இந்திய பொதுத் தேர்தல் 2019: வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு சாத்தியமா?

  • சௌதிக் பிஸ்வாஸ்
  • பிபிசி
தேர்தல்

பட மூலாதாரம், AFP

மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 11ஆம் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 80 கோடி வாக்காளர்களும், 2000க்கும் அதிகமான அரசியல் கட்சிகளும் பங்கேற்கும் தேர்தலை நடத்தி முடிப்பது அவ்வளவு ஒன்றும் சுலபமான காரியம் இல்லை.

பிரமாண்டமான முறையில் நடக்கும் வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடப்பதே இந்தத் தேர்தலின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும்.

அரசியல் கட்சிகளை ஆதரிக்கும் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் வாக்குச் சாவடிகளை கைப்பற்றுவதை இந்தியாவில் பல பத்தாண்டுகள் பார்த்துள்ளோம்.

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மாறியபின் இவை அனைத்தும் மாறின. எனினும், அவற்றின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் அவ்வப்போது எழுகின்றன.

இந்த இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதாக தோற்கும் கட்சிகள் கூறி வருகின்றன.

பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் வென்று நரேந்திர மோதி பிரதமராகப் பதவியேற்ற 2014 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின்போது வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஊடுருவல் நிகழ்ந்ததாக அமெரிக்க தொழில்நுட்ப வல்லுநர் ஒருவரின் கூற்றை இந்தியத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

பட மூலாதாரம், Reuters

இதுவரை குறைந்தது ஏழு முறை வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யப்படுவதாக இந்திய நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. எல்லா சமயங்களிலும் அரசுத் தரப்பு அதைக் கடுமையாக மறுத்துள்ளது.

இந்தியாவிலில் 16 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளன. ஒரு இயந்திரத்தில் 64 வேட்பாளர்களின் பெயர்களைச் சேர்க்க முடியும். அதிகபட்சமாக ஒரு இயந்திரத்தில் 2,000 வாக்குகள் பதிவு செய்ய முடியும்.

இந்த இயந்திரங்கள் மின்சாரம் இல்லாமல் பேட்டரியில் இயங்க முடியும். பொதுத்துறை நிறுவனங்களால் தயாரிக்கப்படும் மென்பொருட்கள் மூலம் இயங்கும் இவற்றின் கட்டுப்பாடு தங்கள் குழுவுக்கு வெளியே செல்லாது என்கின்றனர் அதிகாரிகள்.

தாங்கள் ஆதரிக்கும் கட்சியின் சின்னத்துக்கு நேரான பொத்தானை அழுத்தி வாக்காளர்கள் தங்கள் வாக்கை செலுத்த முடியும் இந்தக் கருவிகளில், வாக்குப்பதிவை நிறுத்த இன்னொரு பொத்தானும் உண்டு.

யாரேனும் வாக்குச்சாவடியைக் கைப்பற்றி முறைகேடாக வாக்குகளைப் பதிவு செய்ய முயன்றால் இந்தப் பொத்தானை அழுத்தி அதிகாரிகளால் நிறுவனங்களின் செயல்பாட்டை நிறுத்த முடியும்.

இந்த இயந்திரன்களின் மென்பொருட்கள் மற்றும் வன்பொருட்களை யாரும் மாற்றாமல் இருக்க அவை சீல் வைக்கப்படுகின்றன.

இதுவரை மூன்று முறை நாடாளுமன்றத் தேர்தல்களிலும், 113 முறை மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், AFP

வாக்குசீட்டு முறையில் முடிவுகள் வெளியாக 40 மணி நேரம் ஆகும். இப்போது மூன்று முதல் ஐந்து மணி நேரமே ஆகிறது.

வாக்குப்பதிவு இயந்திரகளால் முறைகேடு மற்றும் மனித தவறுகள் குறைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஆய்வாளர்கள் சிசிர் தேப்நாத், முதித் கபூர் மற்றும் ஷாமிகா ரவி ஆகியோர் 2017இல் நடத்திய ஆய்வில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏழைகளை துணிவுடன் வந்து வாக்களிக்க தூண்டுவதாகவும், அதனால் தேர்தல்களில் போட்டி அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் கட்சியின் வாக்கு விகிதம் குறையவும் இது வித்திடுகிறது.

எட்டு ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள், வீட்டில் உருவாக்கப்பட்ட ஒரு கருவியை வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைத்து அதற்கு செல்பேசி மூலம் குறுந்தகவல் அனுப்பி, முடிவுகளை மாற்றினர்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிறருக்குக் கிடைக்கக்கூட வாய்ப்பில்லை என்று இந்தியத் தேர்தல் அதிகாரிகள் மறுத்தனர்.

மசாசுட்டஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்நாலஜியின் நிபுணர் தீரஜ் சின்கா உள்ளிட்டோர், ஆயிரக்கணக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை 'ஹேக்' செய்ய அதிகமான பொருட் செலவாகும் என்று கருதுகிறார்கள்.

கம்பிவழி இணைப்பில்லாமல் வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைப்பை ஏற்படுத்த ரேடியோ ரிசீவர், ஆண்டனா உள்ளிட்டவை தேவை. ஆனால், அதற்கான அம்சங்கள் இந்திய வாக்குப்பதிவு இயந்திரங்களில் இல்லை. அப்படியானால், ஒரே சமயத்தில், வேறு இடத்திலிருந்து, நேரடி இணைப்பை உண்டாக்காமல் அதிக எண்ணிக்கையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை 'ஹேக்' செய்வது சாத்தியமில்லை.

பட மூலாதாரம், Getty Images

சுமார் 33 நாடுகளில் மின்னணு வாக்குப்பதிவு பின்பற்றப்படுகிறது. எல்லா நாடுகளிலும் சந்தேங்களும் எழுப்பப்படுகின்றன.

2017இல் வெனிசுவேலாவில் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளைவிட 10 லட்சம் வாக்குகள் முடிவில் காட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், அரசு அதை மறுத்தது.

முறைகேடாக முடிவுகளில் மாற்றம் செய்ய்யப்படலாம் என அதே ஆண்டில் மின்னணு வாக்குப்பதிவு முறைக்கு அர்ஜென்டினா அரசியல்வாதிகள் மறுப்பு தெரிவித்தனர்.

இதேபோன்ற குற்றச்சாட்டால் 2018 இராக் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் பகுதி அளவுக்கு மீண்டும் எண்ணப்பட்டன.

காங்கோ ஜனநாயகக் குடியரசில் கடந்த டிசம்பரில் நடந்த அதிபர் தேர்தல் சர்ச்சையில் முக்கியப் பிரச்சனையாக இருந்தது மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு.

அமெரிக்காவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டு 15 ஆண்டுகள் ஆகின்றன. அங்கு இப்போது 35,000 இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன.

தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டங்கன் பூயல் இயன்ற அளவுக்கு தேர்தல்களில் தொழில்நுட்பத்தை அதிகமாகப் பயன்படுத்த வேண்டும் என்கிறார்.

தேர்தலை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடத்த இந்தியாவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எல்லா வாக்குப்பதிவு இயந்திரங்களும் தாம் வாக்களித்த வேட்பாளருக்கே தமது வாக்கு சேர்ந்துள்ளதா என்பதை வாக்காளர் அறியும் ஒப்புகைச் சீட்டை அளிக்கும் இயந்திரம் இணைக்கப்பட வேண்டும் என ஐந்து ஆண்டுகளுக்கு முன் இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேர்தல்களின் முடிவுகள் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவற்கான தணிக்கைகளை மேற்கொள்ளவும் கணினியியல் ஆய்வாளர்கள் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

ஒப்புகைச் சீட்டு வழங்குவது வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சந்தேகங்களைப் போக்கும் என தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி நம்புகிறார்.

2015 முதல் இந்த முறை சட்டமன்றத் தேர்தல்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. சுமார் 1,500 வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரங்கள் இதுவரை இணைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளன.

"இதுவரை ஒருமுறை கூட வாக்குப்பதிவு செய்யப்பட்ட சின்னத்துக்கு மாறான சின்னத்தில் வாக்குகள் பதிவாகவில்லை," என்கிறார் குரேஷி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :