ராஜீவ் காந்திக்கு போஃபர்ஸ்ஸில் நடந்தது, ரஃபேலில் நரேந்திர மோதிக்கு ஏன் நடக்காது?

  • ஆர்.மணி
  • மூத்த பத்திரிகையாளர்
ரஃபேல் போர் விமானம்

பட மூலாதாரம், Getty Images

(இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகள். இவை பிபிசியின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்)

ரஃபேல் விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. மோதி அரசு 2014 மே மாதம் பதவிக்கு வந்தது. இன்னும் இரண்டு மாத காலத்தில் இந்த அரசு மக்களவை தேர்தல்களை சந்திக்க இருக்கிறது.

இந்த சூழலில்தான் பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்திய விமானப்படைக்கு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க போடப்பட்ட ஒப்பந்தம் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

ரஃபேல் ஒப்பந்தத்தில் பெருமளவில் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எழுப்பிக் கொண்டிருக்கிறது.

மோதி அரசு தன்னுடைய ஆட்சி காலத்தில் சந்திக்கும் மிகப் பெரிய ஊழல் குற்றச்சாட்டு, அரசியல் சவால் என்று ரஃபேல் விவகாரத்தை நிச்சயம் நாம் சொல்லலாம்.

பட மூலாதாரம், Getty Images

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி, ஆட்சியில் இருக்கும்போதே 2012ம் ஆண்டே ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கின. 126 ரஃபேல் போர் விமானங்களை வாங்கவும் முடிவு செய்யப்பட்டது.

ஆனால் திடீரென்று இந்த முயற்சி கைவிடப் பட்டது. பின்னர் மோதி அரசு வந்த பிறகு ரஃபேல் போர் விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கான ஒப்பந்தம் மோதி பிரான்ஸூக்கு சென்றபோது ஜனவரி 2016ல் போடப்பட்டது. இந்தியாவும், பிரான்ஸூம் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இதன்படி பிரான்ஸின் டஸ்ஸோ நிறுவனம் இந்தியாவின் அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனத்துடன் சேர்ந்து ரஃபேல் போர் விமானங்களை தயாரிக்கும் என்றும், 126 போர் விமானங்களுக்கு பதிலாக 36 போர் விமானங்களை இந்தியா வாங்கும் என்றும் முடிவானது.

பட மூலாதாரம், BARCROFT MEDIA

ஒல்லாந்த் போட்ட குண்டு

இந்த நிலையில்தான் பிரான்சின் முன்னாள் அதிபர் ஃபிரான்சுவா ஒல்லாந்த் 'மீடியாபார்ட்' என்ற இணைய தளத்திற்கு செப்டம்பர் 21, 2018 ம் ஆண்டு கொடுத்த ஒரு பேட்டியில் ஒரு குண்டைத் தூக்கி போட்டார்.

''ரஃபேல் போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்யவும், இந்தியாவில் உற்பத்தி செய்யவும் பிரான்ஸும், இந்தியாவும் ஒப்பந்தம் செய்து கொண்டன. அதில் பிரெஞ்ச் நிறுவனமான தஸால்ட் இந்தியாவின் அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. டஸ்ஸோ நிறுவனம் அனில் அம்பானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதற்கு காரணம், வேறு எந்த நிறுவனத்தையும் இந்திய அரசு எங்களுக்கு விருப்ப பட்டியலில் (choice) காட்டவில்லை' என்பதுதான்" என்று தெரிவித்தார்.

ஒல்லாந்தின் இந்த பேட்டிக்கு பிறகே ரஃபேல் விவகாரம் இந்தியாவின் அரசியல் களத்தில் சூட்டைக் கிளப்பத் தொடங்கியது.

உச்சநீதிமன்றம், சிஏஜி

இதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி தொடரப்பட்ட பல மனுக்களை இந்திய உச்ச நீதிமன்றம் டிசம்பர் 14, 2018 அன்று தள்ளுபடி செய்தது.

பட மூலாதாரம், Getty Images

அதே போலவே ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை என்ற தொணியில் பிப்ரவரி 13, 2019ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்திய கணக்கு தணிக்கையாளர் குழு (Comptroller And Auditor General of India or CAG) அறிக்கையும் தெரிவித்துவிட்டது.

மேலும், கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ரஃபேல் போர் விமானங்களை வாங்க உத்தேசித்திருந்த ஒப்பந்தத்தைவிட மோதி அரசு போட்ட ஒப்பந்தம் 2.86 சதவிகிதம் விலை குறைவு என்றும் சிஏஜி அறிக்கை தெரிவித்துவிட்டது.

ஆனால், விவகாரம் இதனுடன் முடிவடைந்துவிட்டதா என்றால், அதுதான் இல்லை. எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸூம், ''தி ஹிந்து'' ஆங்கில நாளிதழும் தொடர்ந்து இது தொடர்பாக கடுமையான குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர்.

''தி ஹிந்து'' பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், அக்குழுமத்தின் இயக்குநர்கள் குழு தலைவருமான என்.ராம் கடந்த பத்து நாட்களாக தொடர்ந்து இது சம்மந்தமாக பிரத்தியேக (Exclusive) கட்டுரைகளை எழுதி வருகிறார்.

தவனை முறையில் (instalment basis), அநேகமாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் ரஃபேல் விவகாரம் தொடர்பாக என்.ராம் Exclusive கட்டுரைகளை பிரசுரித்து வருகிறார்.

பட மூலாதாரம், Getty Images

என்.ராம் தான் 1987ல் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியின் அரசியல் வீழ்ச்சிக்கு காரணமான போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் குறித்து செய்திக் கட்டுரைகளை எழுதி உண்மையை வெளிக்கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

போஃபர்ஸ் மற்றும் ரஃபேல் விவகாரங்களுக்கு இடையே இருக்கும் ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் பற்றி நாம் பார்ப்பது தற்போது முக்கியமான ஒரு நிகழ்வாக இருக்கும் என்றே நம்புகிறேன்.

போஃபர்ஸ் விவகாரம்

சுதந்திர இந்தியாவின் ராணுவ மற்றும் அரசியல் வரலாற்றில் முக்கியமான விவகாரம் இந்திய ராணுவத்துக்கு ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த போஃபர்ஸ் பீரங்கிகளை வாங்கியது.

படக்குறிப்பு,

என்.ராம்

410 போஃபர்ஸ் பீரங்கிகளை 1,500 கோடி ரூபாய்க்கு வாங்கும் ஒப்பந்தம் அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி காலத்தில் 1986ம் ஆண்டு போடப்பட்டது.

ஓராண்டு கழித்து இந்த ஒப்பந்தத்தில் 66 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாக ஏப்ரல் 16, 1987ல் ஒரு ஸ்வீடன் நாளேடு கட்டுரை எழுதியது.

அதிலிருந்து பற்றி எறிய ஆரம்பித்தது போஃபர்ஸ் ஊழல் விவகாரம். போஃபர்ஸ் விவகாரம் முற்றியபோது அப்போதய பாதுகாப்புத் துறை அமைச்சர் வி.பி. சிங் ராஜினாமா செய்தார்.

ராஜீவ் காந்திக்கு எதிராக திரும்பிய வி.பி. சிங் 1989 மக்களவை தேர்தலில் அவருடைய ஜனதா தளம் 89 இடங்களை பெற்றிருந்த போதிலும் பிரதமரானார். வி.பி. சிங்கை பாஜக வும், இடதுசாரிகளும் வெளியிலிருந்து ஆதரித்தனர்.

போஃபர்ஸ் விவகாரத்தில் அக்டோபர் 22, 1999 அப்போதய வாஜ்பாய் அரசில், சிபிஐ, டில்லி கீழமை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

இதில் இடைத் தரகர்கள் ஒட்டரோயோ கொட்டரோச்சி, வின்சத்தா, 1991ல் விடுதலை புலிகளால் கொல்லப் பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, முன்னாள் பாதுகாப்புத் துறை செயலாளர் எஸ்.கே. பட்நாகர் ஆகியோர் குற்றஞ்சாட்டப் பட்டிருந்தனர்.

2001 ம் ஆண்டு வழக்கு நிலுவையில் இருக்கும்போதே வின்சத்தாவும், பட்நாகரும் இறந்து போயினர். கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடியானது.

பின்னர் டில்லி உயர்நீதிமன்றத்திலும் சிபிஐ மேல் முறையீடு தள்ளுபடியானது. கோட்டோரோச்சி 2013ல் இறந்து போனார்.

ஓராண்டுக்கு முன்பு சிபிஐ போஃபர்ஸ் வழக்கில் தாக்கல் செய்த மேல் முறையீட்டை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்திய அரசியலை புரட்டி போட்ட போஃபர்ஸ் வழக்கு நீதிமன்றங்களில் மண்ணைக் கவ்வியது.

ஒப்பீடுகள்

பட மூலாதாரம், Getty Images

ரஃபேல் விவகாரத்துக்கும் 32 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போஃபர்ஸ் விவகாரத்துக்கும் இடையிலான பல வேறுபாடுகள் சுவாராஸ்யமானவை.

பிரதமர் இந்திரா காந்தி அக்டோபர் 31, 1984 அவருடைய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார். அன்று இரவே பிரதமரான ராஜீவ் காந்தி, அந்தாண்டு டிசம்பர் பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று பிரதமர் பதவியை தக்கவைத்துக் கொண்டார்.

முதல் இரண்டரை ஆண்டுகள், அதாவது 1987 முதல் பாதி வரையில் ராஜீவ் காந்தியை ''திருவாளர் பரிசுத்தம்'' (Mr.Clean) என்றே அப்போதய நாளிதழ்களும், பத்திரிகைகளும் எழுதின.

ஆனால் 1987 ன் பிற்பாதியிலிருந்து ''திருவாளர் பரிசுத்தம்'' ''போஃபர்ஸ் காந்தி'' ஆக மாறினார். ராஜீவ் காந்தியை "Bofors Gandhi" என்று எழுத ஆரம்பித்தன பத்திரிகைகள்.

தன்னுடைய எஞ்சிய இரண்டாண்டு ஆட்சிக் காலத்தில் இந்த அவப் பெயருடனேயே ராஜீவ் காந்தி வலம் வந்தார். ஸ்வீடன் ஊடகங்களும், இந்திய ஊடகங்களும் மட்டைக்கு இரண்டு கீற்றாக அனுதினமும் ராஜீவ் காந்தியை கிழித்து எறிந்து கொண்டிருந்தன.

1989 நவம்பர் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோற்றது. ராஜீவ் காந்தி பதவி இழந்தார். இவ்வளவுக்கும் அந்த காலத்தில் இந்தளவு ஊடக வளர்ச்சி கிடையாது.

அகில இந்திய வானொலியும், தூர்தர்ஷனும் அரசுக்கு சொந்தமானவை. இணையதளங்கள் கிடையாது. வாட்ஸ் ஆப் கிடையாது. தனியார் செய்தி தொலைக்காட்சிகள் கிடையாது. பத்திரிகைகள் மட்டும்தான். ஆனாலும் ராஜீவ் காந்தி பதவியிழந்தார்.

பட மூலாதாரம், Getty Images

மோதியின் கதை வேறு

ஆனால், இன்று பிரதமர் நரேந்திர மோதியின் நிலைமை வேறு. இன்று பெரும்பாலான, வல்லமையும், பாப்புலாரிட்டியும் மிக்க அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் இந்தியாவின் பெரிய கார்ப்போரேட்டுகளுக்கு சொந்தமானவை.

மோதிக்கு எதிரான குற்றச் சாட்டுகள், அவற்றில் எந்தளவுக்கு உண்மையும், நம்பகத்தன்மையும் இருந்தாலும் கார்ப்போரேட்டுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்களால், வெளியிடப்பட வேண்டிய அளவுக்கும், எழுதப் பட வேண்டிய அளவுக்கும், வெளியிடப் படாமலும், எழுதப் படாமலும் தான் இருக்கின்றன.

ராஜீவ் காந்தி தன் மீதான ஊழல் கறையை இரண்டாண்டுகள் பொதியாக சுமந்தார். ஆனால், மோதியோ தன்னுடைய ஆட்சியின் கடைசி நான்கு மாதங்களுக்கும் குறைவான காலத்தில்தான் ரஃபேல் ஊழல் குற்றச்சாட்டை எதிர் கொண்டிருக்கிறார்.

இந்த இரண்டு நிகழ்வுகளையும் பார்த்தவன், பார்த்துக் கொண்டிருக்கின்றவன் என்கின்ற முறையில் இது எனக்கு முக்கியமானதாகவே படுகிறது.

பட மூலாதாரம், Twitter

போஃபர்ஸ் பீரங்கி வாங்கியதில் ஊழல் நடந்தது என்ற கடுங்குற்றச் சாட்டு எழுந்தது. ஆனால் போஃபர்ஸ் பீரங்கியின் தரத்தை அந்த காலக்கட்டத்தில் கூட எவரும், எந்த எதிர்கட்சிகளும் கூட குறை சொல்லவில்லை.

1999 வரையில் போஃபர்ஸ் நிறுவனத்திடமிருந்து எந்த ராணுவ தளவாடத்தையும் வாங்க கூடாது என்று இந்தியா அந்நிறுவனத்தை 'கறுப்பு பட்டியிலில்' (Black List) வைத்திருந்தது.

1999 கார்கில் போரின்போதுதான் இந்த Black List லிருந்து போஃபர்ஸ் நிறுவனத்தை இந்தியா விடுவித்தது. கார்கில் போரில் இந்திய எல்லைகள் பாகிஸ்தான் படைகளிடமிருந்து காப்பாற்றப் பட போஃபர்ஸ் பீரங்கிகளின் பங்கு முக்கியமானது.

ஆனால், ரஃபேல் விமானங்களின் தரம் என்ன என்பது பெரிய கேள்விக்குறியாகி நிற்கின்றது.

இந்தியாவில் ரஃபேல் போர் விமானங்களை தயாரிக்க தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் நிறுவனத்திற்கு இதுவரையில் எந்த ராணுவ தளவாடங்களையும் உற்பத்தி செய்த முன் அனுபவம் கிடையாது.

இந்த உண்மையை வசதியாக ஆளும் கட்சியும், அதனது ஊதுக்குழல்களும் மறைத்தும், மறந்தும் எதிர்கட்சிகளையும், என்.ராமை யும் வசைமாரி பொழிந்து கொண்டிருக்கிறார்கள்.

தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் அர்ச்சனை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் சொன்னால் 'using choicest epithets' என்பார்களே, அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

போஃபர்ஸ் விவகாரத்தில் ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டு நாடாளுமன்ற குழு (Joint Parliamentary Committee or JPC) விசாரணைக்கு ஒப்புக் கொண்டது.

ஆனால் மோதி அரசு என்ன நடந்தாலும் ரஃபேல் விவகாரத்தில் JPC விசாரணக்கு ஒப்புக் கொள்ள முடியாது என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறது.

பாஜக, காங்கிரஸ் உள்-முரண்பாடுகள்

சிஏஜி அறிக்கை ரஃபேல் விமானங்கள் முந்தய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை விட 2.86 சதவிகிதம்தான் விலை குறைவானதாக மோதி அரசால் வாங்கப் படவிருக்கின்றன என்று தெரிவிக்கிறது.

பட மூலாதாரம், DASSAULT RAFALE

ஆனால் இந்த அறிக்கைக்கு முன்பு மத்திய அமைச்சர்கள் ஆளாளுக்கு ஒரு புள்ளிவிவரத்தை கூறினர். பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் 9 சதவிகிதம் விலை குறைவு என்றார்.

நிதியமைச்சர் அருண் ஜெட்லி, சட்ட அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் 20 லிருந்து 40 சதவிகிதம் வரையில் விலை குறைந்தது என்றனர்.

இது தவிர இன்னோர் விஷயம், ரஃபேல் விவகாரத்தில் சம்மந்தப்பட்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை விட, அருண் ஜெட்லி, ரவிஷங்கர் பிரசாத் மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் தான் அதிகம் பேசிக் கொண்டிருக்கின்றனர். இதனது உண்மையான காரணம் மோதிக்கும், மற்ற மூத்த அமைச்சர்களுக்கும் நன்றாகவே தெரிந்திருக்கும்.

பாஜக-வின் செயற்பாட்டில் மற்றுமோர் சுவாரஸ்யமான விஷயம் அக் கட்சியின் மாநிலங்களவை எம்.பி யான சுப்பிரமணியன் சுவாமியின் செயற்பாடுகள்.

2015 ம் ஆண்டே ரஃபேல் ஒப்பந்தத்தை சுவாமி எதிர்த்தார். 2015ல் சுவாமி பதிவிட்ட ஒரு ட்வீட் செய்தியில், 'அரசு ரஃபேல் ஒப்பந்த த்தில் கையெழுத்திட்டால் அதனை எதிர்த்து நான் உச்ச நீதிமன்றம் செல்லுவேன்' என்று கூறியிருந்தார்.

பட மூலாதாரம், HINDUSTAN TIMES

ஆனால் சுவாமி உச்ச நீதிமன்றம் போகவில்லை. அதே நேரத்தில் இந்த விவகாரம் பற்றியெரிந்து கொண்டிருக்கும்போது சுவாமி வாய் திறக்காமல் அமைதியுடன் இருக்கிறார்.

சுவாமியின் அரசியலை தெரிந்தவர்கள் இந்த விஷயத்தை அவ்வளவு சுலபமாக கடந்த போக முடியாது என்றே நான் உறுதியாக நம்புகிறேன்.

காங்கிரஸின் செயற்பாட்டில் உள்ள ஒரு விஷயம் சுவாரஸ்யமானது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், மற்ற மூத்த தலைவர்களும், ரஃபேல் விவகாரத்தில் ஊழல் நடந்திருக்கிறது என்கின்றனர்.

குறிப்பாக மத்திய அரசுக்கு சொந்தமான போர் விமானங்களை உற்பத்தி செய்யும் ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் (HAL)-டுக்கு ரஃபேல் விமானங்களை உற்பத்திய செய்யும் ஒப்பந்தத்தை தராமல் ஒரு தனியார் நிறுவனத்துக்கு கொடுத்தது ஏன் என்கின்றனர்.

ஆனால் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஒரு தொலைக் காட்சி பேட்டியில் வேறு மாதிரி பேசினார்.

''ரஃபேல் விமான ஒப்பந்தத்தை ஓர் இந்திய தனியார் நிறுவனத்திற்கு கொடுத்தது பற்றி நான் குறை சொல்லவில்லை. என்னுடைய குற்றச்சாட்டு முதலில் ஒப்புக் கொண்ட 126 விமானங்களுக்குப் பதிலாக வெறும் 36 விமானங்களை ஏன் அரசு வாங்குகிறது என்பதுதான்'' என்கிறார்.

அரசியல் விலை என்ன?

நான் முந்தைய பத்திகளில் சொன்னதுபோல போஃபர்ஸ் விவகாரம் நீதிமன்றங்களில் மண்ணைக் கவ்வியது. ஆனால் காங்கிரஸ் கட்சி அரசியல் ரீதியாக போஃபர்ஸ் விவகாரத்தில் பெரிய விலையை கொடுத்தது.

இதுவரையில் மோதிக்கு அந்தப் பிரச்சனை எழவில்லை. ஆம். இந்திய வாக்காளர்களிடம் பரந்துபட்ட அளவில், போஃபர்ஸ் விவகாரத்தில் ராஜீவ் காந்திக்கு ஏற்பட்ட அவப்பெயர் இதுவரையில் மோதிக்கு ஏற்படவில்லை.

போஃபர்ஸ் விவகாரம் 1989 மக்களவை தேர்தலின் பிரச்சாரத்தின்போது நாட்டின் பட்டி தொட்டியெல்லாம், குறிப்பாக, சாமானிய மனிதர்களிடமும் போய்ச் சேர்ந்தது.

அந்த தேர்தல் பிரச்சாரத்தில் வி.பி. சிங் உத்திரபிரதேசத்தில் ஒரு நகரில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது, அவருடன் பயணித்த ஒரு செய்தியாளர், போஃபர்ஸ் விவகாரம் நகர்ப்புறங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் கிராம மக்களிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது? என்று கேட்டார்.

அதற்கு வி.பி. சிங் நானே உங்களை அழைத்துச் செல்லுகிறேன் என்று சொல்லி, உத்திரபிரதேச மாநிலத்தின் சாலை வசதிகள் கூட சரியாக இல்லாத ஒரு குக் கிராமத்திற்கு அந்த செய்தியாளரை அழைத்துச் சென்றார்.

பட மூலாதாரம், EORGES GOBET/AFP/GETTY IMAGES

ஒரு வீட்டிலிருந்த நடுத்தர வயது பெண்ணிடம் போஃபர்ஸ் பற்றி விபி சிங் கேட்டார். அதற்கு அந்த பெண், 'பீரங்கி ஊழலைத் தானே சொல்லுகிறீர்கள்' என்று கேட்டார். அப்போது அந்த செய்தியாளரை திரும்பி பார்த்த வி. பி சிங்,'நீங்களே பார்த்துக் கொள்ளலாம்' என்று கூறினார்.

ஆனால் அப்போதிருந்த மீடியா வளர்ச்சியை விட பல மடங்கு அதிகமான மீடியா வளர்ச்சியை கொண்ட இன்றைய காலகட்டத்தில் இதுவரையில் ரஃபேல் விவகாரத்தால் மோதியின் பெயர் பெரிய அளவில் கெட்டுப் போகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ரஃபேல் விவகாரத்தில் இந்திய ஊடகங்களை பற்றி பேசும்போது மற்றோர் சமகால நிகழ்வும் நினைவு கூரத்தக்கது என்று கருதுகிறேன்.

2009 மற்றும் 2010ம் ஆண்டுகளில் 2ஜி விவகாரம் சம்மந்தமாக போடப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் அன்றைய மன்மோகன் சிங் அரசுக்கு கடுங் கண்டனங்களை தொடர்ந்து தெரிவித்தது. ஒரு கட்டத்தில் வழக்கு விசாரணையை தன்னுடைய கண்காணிப்பில் கொண்டு வந்தது.

பட மூலாதாரம், Getty Images

2ஜி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கண்டனங்ள், மீடியாக்கள் அந்த விஷயத்தை ஒரு நூலாக பிடித்துக் கொண்டு அந்த வழக்கை பெரிய அளவில் மக்களிடம் கொண்டு செல்ல உதவியது.

2014 தேர்தலில் மன்மோகன் சிங் அரசும் கவிழ்ந்தது. ஆனால் ரஃபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மோதி அரசு தவறு ஏதும் செய்யவில்லை என்று சொல்லி விட்டதால், விவகாரத்தை தொடர்ந்து எழுதவும், பேசவும் பெரிய அளவிலான வாய்ப்பை (scope) இதுவரையில் மீடியாக்களுக்கு கொடுக்காமல் செய்து விட்டது என்றே நான் கருதுகிறேன்.

ஃபிரெஞ்ச் ஊடகங்கள்

போஃபர்ஸ் விவகாரத்தை ஸ்வீடன் ஊடகங்கள் பெரியளவில் எழுதின. ஆனால் ஃபிரெஞ்சு ஊடகங்கள் இதுவரையில் ரஃபேல் விவகாரத்தை பெரியளவில் கண்டு கொள்ளவில்லை. போஃபர்ஸ் மற்றும் ரஃபேல் விவகாரங்களை ஸ்வீடன் மற்றும் ஃபிரெஞ்சு ஊடகங்கள்தான் முதலில் வெளியில் கொண்டு வந்தன. இந்திய ஊடகங்கள், இதனை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

ஆராய்ச்சி முடிவுகள்

PEW Research Centre என்ற ஒரு சர்வதேச ஆராய்ச்சி அமைப்பு The Pew Global Attitudes Survey 2017 என்ற ஓர் ஆய்வை 2017ல் நடத்தியது. அது கீழ்கண்ட தகவலை தெரிவிக்கிறது;

''உலகின் பல நாடுகளில் நாங்கள் எடுத்த ஓர் ஆய்வின்படி, ஊடகங்கள் ஓர் அரசியல் கட்சியின் சார்பெடுத்து செய்திகளை வெளியிடுவதை ஏற்றுக்கொள்ளும் நாடுகளில் இந்தியாதான் முதல் நாடாக இருக்கிறது.

41 சதவிகித இந்தியர்கள் ஓர் அரசியல்கட்சி சார்புடன் அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள், குறிப்பாக காட்சி ஊடகங்கள் செய்தி வெளியிடுவதை ஏற்றுக் கொள்ளுகின்றனர். இதில் தவறு ஏதுமில்லை என்கின்றனர். 25 சதவிகித இந்தியர்கள் இது தவறு என்கின்றனர்'' என்று கூறுகிறது.

இந்த ஆய்வின்படி பார்த்தால், போஃபர்ஸ் விஷயத்தில் ராஜீவ் காந்தி கொடுத்த அரசியல் விலையை ரஃபேல் விவகாரத்தில் மோதி கொடுக்க மாட்டார் என்றே நான் இப்போது வரை உறுதியாக நம்புகிறேன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :