நாராயணசாமி Vs கிரண் பேடி - உச்சத்தை தொட்ட மோதல்; தர்ணாவில் குதித்த முதல்வர்

ஹெல்மெட்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஆளுநராக கிரண் பேடி பதவியேற்றுக் கொண்டதிலிருந்தே அவருக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் ஏழாம் பொருத்தம். தற்போது, இருவருக்குமிடையேயான மோதல் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், ஆளுநர் மாளிகை முன்பு கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களுடன் கருப்பு சட்டை அணிந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார் முதல்வர் நாராயணசாமி.

நாராயணசாமியை சீண்டிய ஹெல்மெட் விவகாரம்

புதுச்சேரி அரசு கடந்தாண்டு மே மாதம் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவை கட்டாயமாக்க தீர்மானித்திருந்தது. எனினும், நாரயணசாமி மற்றும் கிரண் பேடி இருவருக்குமிடையேயான கருத்து மோதலால் இந்த உத்தரவை அமல்படுத்துவதில் போக்குவரத்து காவலர்கள் திண்டாடி வந்தனர்.

இந்நிலையில், இந்த மாதத் தொடக்கத்தில், அரசு விழா ஒன்றில் கலந்துகொண்ட முதல்வர் நாராயணசாமி, ஹெல்மெட் அணிவதை பொதுமக்கள் மீது திணிக்கக்கூடாது என்றும், விழிப்புணர்வு ஏற்படுத்திவிட்டு உத்தரவை அமலாக்கலாம் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

படக்குறிப்பு,

கட்டாய ஹெல்மெட் உத்தரவை தொடர்ந்து ஹெல்மெட் அணிய தொடங்கியுள்ள வாகன ஓட்டிகள்

இதற்கு பதிலளித்த கிரண் பேடி, யூனியன் பிரதேசத்தின் முதல்வர் ஒரு கட்டாய சட்டத்தை தள்ளிவைக்க முடியாது என்று நாராயணசாமியின் கருத்துகளுக்கு கடுமையாக எதிர்வினையாற்றி இருந்தார்.

இச்சூழலில், பிப்ரவரி 9ஆம் தேதி முதல் புதுச்சேரியில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படும் என்று டி.ஜி.பி சுந்தரி நந்தா உறுதியாக தெரிவித்த நிலையில், ஹெல்மெட் போடாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

களத்தில் இறங்கிய கிரண் பேடி

கடந்த வார இறுதியில், நகரின் முக்கிய வீதிகளில் நேரடியாக களமிறங்கிய கிரண் பேடி, அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனங்களை நிறுத்தி ஓட்டுநர்களிடம் ஹெல்மெட் எங்கே என்று கேட்டு எச்சரித்து அனுப்பினார்.

பட மூலாதாரம், KIRAN BEDI

மேலும், போக்குவரத்து அதிகாரிகளையும் எச்சரித்த அவர், ஹெல்மெட் போடாத வாகன ஓட்டிகளுக்கு உடனடி அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார். இது முதல்வர் நாரயணசாமி தரப்பை கடும் கோபத்தை உள்ளாக்கியது.

கிரண் பேடியை விமர்சிக்க தயங்கும் ரங்கசாமி

ஆளுநர் கிரண் பேடியின் நடவடிக்கைகளுக்கு பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர் காங்கிரஸ் இதுவரை எவ்விதமான கருத்துகளையும் தெரிவிக்கவில்லை. முதல்வர் நாராயணசாமிக்கும், கிரண் பேடிக்குமான மோதலை அமைதியாக வேடிக்கை பார்த்து வருகிறது.

காரணம், கடந்த வாரம் என்.ஆர் காங்கிரசின் 9ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி, நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க - பாஜக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் தொடர்வதாக தெரிவித்தார். மேலும், நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரே களம் காண்பார் என்றும் தெரிவித்தார்.

படக்குறிப்பு,

புதுவையின் முன்னாள் முதல்வர் ரங்கசாமி

இதே கூட்டணியில் அ.தி.மு.க இடம்பெற்றிருந்தாலும் கிரண் பேடியை கடுமையாக சாடி வருகிறது புதுச்சேரி அ.தி.மு.க. கடந்த செவ்வாய்க்கிழமையன்று, கிரண் பேடியின் ஹெல்மெட் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபை வளாகத்தில் ஹெல்மெட்டுகளை தரையில் போட்டு உடைத்தனர்.

இதற்கும், ட்விட்டரில் கருத்து தெரிவித்த கிரண் பேடி, இவர்கள் சட்டத்தை இயற்றுபவர்களா அல்லது மிதிப்பவர்களா? உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் அவமதிப்பு செய்கிறார்கள் என்றார் காட்டமாக.

என்ன சொல்கிறார் புதுவை முதல்வர் நாராயணசாமி?

காங்கிரஸ் மற்றும் திமுக எம்.எல்.ஏக்களுடன் ஆளுநர் மாளிகை முன் தர்ணாவில் ஈடுபட்டு வரும் நாரயணசாமி, போராட்டத்தை வாபஸ் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

படக்குறிப்பு,

ஆளுநர் மாளிகைக்கு முன் அமர்ந்திருக்கும் நாராயணசாமி

"புதுச்சேரி அரசு சார்பில் கிடப்பில் இருக்கும் புதுவை மக்களின் நலன் சார்ந்த 39 பிரச்சனைகளை எழுப்பி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பினோம். ஆனால், இன்று வரை அதற்கான உரிய பதில் ஆளுநரிடம் கிடைக்க பெறவில்லை. அதனால், எம்.எல்.ஏக்களுடன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளோம்." என்கிறார் முதல்வர் நாராயணசாமி.

புதுச்சேரி அரசியல் வரலாற்றில் ஆளுநர் மாளிகைக்குமுன் தர்ணாவில் அமர்ந்த ஒரே முதல்வர் நாராயணசாமிதான் என்று சிலாகிக்க தொடங்கியுள்ளனர் காங்கிரஸ் தொண்டர்கள்.

வரும் பிப்ரவரி 21ஆம் தேதி காலை 10 மணிக்கு தம்மைச் சந்திக்க முதலமைச்சர் நாராயணசாமிக்கு ஆளுநர் கிரண் பேடி நேரம் ஒதுக்கியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :