மக்களவைத் தேர்தல் 2019: 'விரைவில் நல்ல செய்தி வரும்' - கூட்டணி குறித்து பாஜக

மோதி படத்தின் காப்புரிமை Getty Images

பிப்ரவரி 10ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதியும், இன்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் தமிழகம் வந்த நிலையில், பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பியூஸ் கோயலும் இன்று தமிழகம் வந்தார்.

இன்றைய பயணத்தின்போது, கூட்டணி குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் என்று அவர் தெரிவித்தார்.

இன்று, வியாழக்கிழமை, தமிழகம் வந்த இன்னொரு மத்திய அமைச்சரான ரவிசங்கர் பிரசாத்தும், திமுக, காங்கிரஸ் மற்றும் அம்முக இல்லாத கூட்டணி குறித்து பேச்சு நடந்து வருவதாகவும், நல்ல செய்திக்கு காத்திருக்குமாறும் செய்தியாளர் சந்திப்பில் கூறியது குறிப்பிடத்தக்கது.

இன்று இரவு சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் விமான நிலையத்தில் பியூஸ் கோயல் ஆலோசனை நடத்தினார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கோயல், "தமிழகத்தின் குரல் புது டெல்லியில் எதிரொலிக்க விரும்பவேண்டும் என்றும், 2019 தேர்தலுக்கு பின் அமையவுள்ள அரசில் தமிழகத்துக்கு அதிக பிரதிநிதித்வம் இருக்க வேண்டும்," என்று கூறினார்.

தமிழக மக்கள் மீது பிரதமர் நரேந்திர மோதி அக்கறை கொண்டுள்ளதாகவும், தமிழக மக்களும் தம் மீது அக்கறை கொண்டுள்ளதாக பிரதமர் மோதியும் நம்புகிறார் என்றார் கோயல்.

படத்தின் காப்புரிமை Facebook / Piyush Goyal

"மத்திய அரசில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் பங்காற்ற வேண்டும். தமிழகத்தில் இருக்கும் நண்பர்களுடன் நன்றாக பணிபுரிந்து, பிரதமர் நரேந்திர மோதி அரசுக்கு வலு சேர்க்கும் வகையில் இருக்கும்," என்றும் செய்தியாளர்களிடம் கோயல் கூறினார்.

தமிழகத்தில் கட்சியின் எதிர்காலம் குறித்து நிர்வாகிகளுடன் பேச்சு நடந்த வந்துள்ளதாகக் கூறினார்.

ஜெயலலிதாவுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக கருதப்பட்டது. ஆனால், உண்மையில் அவர் என்னை ஒரு இளைய சகோதரர் போல நடத்தினார் என்றும் பிரதமர் மோதி மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் நெருங்கிய உறவுடன் இருந்தனர் என்று கோயல் கூறினார்.

அதிமுக உடன் கூட்டணி குறித்து அறிவிக்கப்படுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "சரியான நேரத்தில் உண்மை தெரியவரும். விரைவில் நல்ல செய்தியைக் கேட்பீர்கள்," என்றார் கோயல்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்