காஷ்மீர்: புல்வாமா உயிரிழப்புகள் நமக்கு உணர்த்துவது என்ன?

காஷ்மீர் படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவின் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதிக்கு 2018ஆம் ஆண்டு மிக மோசமானதாகவே இருந்தது.

ஒரு பக்கம் இந்த தசாப்தத்தில் அதிகபட்ச அளவில் உயிர்ப்பலிகள் நடந்திருப்பது - அங்கு நிலவும் மோதல்களின் புதிய பரிமாணத்தைக் காட்டுவதாக இருந்தது. அடுத்தது அங்கே நிலவும் அரசியல் ஸ்திரமற்ற நிலை.

கடந்த ஆண்டில் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் தீவிரவாதிகள், ராணுவத்தினர் மற்றும் பொது மக்கள் என மொத்தம் 361 பேர் கொல்லப்பட்டிருப்பதாக இந்திய உள்துறை அமைச்சகத்தின் ஓர் அறிக்கை தெரிவிக்கிறது.

ஆனால் அங்கே செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஜம்மு காஷ்மீர் மக்கள் சமூகங்களின் கூட்டணி என்ற மனித உரிமைகள் அமைப்பு இந்த எண்ணிக்கை 586 என்று கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP/Getty

2008க்குப் பிறகு இதுதான் அதிகபட்ச எண்ணிக்கை என்றும், அந்த ஆண்டில் 671 பேர் கொல்லப் பட்டனர் என்றும் இந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

எந்த எண்ணிக்கை சரியானது என்பதைப் பற்றி கணக்கில் கொள்ளாமல் பார்த்தால், கடந்த சில ஆண்டுகளில் படித்த உள்ளூர் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும் போக்கு அதிகரித்து வருவதைக் காண முடிகிறது.

Image caption 2008 முதல் 2018 வரை ஆண்டுதோறும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

மோதல் நடைபெறும் சூழ்நிலைகளில் உள்ளூர் மக்கள் தீவிரவாதிகளுக்குப் பாதுகாப்பாக மேற்கொள்ளும் புதிய உத்திகள், ஆயுதம் ஏந்திய ராணுவத்தினர் ஏறத்தாழ தினமும் தேடுதல் வேட்டைகள் நடத்துவது ஆகியவை - தீவிரமான அரசியல் நெருக்கடியின் அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.

2016 ஆம் ஆண்டில் தீவிரவாதிகளின் கமாண்டராகக் கருதப்பட்ட பர்ஹன் வானி கொல்லப்பட்ட பிறகு இந்தப் போக்குகள் அதிகரித்துள்ளன.

ஏன் வன்முறை அதிகரித்துக் கொண்டிருக்கிறது?

இந்தியாவின் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதியில் நீண்ட காலமாகவே நிலவும் அரசியல் ஸ்திரமற்ற நிலை, 2018ல் உச்சநிலையை அடைந்தது.

அந்தப் பகுதி குறித்து மத்திய அரசின் கடினமான கொள்கைகளே இதற்குக் காரணம். இதனால் வன்முறை அதிகரித்துள்ளது.

''ஜம்மு -காஷ்மீரில், குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் இப்போதுள்ள சூழ்நிலையானது, அரசியல் அணுகுமுறையில் உள்ள குழப்பத்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதற்கு தெளிவான உதாரணமாக உள்ளது,'' என்று டெல்லியைச் சேர்ந்த த பிரிண்ட் (The Print) இணையதளத்தின் கட்டுரையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டில் மக்கள் ஜனநாயகக் கட்சியும் (பி.டி.பி.), மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் (பா.ஜ.க.) சேர்ந்து அந்த மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைத்ததில் இருந்தே வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.

படத்தின் காப்புரிமை Reuters

இரு கட்சிகளும் கொள்கை ரீதியில் எதிர் துருவங்களாக இருப்பவை - இந்திய அரசியல் சாசன வரம்புக்கு உள்பட்டு காஷ்மீர் மக்கள் விரும்பும் தன்னாட்சி நிலை என்பதை ஆதரிக்கிறது பி.டி.பி. ஆனால் அதுபோன்ற எந்த தனிப்பட்ட அந்தஸ்தும் தரக் கூடாது என்ற கொள்கையைக் கொண்டிருப்பது பா.ஜ.க.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும், இந்திய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை ரத்து செய்வதற்கு பாஜக மேற்கொண்ட முயற்சி காரணமாக, இந்திய ஆட்சிக்கு எதிராக போராட்டங்கள் அதிகரித்தன. இதனால் 2018 ஜூன் மாதம் பி.டி.பி. உடனான கூட்டணி முறிந்து, கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.

அதன் பிறகு காஷ்மீர் மாநிலம் மத்திய ஆட்சியின் கீழ் வந்தது. ஆனால் வன்முறை மேலும் மோசமாகிவிட்டது - ``ஆப்பரேசன் ஆல் அவுட்'' என்ற பெயரில் தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு புதிய ஆட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டதே இதற்குக் காரணம் என சில அரசியல்வாதிகள் கூறுகின்றனர். இந்தத் தீவிரவாதிகளில் பலரும் உள்ளூர் இளைஞர்களாக இருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், அது போன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று, காஷ்மீரில் உள்ள மத்திய ஆட்சி நிர்வாகத்தின் மூத்த பொறுப்பில் இருக்கும் ஆளுநர் சத்யபால் மாலிக் மறுப்பு தெரிவித்துள்ளார்.

''இந்தக் குழந்தைகள் (தீவிரவாதிகள்) திரும்ப வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர்களுக்காக என்ன செய்ய முடியுமோ அவற்றைச் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்,'' என்று 2019 ஜனவரி 15 ஆம் தேதி பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு மாலிக் கூறியதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இருந்தபோதிலும், ''இளைஞர்களை இந்த தேசத்தை மிக கவனமாக நோக்குகிறார்கள். அவர்கள் படித்திருப்பதால், தீவிரவாதியாக மாறுவது என்பதுதான் முதலில் அவர்களுடைய மனதுக்குத் தோன்றுகிறது,'' என்று காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா டெல்லியைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த நெருக்கடி காஷ்மீர் இளைஞர்களை எந்த வகையில் பாதிக்கிறது?

இளைஞர்களிடம் நம்பிக்கையை உருவாக்கும் வகையில் மத்திய அரசிடம் கொள்கைகள் இல்லாதது அல்லது மாநிலத் தலைவர்கள் இல்லாதது ஆகிய காரணங்களால் இளைஞர்களின் கோபம் அதிகரித்துள்ளது. காஷ்மீர் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இளைஞர்களாக இருக்கின்றனர்.

''இன்றைக்கு காஷ்மீர் இளைஞர்களுக்கு, தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது,'' என்று ஸ்ரீநகரைச் சேர்ந்த கிரேட் காஷ்மீர் (Great Kashmir) என்ற பத்திரிகை கூறியுள்ளது.

''உதட்டளவில் கூறப்படும் உறுதிமொழிகளைக் கேட்டு இளைஞர்கள் வெறுப்படைந்துவிட்டனர். வாழ்வதற்கு நல்ல இடமாக காஷ்மீரை மாற்றுவதற்கு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்,'' என்று வேறொரு கட்டுரையில் அந்தப் பத்திரிகை கூறியுள்ளது.

காஷ்மீர் மக்கள் பலரின் நம்பிக்கையைப் பெற்றிருந்த பிரிவினைவாத இயக்கமான ஹுரியத் மாநாட்டு கூட்டணி தலைவர்கள் மீது கடந்த சில ஆண்டுகளாக வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

''ஹுரியத் தலைவர்கள் திரும்பத் திரும்பத் தோல்வி அடைந்துவிட்டார்கள். பெரும்பாலான காஷ்மீர் மக்கள் அதை அறிந்திருக்கிறார்கள்'' என்று தேசிய அளவிலான டெய்லி ஒ (Daily O) என்ற இணையதளத்தில் வெளியான ஜுனைத் கத்ஜுவின் கட்டுரையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பிரிவினைவாதிகள் சிலர் இதை ஒப்புக்கொள்கின்றனர். ''இந்தச் சூழ்நிலையின் முன்னணியில் இருக்கும் இளைஞர்களை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை'' என்று பிரிவினைவாதத் தலைவர் மிர்வாஸ் உமர் பாரூக் கூறியதாக த பிரிண்ட் (The Print) தெரிவித்துள்ளது.

இளைஞர்கள் எந்த வகையில் புதிய வடிவிலான வன்முறையைக் கையில் எடுக்கிறார்கள்?

பல இளைஞர்கள் இப்போது வெளிப்படையாகவே தீவிரவாதிகளை ஆதரிக்கிறார்கள் - சமூக வலைதளங்களில் மட்டும் அவர்கள் நிற்கவில்லை.

படத்தின் காப்புரிமை BILAL BAHADUR
Image caption கல்லெறியும் இளம் பெண்களை கலைப்பதற்கு கண்ணீர் புகை உபயோகித்தல்

ராணுவத்தினருடன் மோதல் ஏற்படும்போதும் ஆதரவு அளிக்கிறார்கள். தாக்குதலில் சிக்கிக் கொள்ளும் தீவிரவாதிகளை மீட்பதற்கு முயற்சிக்கிறார்கள், அப்போது நடைபெறும் சண்டையில் உயிரிழக்கவும் செய்கிறார்கள்.

உண்மையில் தீவிரவாத குழுக்களில் சேரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ``2017 ஆம் ஆண்டில் காஷ்மீர் இளைஞர்கள் 128 பேர் தீவிரவாத குழுக்களில் இணைந்தனர். 2016ல் இது 84 ஆகவும், 2015ல் இது 83 ஆகவும், 2014ல் இது 63 ஆகவும் இருந்தது'' என்று தேசிய அளவில் வெளியாகும் பைனான்சியல் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

மேலும் 2018 ஆம் ஆண்டில் மட்டும் உயர் கல்வித் தகுதி பெற்ற சிலர் தீவிரவாத குழுக்களில் சேர்ந்து, மோதல்களின்போது கொல்லப் பட்டிருக்கிறார்கள் என்று, தேசிய அளவில் வெளியான செய்திகளை மேற்கோள் காட்டுகிறார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மெகபூபா முஃப்தி

இந்தச் சூழ்நிலையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, மாநில இளைஞர்களை தீவிரவாத குழுக்களுக்கு தேர்வு செய்வதற்கு, உலக அளவில் இயங்கும் ஐ.எஸ். மற்றும் அல்-கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகள் முயற்சி செய்கின்றன.

கடந்த சில ஆண்டுகளில் சில இளைஞர்கள் இந்த இரு ஜிகாதி அமைப்புகளிலும் சேர்ந்துள்ளனர். காஷ்மீர் பிரச்சினையை தேசிய இயக்கம் என்ற நிலையில் இருந்து ஷரியத் சட்டத்தை நிர்மாணிக்கும் பிரச்சினையாக மாற்றுவதற்கு தீவிரவாத அமைப்புகள் ரொம்பவும் சிரமப்பட வேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் பலர் கூறினாலும், இளைஞர்கள் இந்த அமைப்புகளில் சேர்ந்துள்ளனர்.

பூகோள ரீதியிலான அமைப்பு காரணமாகவும் சூழ்நிலை சிக்கலாக இருக்கிறது - காஷ்மீர் எல்லை பிரச்சினை குறித்து இந்தியா, பாகிஸ்தான் இடையே பலன்தரக் கூடிய தீர்வு ஏற்படாததால், எந்த முன்னேற்றமும் ஏற்படாததும் இதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் தேர்தலை எதிர்நோக்கியுள்ள காஷ்மீரில், - தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் - தேர்தலுக்கு முன்னதாக வன்முறைகள் தொடரும் அல்லது மோசமாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்த நெருக்கடி, ``கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு புதிய, மோசமான நிலையை ஏற்படுத்தும், அச்சுறுத்தலாக உருவாகும்'' என்று த வெயர் (The Wire) இணையதளம் கூறியுள்ளது.

அதிருப்தியில் இருக்கும் காஷ்மீர் இளைஞர்களுக்கான, மத்திய அரசின் கொள்கைகள் எதுவும் இல்லை.

ஜனவரி 9ஆம் தேதி காஷ்மீரைச் சேர்ந்த ஷா பசல் என்ற இளைஞர், செல்வாக்கு மிகுந்த இந்திய ஆட்சிப் பணி பொறுப்பில் இருந்து ராஜிநாமா செய்து, புதிய விவாதத்தை தொடங்கி வைத்துள்ளார்.

இந்தியாவுடன் இருக்கும் வரை காஷ்மீர் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்காது என்று அவர் கூறியுள்ளார்.

ஆட்சிப் பணியில் சேர விரும்பும் காஷ்மீர் இளைஞர்கள் பலருக்கு பசல் முன்மாதிரியான நபராக முன்பு கருதப்பட்டார்.

ஆனால் காஷ்மீரில் ''தொடர்ந்து நடைபெறும் கொலைகள்'' சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறி அவர் ராஜிநாமா செய்துள்ளார். ஆனால் இது ''பொய்களின் மூட்டை'' என்று கூறி பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், ``அவருடைய அறிக்கையில் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையானவை. பாஜக அரசின் மீது குற்றஞ்சாட்டுபவை. அவருடைய கவலை மிகுந்த, உறுதியான குரலை உலகம் கவனத்தில் எடுத்துக் கொள்ளும்'' என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

காஷ்மீர் தேர்தலுக்குப் பிறகு எப்படி இருக்கும் என்று இந்தியாவில் தேசிய அளவிலான Times Now தொலைக்காட்சி இணையதளத்தில் வெளியிட்டுள்ள கட்டுரையில், ``முந்தைய அனுபவங்களை வைத்துப் பார்த்தால், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு வந்தால் பெரிதாக எதுவும் நடந்துவிடாது'' என்று கூறியுள்ளது.

``அரசியல்வாதிகளும், பிரிவினைவாதிகளும், ஒருவர் மீது இன்னொருவர் மீண்டும் ஒரு முறை குற்றச்சாட்டுகளைக் கூறுவார்கள். உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று இரு தரப்பினரும் குற்றஞ்சாட்டுவார்கள். காஷ்மீரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் மந்திரக் கோல் தங்களிடம் இருப்பதாக இரு தரப்பினரும் கூறுவார்கள்'' என்று அந்தக் கட்டுரை முடிகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :