பெண் அமைச்சரிடம் எல்லை மீறினாரா சக பா.ஜ.க அமைச்சர்?: வைரல் வீடியோ

படத்தின் காப்புரிமை Facebook

தினத்தந்தி: 'பெண் அமைச்சர் இடுப்பில் கைவைத்த சக அமைச்சர் - வைரல் வீடியோ'

திரிபுராவில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்ற அரசு விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் சக அமைச்சர் கை வைத்தது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ்.

"திரிபுரா மாநிலத்தில் முதல்-அமைச்சர் பிப்லாப் குமார்தேவ் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு அகர்தலா நகரில் உள்ள விவேகானந்தா மைதானத்தில் கடந்த 9-ந் தேதி வளர்ச்சி திட்டப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோதி கலந்துகொண்டார்.

அப்போது, மேடையில் வைத்து மாநில விளையாட்டு மற்றும் உணவுப்பொருள் விநியோகத்துறை அமைச்சரான மனோஜ் காந்தி தேவ், சக பெண் அமைச்சரான சாந்தனா சாக்மாவின் இடுப்பில் கை போட்டார்.

இது தொடர்பான காட்சி, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரச்சனை எழுப்பி உள்ளது.

அநாகரிகமான முறையில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைபோட்ட அமைச்சர் மனோஜ் காந்தி தேவ்வை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சரை வலியுறுத்தி வருகிறது.

அத்துடன் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி வருகிறது." என்கிறது தினத்தந்தி நாளிதழ்.

படத்தின் காப்புரிமை இந்து தமிழ்

தினமணி: ' சென்னை: மெட்ரோ ரயிலில் அலை மோதிய மக்கள் கூட்டம் '

சென்னை மெட்ரோ ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் செவ்வாய்க்கிழமையும் மக்கள் கூட்டம் அலைமோதியது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

படத்தின் காப்புரிமை Getty Images

ஏஜி. டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

இதையடுத்து, வண்ணாரப்பேட்டை- விமானநிலையம் வரையிலான முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல்-பரங்கிமலை வரையிலான இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் சேவை முழுமையடைந்தது. மெட்ரோ ரயில் சேவையை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில், மெட்ரோ ரயில் இயக்கப்படும் எல்லா வழித் தடத்திலும் திங்கள்கிழமை இலவசமாக பயணிக்கலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது.

இதையடுத்து, மெட்ரோ ரயில்களில் பயணிக்க மெட்ரோ ரயில் நிலையங்களில் திங்கள்கிழமை காலை மக்கள் குவிந்தனர்.

இதற்கிடையில், சைதாப்பேட்டை-சின்னமலை இடையே உயர் அழுத்த மின் கம்பியில் திங்கள்கிழமை காலை பழுது ஏற்பட்டதால், ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மெட்ரோ ரயிலில் சுற்றி பார்க்க வந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர். உயர் அழுத்த மின்கம்பியில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்ட பிறகு, மெட்ரோ ரயில்கள் இந்த வழித்தடத்தில் வழக்கம்போல இயக்கப்பட்டன. மெட்ரோ ரயில் பயணத்தைப் பொருத்தவரை, திங்கள்கிழமை அன்று, 2 லட்சத்து 1,556 பேர் பயணம் செய்ததாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது.

- இவ்வாறாக அந்நாளிதழ் விவரிக்கிறது.

இந்து தமிழ்: 'சென்னையில் ஏற்பட்ட நில அதிர்வு'

சென்னையில் நேற்று காலை லேசான நிலஅதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர். நில அதிர்வால் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்று வானிலை மையம் விளக்கம் அளித்துள்ளது என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

சென்னையில் நேற்று காலை 7 மணிக்கு திடீரென நில அதிர்வு உணரப்பட்டது. குறிப்பாக வட சென்னை பகுதிகளில் அதிர்வை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். சில விநாடிகளே இந்த அதிர்வு நீடித்தது. கடலோரப் பகுதி என்பதால் சுனாமி ஆபத்து நேரிடலாம் என்ற அச்சமும் நிலவியது. சென்னையின் சில பகுதிகளில் நில அதிர்வை உணர்ந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. எனினும், இந்த அதிர்வால் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

"இந்திய நேரப்படி காலை 7.02 மணிக்கு மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு கிழக்கே 602 கி.மீ துாரத்தில், கடல்மட்டத்துக்கு கீழே 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது. இந்த நிலநடுக்கம் வடக்கு அந்தமான், சென்னை பகுதிகளில் உள்ள நிலநடுக்க மானியில் 5.1 ரிக்டர் அளவில் பதிவானது. இது அளவில் லேசான நிகழ்வாகும்.

நிலநடுக்கம் கடல் பகுதிகளிலேயே நிலவியதால் பெரிய பாதிப்பு இல்லை. இதனால் சுனாமி எச்சரிக்கை அபாயமும் இல்லை. எனினும், வட சென்னை, தெற்கு ஆந்திரா, வடக்கு அந்தமான் ஆகிய பகுதிகளில் லேசான நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. நிலநடுக்கம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். விரிவான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும். வதந்திகளை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டாம். தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்கள் மிதமான மழை பெய்யும். தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது." என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'ஏர் கன் வைத்து நிதி நிறுவன அதிகாரிகளை மிரட்டியவர் கைது'

ஏர் கன் (துப்பாக்கி) வைத்து நிதி நிறுவன அதிகாரிகளை மிரட்டியவர் கைது செய்யப்பட்டதாக கூறுகிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.

நிதி நிறுவனத்தில் வாக்ன கடன் பெற்ற அண்ணா நகரை சேர்ந்த கங்காவராஜன், கடனை திருப்பி செலுத்தவில்லை. இதனை வசூலிக்க சென்ற நிதி நிறுவன அதிகாரிகள் மூன்று பெயரை ஏர் கன் வைத்து மிரட்டியுள்ளார். நிதி நிறுவனம் அளித்த புகாரின் பெயரில் திருமங்கலம் போலீஸ் கைது கங்காவராஜனை கைது செய்தது என்று விவரிக்கிறது அந்நாளிதழ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்