சின்னத்தம்பி யானையை பிடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு - கட்டுப்பாடுகள் என்ன?

சின்னத்தம்பி யானை

சின்னத்தம்பி யானையினை பிடித்து கட்டுப்பாட்டில் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை தடாகம் பகுதிகளில் ஊருக்குள் வருவதாக புகார் அளிக்கப்பட்டு , டாப் ஸ்லிப் வனப்பகுதிகளில் கொண்டுவிடப்பட்ட யானை அங்கிருந்து நடந்து உடுமலைப்பேட்டை அருகில் உள்ள கண்ணாடிப் புத்தூர் கிராமத்தின் விவசாய விளை நிலங்களில் தங்கி இருக்கிறது.

வனத்துறை, சின்னத்தம்பி யானையை முகாம் யானையாக மாற்ற நடவடிக்கை எடுப்பதாக இருந்த பொழுது விலங்கு நல ஆர்வலர் அருண் பிரசன்னா என்பவர், சின்னத்தம்பி யானையினை கும்கியாக மாற்றக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

யானையை ஏன் முகாம் யானையாக மாற்ற வேண்டும் என விரிவான அறிக்கையினை அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்ததின் பேரில் இன்று , யானை ஆய்வாளர் அஜய் தேசாய் தயாரித்த ஆய்வறிக்கை தமிழ அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், தற்போது சின்னத்தம்பி யானை காட்டு யானையைப் போல் நடந்து கொள்வதில்லை.

மேலும், விளைநிலங்களில் உள்ள பயிர்களை சாப்பிட்டு நன்றாக பழகிவிட்டது. அதனை வனப்பகுதிகளுக்கு விரட்டினாலும், மீண்டும் விளை நிலங்களை நோக்கி வந்து விடும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் முகாமுக்கு கொண்டு செல்வதுதான் சரியான முடிவாக இருக்கும் என்று பரிந்துரைக்கப்பட்டது.

சின்னத்தம்பி யானை இருந்த பகுதிகளில் விவசாயிகள் பெரும் சேதத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். யானை அடிக்கடி வனத்தில் இருந்து வெளியேறுவதால் விபத்திலோ, மின்சாரம் தாக்கப்பட்டோ உயிர் இழப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.

இதே பகுதிகளில் சுற்றி வந்த பெரிய தம்பி என்ற யானை மின்வேலியில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு இறந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் தந்தத்திற்காக வேட்டையாடப்பட்டதை விடவும், மின்கசிவினாலும், விபத்தினாலும் அதிக யானைகள் இறந்துள்ளன. எனவே, இந்தச் சூழல் யானைக்கும் பாதுகாப்பானதாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

எனவே, யானையால் பயிர் சேதம் ஆகியிருப்பது, மனிதர்களின் உயிருக்கு நேரடியாகவோ அல்லது இந்த யானையினைப் பின் தொடரும் யானைகளாலோ ஆபத்து ஏற்பட வாய்ப்பிருப்பது, பிற யானைகளும் இதனைப் பின் தொடர்ந்து விளை நிலங்களுக்குள் வந்து விட வாய்ப்பிருப்பது, கும்கியாலோ, யானை விரட்டும் குழுவினராலோ சின்னத்தம்பியினை வனத்திற்குள் விரட்ட முடியாதது, மனிதர்களால் யானையின் உயிருக்கு ஆபத்து இருப்பது ஆகிய கருத்துகளை எல்லாம் கவனத்தில் கொண்டு யானையினை முகாமில் வைத்து பராமரிக்க நீதிமன்றம் உத்தரவு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

சின்னத்தம்பியினை கும்கியாக மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்க போவதில்லை. மேலும் , முகாமில் யானை எந்த வித துன்புறுத்தலுக்கும் உள்ளாகாமல் சுதந்திரமாக இருக்கும் என்று தமிழக வனத்துறை உறுதி அளித்தது.

இதன் அடிப்படையில். விவசாயிகள் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு யானையினை பிடிக்க உத்தரவு அளிக்கப்படுகிறது. அதே சமயம் யானைக்கும் எந்த பாதிப்பும், காயங்களும் இல்லாமல் பிடிக்க வேண்டும் என இடைக்கால உத்தரவினை பிறப்பித்தனர்.

சென்ற முறை சின்னத்தம்பியை பிடிக்கும் பொழுது அதன் தந்தம் உடைந்து, பின்புறம் காயங்கள் ஆகின. யானையினை பராமரிப்பது குறித்த முடிவுகளை தலைமை வனப் பாதுகாவலர் எடுத்துக் கொள்ளலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்தது.

வனத்துறையினரிடம் விசாரித்த பொழுது , யானையினை பிடிப்பதற்கான குழு தயாராக உள்ளது, உத்தரவு நகல் வந்தவுடன் பணிகளை ஆரம்பிப்போம். நீதிமன்றம் அளித்திருக்கும் விதிகளையும் கவனத்தில் கொண்டு இந்தப் பணிகள் நடக்கும் என்று தெரிவித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :