செல்ல வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டன யானைகள்.

இப்படித்தான் காட்டினை ஒட்டிய விவசாய நிலங்களுக்கு யானைகள் வர ஆரம்பித்தன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :