இந்தியா முழுவதிற்கும் (ஐ.எஸ்.டி.) ஒரே நேரம் என்பது சரியா?

இந்தியா முழுவதிற்கும் ஒரே நேரம் என்பது சரியா? படத்தின் காப்புரிமை AFP

இந்தியா முழுக்க ஒரே நேரம் என்பது ஆங்கிலேய ஆட்சியின் போது உருவாக்கப்பட்டது. ஒற்றுமையின் அடையாளமாக அது கருதப்பட்டது. ஆனால் இந்திய நேரம் (ஐ.எஸ்.டி.) என்பது சரியான சிந்தனை இல்லை என்று எல்லோரும் நினைக்கவில்லை.

அதற்கான காரணம் இதுதான்.

கிழக்கில் இருந்து மேற்காக இந்தியா 3,000 கிலோ மீட்டர் (1,864 மைல்கள்) கொண்டது. தோராயமாக 30 டிகிரி தீர்க்க ரேகை அளவுக்கு பரவலானது. சராசரி சூரிய நேரத்தின்படி இது இரண்டு மணி நேர வித்தியாசத்தைக் கொண்டது - வானில் சூரியன் காணப்படும் இடத்தை அடிப்படையாகக் கொண்டு கடந்து செல்லும் அடிப்படையில் கணக்கிடப்படும் நேரம் இது.

நியூ யார்க் மற்றும் உட்டா நகரங்கள் ஒரே நேரத்துக்கான மண்டலத்தில் இருப்பதைப் போன்றது இது. இங்கே நூறு கோடி மக்களுக்கு மேல், அதில் பல கோடி பேர் வறுமையில் வாழ்கிறார்கள் என்பது மட்டுமே வித்தியாசம்.

இந்தியாவின் மேற்கு பகுதியைவிட, கிழக்கு பகுதிக்கு சூரியன் சுமார் இரண்டு மணி நேரம் முன்னதாகவே உதிக்கிறது. ஒரே நேர மண்டலத்தை விமர்சனம் செய்பவர்கள், மேற்குப் பகுதியைவிட சீக்கிரத்தில் சூரியன் உதித்து, சீக்கிரத்தில் மறையக் கூடிய கிழக்குப் பகுதியில், பகல்நேர வெளிச்சத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கு, இந்திய நேரம் என இரண்டு நேரங்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்கள் அதிக நேரம் விழித்திருக்கிறார்கள், மின்விளக்குகளை அதிக நேரம் பயன்படுத்துகிறார்கள், அதிக மின்சாரத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

சூரிய உதயமும், மறைவும் உடலின் கடிகாரத்தை அல்லது கட்டுப்பாடான நாள் சுழற்சியின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மாலையில் இருள சூழும்போது, உடலானது தூக்கத்துக்கான ஹார்மோனை - மெலடோனின் - சுரக்கத் தொடங்குகிறது. அது மக்கள் தூக்கத்துக்குச் செல்ல உதவுகிறது.

ஒரே மாதிரியான நேர முறையானது அனைவருக்கும், குறிப்பாக ஏழைக் குழந்தைகளுக்கு, தரமான தூக்கம் கிடைப்பதை மறுக்கச் செய்கிறது என்று கோர்னெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் மவுலிங் ஜக்னனி தனது புதிய ஆய்வறிக்கையில் கூறியுள்ளார். இதன் தொடர்ச்சியாக, அவர்களுடைய கல்வியின் தரம் குறைகிறது என்றும் அவர் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அது இப்படி நடக்கிறது. இந்தியா முழுக்க பள்ளிக்கூட நேரம் ஏறத்தாழ ஒரே சமயத்தில் தொடங்குகிறது. ஆனால் சூரியன் தாமதமாக மறையும் பகுதிகளில் வாழும் குழந்தைகள் தாமதமாக தூங்கச் செல்வதால், அவர்களுடைய தூக்கம் குறைகிறது. சூரியன் மறைவது ஒரு மணி நேரம் தாமதமானால், குழந்தைகளின் தூக்கம் 30 நிமிடங்கள் குறைகிறது.

இந்திய நேரக் கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை மற்றும் ஆரோக்கிய கணக்கெடுப்பின் விவரங்களைப் பயன்படுத்தி ஆய்வறிக்கை தயாரித்துள்ள டாக்டர் ஜக்னனி, சூரியன் தாமதமாக மறையும் பகுதிகளில் உள்ள பள்ளி செல்லும் குழந்தைகள் குறைவான ஆண்டுகள் மட்டுமே கல்வி பயில்கின்றனர் என்றும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிப் படிப்பை அவர்கள் முடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது என்றும் கூறியுள்ளார்.

சூரியன் மறையும் நேரத்தால் தூண்டப்படும் தூக்கம் ஏழைகளிடத்தில் குறைவதற்கான ஆதாரங்களை அவர் கண்டறிந்துள்ளார். குறிப்பாக வீடுகளில் கடுமையான பணப் பிரச்சினை உள்ள குடும்பங்களில் இது நடப்பதாக அவர் கண்டறிந்துள்ளார்.

``ஏழைக் குடும்பங்களில் தூக்கத்துக்கான சூழ்நிலைகள் சப்தம், வெப்பம், கொசுக்கள், அளவுக்கு அதிகமான நெரிசல் மற்றும் ஒட்டுமொத்தமாக சவுகர்யம் இல்லாத சுற்றுப்புற சூழ்நிலைகளால் பாதிக்கப்படுவதால் இது இப்படி அமைந்திருக்கலாம். ஜன்னலை மறைக்கும் பொருட்கள், தனி அறைகள், அறைக்குள் தூங்கும் வசதி மற்றும் தூங்கும் நேரத்துக்கான அட்டவணையை சரி செய்து கொள்வதற்கான வசி என தூக்கத்தை - தூண்டும் வசதிகளில் செலவு செய்வதற்கான பண வசதி ஏழைகளுக்கு கிடைக்காமல் இருக்கலாம்'' என்று அவர் என்னிடம் கூறினார்.

``மேலும் மன அழுத்தம், எதிர்மறை பாதிப்பு சூழ்நிலைகள் போன்ற மன ரீதியிலான விளைவுகளை ஏழ்மை ஏற்படுத்தும், முடிவெடுத்தலை பாதிக்கக் கூடிய அறிவார்ந்த செயல்பாட்டில் சுமையை அதிகரிக்கும்'' என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரே மாவட்டத்திற்குள்ளும்கூட கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் சூரியன் மறையக் கூடிய ஆண்டு சராசரி நேரத்தின் அடிப்படையில் குழந்தைகளுடைய கல்வியின் பலனும் மாறுபடுகிறது என்றும் டாக்டர் ஜக்னனி கண்டறிந்துள்ளார். ஆண்டுக்கு சராசரியாக சூரியன் மறையும் நேரம் ஒரு மணி நேரம் தாமதமானால், கல்வியின் காலம் 0.8 ஆண்டுகள் குறைகிறது. பூகோள ரீதியில், தாமதமாக சூரியன் மறையக் கூடிய பகுதிகளில் வாழும் குழந்தைகள் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிக் கல்வியை முடிப்பதற்கான வாய்ப்பு குறைகிறது என்று அவருடைய ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

தற்போது முன்வைக்கப்படும் - இந்தியாவின் மேற்குப் பகுதிகளுக்கு UTC + 5 மணி நேரம் மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு UTC + 6 மணி நேரம் என்ற - இரண்டு நேர மண்டல திட்டத்துக்கு நாடு மாறுமானால், இந்தியாவின் ஆண்டு மனிதவள அதிகரிப்பால் 4.2 பில்லியன் டாலர் அளவுக்கு (ஜி.டி.பி.யில் 0.2%) ஆதாயம் கிடைக்கும் என்று டாக்டர் ஜக்னனி மதிப்பிட்டிருக்கிறார். (UTC என்பது கிரீன்விச் சராசரி நேரத்தை அல்லது ஜி.எம்.டி.-யை ஒத்திருக்கக் கூடியது. ஆனால் தானாக இயங்கும் கடிகாரத்தால் கணக்கிடப்படுகிறது. அதனால் நொடிகளைப் பிரித்துப் பார்ப்பதைவிட அதிக துல்லியமானது.)

இரண்டு மாதிரியான நேர மண்டல முறைக்கு மாறுவது குறித்து, இந்தியாவில் நீண்டகாலமாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. (சொல்லப்போனால், வட-கிழக்கில் உள்ள அசாம் மாநிலத்தில் தேயிலைத் தோட்டங்களில் ஐ.எஸ்.டி. நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாக, கடிகாரங்களில் நேரம் மாற்றி வைக்கப் பட்டுள்ளது. தங்கள் பகுதிக்கான அதிகாரப்பூர்வமற்ற நேரமாக அவர்கள் அதைப் பின்பற்றுகிறார்கள்.)

1980-களின் பிற்பகுதியில், மின்சாரத்தை சேமிப்பதற்காக, நேர மண்டலங்களை உருவாக்குவது குறித்து முன்னணி மின்சார நிறுவனத்தைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு பரிந்துரை செய்தது.

இதனால் சிக்கல்கள் ஏற்படும் என்று கூறி, 2002 ஆம் ஆண்டில் இந்த முன்மொழிவை அரசு நிராகரித்துவிட்டது. ஒரு நேர மண்டலத்தின் பகுதியில் இருந்து, வேறொரு நேர மண்டலத்தின் பகுதிக்குள் செல்லும்போது, ஒவ்வொரு முறையும் நேரத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய தேவை இருப்பதால், ரயில் விபத்துகள் நடப்பது போன்ற ஆபத்துகள் உள்ளதாக சில நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இருந்தபோதிலும், கடந்த ஆண்டு, இந்தியாவின் நேரத்தை அதிகாரப்பூர்வமாக நிர்ணயிக்கும் அமைப்புகள் இரண்டு நேர மண்டலங்களை உருவாக்குவது குறித்து ஆலோசனை வழங்கின. ஒன்று பெரும்பாலான இந்தியப் பகுதிகளுக்குரியது, அடுத்தது - அதிக தொலைவில் வட-கிழக்கில் உள்ள ஏழு மாநிலங்கள் உள்ளிட்ட - எட்டு மாநிலங்களுக்கானது. இரண்டு மண்டலங்களுக்கும் இடையிலான வித்தியாசம் ஒரு மணி நேரமாக இருக்க வேண்டும் என ஆலோசனை தெரிவிக்கபட்டுள்ளது.

அதிகாரப்பூர்வமான பணி நேரத்துக்கு முன்னதாக சூரியன் உதிப்பதும், மறைவதும் நிகழ்வதால், ஒரே நேர மண்டல நடைமுறையானது ``வாழ்வியலை மோசமாகப் பாதிக்கிறது'' என்று தேசிய இயற்பியல் சார்ந்த ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

சூரியன் சீக்கிரம் உதிக்கும் பகுதிகளில், சூரிய வெளிச்சத்தின் முழு பயன்களையும் பெறும் வகையில் அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகள் மிகவும் ``தாமதமாக'' திறப்பதால் பகல்நேர அளவில் அதிகம் இழப்பு ஏற்படுகிறது. குளிர்காலங்களில், சூரியன் சீக்கிரம் மறைவதால் பிரச்சினையின் தீவிரம் அதிகமாகிறது. ``வாழ்வை விழித்திருக்கும் நிலையில்'' வைத்துக் கொள்வதற்காக அதிக மின்சாரம் செலவழிக்கப் படுகிறது.

இதனால் அறியப்படும் நீதி: தூக்கமானது உற்பத்தியுடன் தொடர்புடையது. குழப்பமான நேர மண்டல நடைமுறையானது மக்களின் வாழ்க்கையில், குறிப்பாக ஏழைக் குழந்தைகளின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்