நரேந்திர மோதியை ராகுலும், பிரியங்காவும் புகழ்ந்து பேசினார்களா? #BBCFactCheck

ராகுல் படத்தின் காப்புரிமை Getty Images

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நரேந்திர மோதியை புகழ்வது போன்ற ஒரு காணொளி வலதுசாரி முகநூல் பக்கங்களில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன.

ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி தங்களின் தேர்தல் பிரசாரத்தை விடுத்து இந்த நாட்டின் எதிர்காலம் நரேந்திர மோதிதான் என்று கூறுவதுபோல் அந்த காணொளியில் உள்ளது.

அந்த காணொளியின் முதல் பாகத்தில், "உங்களின் நாட்டுக்காக வாக்களியுங்கள், சோனியா காந்திக்காக அல்ல. உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக வாக்களியுங்கள்" என்று பிரியங்கா கூறுவதுபோல் உள்ளது.

காணொளியின் அடுத்த பகுதியில்,"உங்களின் எதிர்காலம் நரேந்திர மோதியின் கையில் உள்ளது. உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் வேண்டும் என்றால் உங்களின் ஆதரவை நரேந்திர மோதிக்கு வழங்குங்கள். அவர் உங்கள் எதிர்காலத்தை வழங்குவார்." என்று பிரியங்கா கூறுகிறார்.

இந்த காணொளி ஆயிரக்கணக்கானோரால் பலமுறை முகநூல் மற்றும் வாட்சப் குழுக்களில் பார்க்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

எங்கள் ஆய்வில், இந்த வீடியோக்கள் திருத்தப்பட்டவை என்றும், பிரியங்காவின் நீண்ட பேச்சிலிருந்து அது மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

கிழக்கு உத்தர பிரதேசத்தின் தேர்தல் பொறுப்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டு, தனது பிரசாரத்தை, பிப்ரவரி 11ஆம் தேதி தொடங்கியபின் நாட்டின் தேர்தல் களம் சூடுப்பிடித்தது.

பிரியங்கா பொறுப்பேற்றதிலிருந்து, வலதுசாரி முகநூல் குழுக்களும், டிவிட்டர் பக்கங்களும் தொடர்ந்து அவர் குறித்து பல செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

சமீபத்தில், சில வலதுசாரி பக்கங்கள், பிரியங்கா காந்தி குடித்துவிட்டு தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்தன. பிபிசியின் ஆய்வில் அந்த காணொளி திருத்தப்பட்டதாக தெரியவந்தது.

ஆனால் போலி செய்திகளை பரப்புவது வலதுசாரி பக்கங்கள் மட்டுமல்ல. சமீபத்தில், சில காங்கிரஸ் தலைவர்கள், மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள், லக்னவில் பிரியங்கா கலந்துகொண்ட பிரசாரத்தில் அதிக அளவு மக்கள் கலந்துகொண்டது போன்றதொரு திருத்தப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்திருந்தனர்.

பிரியங்கா காந்தி குறித்த காணொளி

எங்கள் ஆய்வில், இந்த காணொளி 2014ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு காணொளியில் இருந்து திருத்தி அமைக்கப்பட்டது என்று தெரிகிறது. அந்த ஆறு நிமிட காணொளி காங்கிரஸின் அதிகாரப்பூர்வ யூ ட்யூப் பக்கத்தில், 2014ஆம் ஆண்டு பகிரப்பட்டுள்ளது. அதில் அவர் பாஜகவை விமர்சித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலுக்கு முன்பாக, உத்தரபிரதேசத்தின் ரேபரேலியில் ஒரு பேரணியில் பிரியங்கா உரையாற்றியிருந்தார். அதில் அவர் இந்தியாவின் பன்முகத்தன்மை குறித்தும், தேர்தல் திட்டங்களில் எவ்வாறு வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான விஷயங்கள் விட்டுப் போகிறதெனவும் கவலை தெரிவித்திருந்தார்.

"நீங்கள் சோனியா காந்திக்குதான் வாக்களிப்பீர்கள் என்று எனக்கு தெரியும். நான் சந்தேகிக்கவில்லை. ஏனென்றால், உங்களின் வளர்ச்சிக்காக அவர் கடினமாக உழைத்துக் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்துள்ளீர்கள்" என்று பிரியங்கா அந்த காணொளியில் தெரிவிக்கிறார்.

அதனை தொடர்ந்து அவர், "உங்களின் நாட்டுக்காக வாக்களியுங்கள் சோனியா காந்திக்காக அல்ல. உங்களின் குழந்தைகளுக்காக வாக்களியுங்கள். வேலை வாய்ப்புகளை உருவாக்குபவர்களுக்கு வாக்களியுங்கள். இந்த நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்பவர்களுக்கு வாக்களியுங்கள்" என்று மேலும் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் காணொளி

படத்தின் காப்புரிமை Getty Images

2017ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதியன்று, டல்கடோரா அரங்கத்தில் நடைபெற்ற காங்கிரஸ் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசியதிலிருந்து இந்த காணொளி எடுக்கப்பட்டது. அந்த 40 நிமிட வீடியோ அவரின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

உண்மையில் அவர் சொன்னது என்ன?

"ஒரு புதிய இந்தியாவை உருவாக்கப்போவதாக மோதி கூறுகிறார். அவர் நிகழ்காலத்தையும், கடந்த காலத்தையும் குறித்தே பேசுகிறார். நிகழ்காலத்தை மறந்துவிடுகிறார். அவரால் மட்டுமே ஒரு புதிய நாட்டை உருவாக்க முடியும் என அவர் நம்புகிறார். மற்ற எல்லோரும் திறமையற்றவர்கள் என்று அவர் நினைக்கிறார். நமது நாடென்ன அவ்வளவு மோசமா?" என்று பேசுகிறார் ராகுல்.

அதே தொனியில், "உங்கள் எதிர்காலம் நரேந்திர மோதியின் கையில் உள்ளது நரேந்திர மோதியின் கையில் மட்டுமே உள்ளது. உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் வேண்டும் என்றால், உங்களின் பரிசை நரேந்திர மோதிக்கு வழங்குங்கள் அவர் உங்களுக்கு எதிர்காலத்தை தருவார்" என்று கூறுகிறார் ராகுல்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :