பிரியங்கா காந்தியின் லக்னவ் பேரணி: மாபெரும் கூட்டம் கூடியது உண்மையா? #BBCFactCheck

பிரியங்கா படத்தின் காப்புரிமை SM VIRAL IMAGE GRAB

சாலையில் மக்கள் திரள் அதிகமாக உள்ள ஒரு கூட்டத்தின் பழைய புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, திங்கள்கிழமை லக்னோவில் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியின் பயணத்தின்போது வந்த கூட்டம் என்று கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கொடிகளுடன் பெருமளவிலான கூட்டம் இருப்பதைப் புகைப்படத்தில் காண முடிகிறது. ஆனால் அது 2018 டிசம்பரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் வேறொரு பேரணியின் புகைப்படம்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதியும் பழைய புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பதிவில் திங்கள்கிழமை பகிர்ந்திருக்கிறார். ஆனால் பிறகு அதை நீக்கிவிட்டார்.

திங்கள்கிழமை மாலையில், லக்னோவில் காங்கிரஸ் நிகழ்ச்சியில் எடுத்த உண்மையான புகைப்படத்தைப் பகிர்ந்து, தனது முந்தைய தவறை அவர் சரி செய்திருக்கிறார்.

இருந்தபோதிலும் இந்திய இளைஞர் காங்கிரஸ் மற்றும் உத்தரப்பிரதேச மகளிர் காங்கிரஸ் தலைவர் கேசவ்சந்த் யாதவின் ட்விட்டர் பதிவுகளில் பழைய புகைப்படங்கள் இன்னும் இடம் பெற்றுள்ளன.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தன்னுடைய சகோதரி பிரியங்கா காந்தியுடன் திங்கள்கிழமை லக்னோவில் பேரணியில் கலந்து கொண்டார்.

மேற்கு உத்தரப்பிரதேச காங்கிரஸ் திட்டங்களை வகுக்கும் ஜோதிராதித்ய சிந்தியாவும் இதில் கலந்து கொண்டார்.

லக்னோ விமான நிலையத்தில் இருந்து காங்கிரஸ் தலைமை அலுவலகம் வரையிலான 15 கிலோ மீட்டர் தொலைவு பேரணி ஐந்து மணி நேரம் நடைபெற்றது என்றும், காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஏராளமானோர் அதில் கலந்து கொண்டார்கள் என்றும் பிபிசியின் லக்னோ செய்தியாளர் சமிரத்மாஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

பழைய புகைப்படத்தின் உண்மை நிலை

முதலில் பகிரப்பட்ட பழைய புகைப்படம் 2018 டிசம்பர் 5-ஆம் தேதி எடுக்கப்பட்டது. முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான முகமது அசாருதீன் பின்வரும் வரிகளுடன் இந்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் : ''ஒருவருடைய சொந்த மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பதை விசேஷமாக உணர்ந்தேன். மக்களின் ஆதரவு உத்வேகம் தருவதாக இருந்தது,'' என்று குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரதாப் ரெட்டிக்கு ஆதரவாக அசாருதீன் பிரசாரம் மேற்கொண்டார்.

"Team Rahul Gandhi" மற்றும் "Congress Lao, Desh bBachchao" என்ற முகநூல் குழுக்களிலும் புகைப்படம் மீண்டும் பகிரப்பட்டு, லக்னோ பேரணியின் படம் என கூறப்பட்டிருந்தது.

காந்தி குடும்பத்தாரின் புகழைக் காட்டுவதாக உள்ளதாகக் கூறி பலரும் பழைய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை SM VIRAL IMAGE GRAB

பாஜக எம்.பி. கிரோன் கெர், அதே புகைப்படத்தைப் பகிர்ந்து காங்கிரஸ் கட்சித் தலைவர்களை கேலி செய்திருந்தார். ``லக்னோவில் பிரியங்கா காந்திக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டதாகக் கூறி காங்கிரஸ் கட்சி ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருப்பதைப் போலத் தெரிகிறது. ஆனால், சுவரில் உள்ள சுவரொட்டிகளில் இருப்பது தெலுங்கு மொழி என்று மக்கள் கூறுகின்றனர். அது உண்மையானால், அது நகைப்புக்குரியது'' என்று அவர் கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி பழைய புகைப்படத்தைப் பகிர்ந்திருப்பதாக கேலி செய்யும் வகையில் வலதுசாரி ஆதரவு முகநூல் குழுக்களிலும் கருத்துகள் பதிவிடப் பட்டுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :