புல்வாமா தாக்குதல்: காஷ்மீர் தற்கொலை குண்டு தாக்குதல் குறித்து முன் கூட்டியே எச்சரித்த உளவுத்துறை

பாதுகாப்பு வீரர்கள்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், வியாழனன்று, இந்தியாவின் மத்திய ரிசர்வ் காவல் படையினர் குறைந்தபட்சம் 46 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட தாக்குதல் சம்பவம் தடுக்கப்பட்டிருக்கலாம் என்று அம்மாநிலத்தின் உளவுத்துறை நம்புகிறது.

புல்வாமாவில் நடந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஜெய்ஷ்-ஈ-மொஹமத் அமைப்பு, பாதுகாப்பு படைகள் மீது, மிகப்பெரிய அளவில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிருப்பதாக ஏற்கனவே, பிப்ரவரி 12ம் தேதி நாடு முழுதும் உள்ள உளவு அமைப்புகளுக்கு தகவல் தெரிவித்ததாக மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இந்த எச்சரிக்கை குறித்து காவல்துறை தலைவர் தில்பாக் சிங், டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் தெரிவித்ததாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே போன்றதொரு தாக்குதலை ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் நடத்திய காணொளியை ஜெய்ஷ்-ஈ-மொஹமத் அமைப்பு வெளியிட்டு, பாதுகாப்பு படையினரை பழி வாங்க இத்தகைய தாக்குதல் காஷ்மீரிலும் விரைவில் நடத்தப்படும் என்று கூறியிருந்ததே, மாநில உளவுத்துறை விடுத்த எச்சரிக்கைக்கு காரணம்.

புது டெல்லியில் உள்ள அதிகாரிகளிடம் முன்னரே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்குமானால், பிப்ரவரி 14 அன்று நடந்த இந்த தாக்குதல் நிச்சயமாக பாதுகாப்பு குறைபாடுதான் என்பது தெளிவு என்று பெயர் வெளியிட விரும்பாத பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

1998இல் நடந்த கார்கில் போருக்கு பிறகு லஷ்கர்-ஈ-தய்பா மற்றும் ஜெய்ஷ்-ஈ-மொஹமத் ஆகிய அமைப்புகள் பல தற்கொலை தாக்குதல்களை நடத்தியுள்ளன. இத்தகைய தற்கொலை தாக்குதலில் ஈடுபடும் தீவிரவாதிகள் பாகிஸ்தான் நாட்டவர்களாவே இருக்கின்றனர்.

இப்போதுதான், புல்வாமாவைச் சேர்ந்த உள்ளூர்வாசியான வகாஸ் கமாண்டோ என்று அழைக்கப்படும் ஆதில் என்பவர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்.

இந்தத் தாக்குதலின் கொடூரம் எந்த அளவுக்கு என்றால், தாக்கப்பட்ட பேருந்து இப்போது இரும்பு மற்றும் ரப்பர் துண்டுகளாக மட்டுமே உள்ளது.

இதில் 44 ரிசர்வ் போலீஸ் படையினர் இருந்தனர். ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு, எதிர்வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு காவல் பணியில் ஈடுபட வீரர்களை ஏற்றிக்கொண்டு அந்த வாகனங்கள் சென்றதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இறந்தவர்களில் பெரும்பாலானோர் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

தேர்தலுக்கு நாடு தயாராகி வரும் சூழலில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளியன்று காஷ்மீர் சென்று பாதுகாப்பு குறித்து ஆராய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஸ்ரீநகர் - லேத்ராபோ நெடுஞ்சாலையில் பல தாக்குதல்களை நடந்திருந்தாலும், இந்த அளவுக்குப் பெரிய தாக்குதல் பல ஆண்டுகளில் இதுவே முதல்முறை.

காஷ்மீரில் நடைபெற்று வரும் வன்முறை மற்றும் தாக்குதல் சம்பவங்களுக்கு தான் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருவதாக பாகிஸ்தான் கருத்துத் தெரிவித்துள்ளது. "இந்த தாக்குதல் சம்பவம் குறித்து உரிய விசாரணைகள் நடப்பதற்கு முன்னதாகவே, இந்திய அரசாங்கமும், ஊடகங்களும் பாகிஸ்தானை குற்றஞ்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று அதன் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

காஷ்மீர் தாக்குதல் நிகழ்வுக்கு உளவுத்துறையின் தோல்வியும் ஒரு காரணம் என்று ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழிடம் கூறியுள்ளார்.

மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தற்போது ஆளுநர் ஆட்சியின்கீழ் உள்ளது.

விமர்சனத்துக்கு உள்ளாகும் இந்திய அரசு

எத்திராஜன் அன்பரசன் பிபிசி தெற்காசிய பிராந்திய ஆசிரியர்

தீவிரவாத ஊடுருவல்கள் சமீப காலங்களில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நரேந்திர மோதி தலைமையிலான மோதி அரசு மார்தட்டிக்கொண்டுள்ள நிலையில், இந்தத் தாக்குதல், காஷ்மீர் பிரச்சனை இன்னும் முடியவில்லை என்பதை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.

இந்தத் தாக்குதலால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றத்தை அதிகரிக்கக்கூடும். பாகிஸ்தான் அரசு ஜெய்ஷ்-ஈ-மொஹமத் அமைப்பை ஆதரிப்பதாக இந்தியா ஏற்கனவே குற்றம்சாட்டியுள்ளது. பாகிஸ்தான் அதை மறுக்கிறது.

படத்தின் காப்புரிமை EPA

காஷ்மீர் போராட்டக் குழுக்கள் மற்றும் பாகிஸ்தான் அரசுடன் இந்தியாவின் இந்து தேசியவாத அரசு பேச்சுவார்த்தையைத் தொடங்கவில்லை என சிலர் விமர்சிக்கின்றனர்.

வன்மையான நடவடிக்கைகள் காஷ்மீர் மக்களை தங்களிடம் இருந்து மேலும் அந்நியப்படுத்திவிடுமோ என்று இந்திய அரசு கருதுகிறது.

எனினும், இன்னும் சில மாதங்களில் தேர்தலை எதிர்கொள்ளும் நரேந்திர மோதி களத்தில் எதையும் செய்யாமல் இருப்பது அவருக்கு நல்லதல்ல.

சிறப்புஅந்தஸ்தை ரத்து செய்த இந்தியா

உலக வர்த்தக நிறுவனத்தின் சரத்துகளின்படி, 1996ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு வழங்கியிருந்த 'மிகவும் நெருக்கமான நாடுகள்' எனும் அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளது.

இதன்மூலம் பாகிஸ்தானுடனான வர்த்தகத்தில் அந்நாட்டுக்கு இந்தியா குறைவான வரிகளை விதித்து வந்தது.

இதுவரை பாகிஸ்தான் இந்தியாவுக்கு இந்த அந்தஸ்தை வழங்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்