புல்வாமா தாக்குதல்: காஷ்மீரில் அமைதி திரும்ப தீவிரவாதிகளை பழி வாங்கினால் போதுமா?

  • அனுராதா பேசின் ஜம்வால்
  • நிர்வாக ஆசிரியர், காஷ்மீர் டைம்ஸ்
புல்வாமா தாக்குதல்: காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவது சாத்தியமா?

பட மூலாதாரம், Reuters

(இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகள். இவை பிபிசியின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.)

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், வியாழனன்று, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியாவின் மத்திய ரிசர்வ் காவல் படையினர் குறைந்தபட்சம் 46 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் உரி என்னும் பகுதியிலுள்ள இந்திய ராணுவ முகாமின் மீதும், 2001ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவை வளாகத்தில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலையும் நினைவுக்கூறும் வகையில் இந்த தாக்குதல் உள்ளது. இருப்பினும், அவ்விரு தாக்குதல்களையும்விட இந்த தாக்குதல் அதிக திட்டமிடலுடனும், வீரியத்துடனும் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) நடந்த இந்த தாக்குதலை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோதி, மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, வி.கே. சிங் உள்ளிட்டோர், இந்த தாக்குதலை நடத்திய "தீவிரவாதிகளுக்கு மறக்கமுடியாத பாடம் கற்பிக்கப்படும்," என்பது போன்ற கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் காஷ்மீரில் காலங்காலமாக இருந்து வரும் பிரச்சனையை புரிந்துகொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது.

எல்லையில் தீவிரவாதிகளுக்கு எதிராகவும், கிளர்ச்சியாளர்களை ஒடுக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ள ராணுவத்தினரின் பாதுகாப்பை உறுதிசெய்வது நாட்டின் முக்கிய அரசு பதவிகளில் இருப்பவர்களின் தலையாய கடமையாகும்.

எவ்வித தாமதமுமின்றி இந்த தாக்குதல் குறித்து தெளிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். அதாவது, இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களை கண்டுபிடிப்பதோடு, அந்த பகுதியில் இருந்த வலுவான பாதுகாப்பை மீறி இந்த தாக்குதல் எப்படி நடைபெற்றது என்பதை கண்டறிய வேண்டும்.

பட மூலாதாரம், RAJNISH PARIHAN

இந்த குறிப்பிட்ட தாக்குதலுக்கு பழிவாங்குவதற்கு எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் நீண்டகால அடிப்படையில் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவதற்கு பயன்படாது. எனவே, இந்திய அரசாங்கம் இதுபோன்ற சம்பவங்களுக்கு அடிப்படையாக இருக்கும் விடயங்கள் சார்ந்த பதிலை கண்டறிய முனைய வேண்டியது அவசியம்.

காஷ்மீரில் செயல்படுத்தப்பட்டு வரும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளின் தோல்வியையே இது காட்டுகிறது. காஷ்மீரில் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிப்பதை விடுத்து, அதிகளவிலான தீவிரவாதிகளை கொன்று குவிப்பதை வெற்றியாக கருதி செயல்படும் இந்திய பாதுகாப்பு அமைப்புகளின் செயல்பாடு அம்மாநில இளைஞர்களை திசை திருப்பியுள்ளது.

போர்க்குணம் என்பது ஒருவித ஆழ்ந்த மனரீதியிலான பிரச்சனையின் வடிவம். மேலும், அது ஒரு தீர்க்கப்படாத, கண்டுகொள்ளப்படாத அரசியல் பிரச்சனை, ஜனநாயக உரிமை மீறல் மற்றும் மனித உரிமை மீறல்களின் புறக்கணிப்பு. எனவே, இந்தியா அரசாங்கம் இந்த பிரச்சனையை ராணுவத்தை மட்டுமே கொண்டு ஒடுக்குவதை தவிர்த்து, அரசியல்ரீதியிலான முன்னெடுப்புகளையும் எடுக்க வேண்டும்.

தற்போது மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசாங்கம் காஷ்மீர் நிலவும் மோதல் நிறைந்த சூழ்நிலையை ராணுவத்தை மட்டுமே கொண்டு கையாள நினைத்ததால் அது பிரச்சனையின் வீரியத்தை மேலும் அதிகரித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

காஷ்மீரில் நிலவும் பிரச்சனைகளின் அடிப்படையை புரிந்துகொண்டு தக்க நடவடிக்கைகளை எடுக்கும் வரை, அங்கு இரத்தம் சிந்துவது நிறுத்தப்படுவதற்கு வழியேதுமில்லை.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சர்வதேச அளவில் முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சியில் பங்கு வகிக்கும் இந்திய அரசாங்கம், தனது சொந்த நாட்டில் நிலவும் முக்கிய, நீண்டகால பிரச்சனை தொடர்பாக கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயங்குவது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

தயக்கத்தை களைத்து இந்தியா பாகிஸ்தானுடனும், காஷ்மீரின் பல்வேறு தரப்பினருடனும், பேச்சுவார்த்தை நடத்துவதோடு மட்டுமின்றி, அம்மாநிலக்குள்ளேயே பல்வேறு விவகாரங்களில் ஒருமித்த கருத்து எட்டப்படுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images

வடக்கு அயர்லாந்தில் வன்முறை வெடித்தபோது அதை பிரிட்டிஷ் அரசாங்கம் இணக்கமான செயல்பாடுகளின் மூலம் கட்டுக்குள் கொண்டுவந்ததை முன்னுதாரணமாக கொண்டு இந்திய அரசாங்கம் செயல்பட வேண்டும்.

புல்வாமா தாக்குதல் ஆயுத போராட்டத்தின் புதிய தொடக்கம் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில், பல விதத்திலும் மோசமான தாக்கத்தை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் பற்றிய தவறான கொள்கைகள் நம்மை ஒரு ஆபத்தான சுழற்சியை நோக்கி தள்ளுவதுடன், இரண்டு தரப்பையும் சேர்ந்தவர்களின் உயிர்களையும் காவு வாங்குகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :