குஜராத்தில் ராஜபுத்திர யுவதியும், தலித் இளைஞரும் சாதியை காதலால் வென்ற கதை

காதல் valentine's day படத்தின் காப்புரிமை Ravindra Bhartiya

குஜராத்தின் செளராஷ்டிரா பகுதி கிராமம் ஒன்றில் வசிக்கும் ராஜபுத்திர குடும்பத்தை சேர்ந்த ஷில்பா, ஃபேஸ்புக் மூலமாக ரவீந்திராவுடன் நட்பு கொண்டார். நட்பு காதலாகக் கனிந்தபோது, அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது பெரிய விஷயமாக தெரியவில்லை.

"எங்கள் குடும்பங்களில் பெண்களுக்கு அதிகக் கட்டுப்பாடுகள் உண்டு. வீட்டில் இருந்து கல்லூரியைத் தவிர வேறு எங்கும் செல்வதற்கு அனுமதி கிடையாது. வெளியுலகம் அதிகம் தெரியாது, எனக்கென்று பெரிய கற்பனைகள் எதுவும் இருந்ததில்லை, ஆனால் காதல் வருவதை கட்டுப்பாடுகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை," என்று சொல்கிறார் ஷில்பா.

ஆனால், தான் நினைப்பதை நிறைவேற்றுவது ஒன்றும் அவ்வளவு சுலபமானதல்ல என்பது விரைவிலேயே ஷில்பாவுக்குப் புரிந்துவிட்டது.

"நிதர்சனத்தை ஷில்பாவுக்குப் புரிய வைக்க வேண்டியிருந்தது. அது தேர்தல் சமயம். தலித் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். ஷில்பா வசிக்கும் தெருவுக்குச் செல்வதற்கே எங்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் நானோ, ஷில்பாவைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினேன்," என்கிறார் ரவீந்த்ரா.

ஷில்பாவின் நிலையோ மோசம். அவருக்கு மூச்சடைக்கும் அளவுக்கு பலத்த அழுத்தம் கொடுக்கப்பட்டது. ரவீந்திராவுடன் திருமணம் நடக்கவில்லை என்றால் வாழ்வதே வீண் என்று நினைத்தார். சாதியை மீறி திருமணம் செய்துகொள்பவர்களை வேற்று கிரகவாசியைப் போல பார்ப்பார்கள் என்கிறார் ரவீந்திரா.

"வேறு சாதியை சேர்ந்தவரை திருமணம் செய்து கொள்பவரை, சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் தீவிரவாதியைப்போல் பார்ப்பார்கள். 21ஆம் நூற்றாண்டிலும் எந்த மாற்றமும் வரவில்லை," என்று நிலைமையை எடுத்துச் சொல்கிறார் ரவீந்திரா.

படத்தின் காப்புரிமை Ravindra Bhartiya

ஆனால், சமூக ஊடகத்தின் மூலமாக அச்சம் பரப்பப்படுகிறது. ஆனால், இதுபோன்ற அழுத்தங்களுக்கு அடிபணியாமல் அச்சம் தவிர்த்த ரவீந்திரா, அவநம்பிக்கையுடன் இருந்த ஷில்பாவையும் காப்பாற்றினார்.

ஒரு நாள் ஷில்பா தொலைபேசியில் அழைத்ததும், ரவீந்திரா தனது பைக்கில் சென்றார். தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு நாம் செல்லக்கூடாது, இருவரும் ஒன்றாக வாழ்ந்து, நம்மை உலகிற்கு நிரூபிப்போம் என்று தைரியமூட்டினார்.

இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர். ஆனால், பிரச்சனை அத்துடன் முடிந்துவிடவில்லை, பிரச்சனைக்கான தொடக்கமாக அமைந்தது ஷில்பா-ரவீந்திராவின் திருமணம். வீடும் கைவிட, பொறியாளர் பணியும் பறிபோனது. தினக்கூலியாக வேலை செய்யும் கட்டாயம் ஏற்பட்டது.

ஆணவக் கொலை

கெளரவம் என்ற பெயரில் கொலை செய்வது, அதாவது ஆணவக் கொலைகளை முடிவுக்கு கொண்டு வரும் சட்டங்கள் எதுவும் இந்தியாவில் இல்லை.

தேசிய குற்ற ஆவணப் பதிவகம் நாட்டில் நடைபெறும் குற்றங்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. கொலைக் குற்றங்கள் தொடர்பான அதன் பதிவுகளின் படி, 2016ஆம் ஆண்டில் ஆவணக் கொலைகள் தொடர்பான வழக்குகள் 71 பதியப்பட்டிருந்தன. அதுவே, 2015இல் 251 மற்றும் 2014ஆம் ஆண்டில் 28 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

ஆணவக் கொலை விவகாரத்தில் வழக்குகள் அதிக அளவில் பதியப்படுவதில்லை. மேலே குறிப்பிட்ட எண்ணிக்கையைவிட அசல் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும்.

வாடகைக்கு வீடு கேட்டுச் சென்றால், கணவனும், மனைவியும் வெவ்வேறு சாதிகளை சேர்ந்தவர்கள் என்றால் வீடு கிடைக்காது, அல்லது இந்த விவரம் தெரியாமல் வீட்டை வாடகைக்கு கொடுத்துவிட்டால், விஷயம் தெரிந்தவுடன் வீட்டை காலி செய்ய சொல்லி விடுவார்கள்.

படத்தின் காப்புரிமை Ravindra Bhartiya

ஷில்பா-ரவீந்தர் தம்பதிகள் சுமார் 15 வீடு மாற்றிவிட்டார்கள். வீடில்லாமல் தெருவில் நிற்கும் போதும், வேலை பார்க்கும்போதும், ஆதரவற்று உணரும்போதும் அச்சத்தில் உறைந்து போவார் ஷில்பா.

சில நேரங்களில் அதிக கோபமும் எரிச்சலும் வரும். பல நேரங்களிலோ ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சாட்டிக் கொள்வார்கள். குடும்பத்தை விட்டு தொலைவில் இருக்கும் போது மனதில் ஏற்படும் துக்கம், சுமையாக, அழுத்தமாக மனதை வாட்டும்.

"ஒருநாள் நாங்கள் இருவரும் உட்கார்ந்து நீண்ட நேரம் பேசினோம். பரஸ்பரம் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொள்வதில் எந்தவித பயனும் இல்லை, பிரச்சனைகளை இருவரும் இணைந்து சமாளிக்கவேண்டும் என்று முடிவு செய்தோம்," என்கிறார் ஷில்பா.

இருவரும் ஒன்றாக செயல்படுவதுதான் எங்களுக்கு வலிமையையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும் என்பதை உணர்ந்தோம். இப்போது அழுவதை நிறுத்திவிட்டேன். அழுவதால் எதிர்மறை எண்ணங்களே தோன்றுகின்றன. எனவே, வாழ்க்கையை புன்னகையுடன் எதிர்கொள்ள முடிவு செய்துவிட்டோம் என்று புன்சிரிப்புடன் சொல்கிறார் ஷில்பா.

வயது வந்த இருவர் மனமொத்து திருமணம் செய்துகொண்ட நிலையில் அந்த திருமண உறவில் பஞ்சாயத்து தலையிடுவது சட்டப்பூர்வமாக தவறு என்று 2018 மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.

குடும்பம், சமுதாயம் மற்றும் சமூகத்தின் விருப்பத்தைவிட, திருமண உறவில் ஆண் மற்றும் பெண்ணின் விருப்பமே முக்கியமானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது.

பஞ்சாயத்துகள் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து பாதுகாப்பு வழங்குவதற்காக, 'சேஃப் ஹவுஸ்' (Safe House) எனப்படும் பாதுகாப்பகங்களை அமைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

சுமார் ஆறு மாதங்களுக்கு பிறகு, உள்துறை அமைக்கம் மாநில அரசுகள் அனைத்திற்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தும்படி அறிவுறுத்தியிருந்தாலும், சில மாநிலங்கள் மட்டுமே பாதுகாப்பகங்களை அமைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஷில்பாவும், ரவீந்திராவும் தற்போது தங்கள் வாழ்க்கை குறித்தும், முடிவுகள் பற்றியும் வெளிப்படையாக பேசுகிறார்கள். மாற்று சாதியில் திருமணம் செய்துகொள்ள விரும்பும் பலர் இந்த தம்பதிகளிடம் அறிவுரை கேட்கின்றனர்.

ஆனால், இவர்களிடம் வரும் தம்பதிகள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. ஒன்றாக வாழவேண்டும் என்பதும் பாதுகாப்பாக இருப்பதும் அவசியம். அச்சத்தில் இருந்து வெளிவந்து, வலுவுடன், மகிழ்ச்சியுடன் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதையும், தங்கள் வாழ்க்கைப் பயணத்தின் திசையையும் அவர்கள்தான் முடிவு செய்யவேண்டும்.

சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமானால், அதற்கு சாதிகளுக்கு இடையில் திருமணம் செய்து கொள்வதே முதல் படியாக இருக்கும் என்று கருதுகிறார் ரவீந்திரா.

கல்வியறிவு இல்லாதவர்களுக்கு உதவுவதற்காகவே தான் தற்போது சட்டப்படிப்பு படித்துக் கொண்டிருப்பதாக அவர் கூறுகிறார். தன்னுடைய உரிமைகளை உரத்த குரலில் சமூகத்தின் முன் எடுத்து வைப்பதற்கு சட்டப்படிப்பு உதவும் என்று நம்புகிறார் அவர்.

ஒன்றும் தெரியாத அப்பாவி பெண் என்ற நிலையில் இருந்து தான் நீண்ட தூரம் பயணித்து விட்டதாக கூறும் ஷில்பா, "தற்போது என் வாழ்க்கையில் சில லட்சியங்கள் இருக்கின்றன. என் அப்பா இதை பார்ப்பாரா என்று தெரியவில்லை. நான் வேடிக்கைக்காகவோ, விளையாட்டுத்தனமாகவே திருமணம் செய்து கொள்ளவில்லை. என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் அப்பா," என்று சொல்கிறார்.

அவரது இந்த விருப்பம் எப்போது நிறைவேறும் என்று தெரியவில்லை. ஆனால் என்றாவது ஒருநாள் நிறைவேறும் என்று உறுதியாக நம்புகிறார் ஷில்பா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்