காஷ்மீர்: புல்வாமாவில் சி.ஆர்.பி.எஃப் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி யார்?

தற்கொலை தாக்குதல்தாரி படத்தின் காப்புரிமை VIDEO GRAB

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரின் புல்வாமாவில் வியாழனன்று நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஆதில் அஹ்மத் என்ற 21 வயது இளைஞர்தான் இந்த தீவிரவாத தாக்குதலை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.

புல்வாமாவுக்கு அருகில் குண்டிபாக் என்ற ஊரில் வசிக்கும் ஆதில் அஹ்மத், கடந்த ஆண்டு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பில் இணைந்தார்.

மாநில தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து 25 கிலோமீட்டர் தெற்கில் உள்ள இடத்தில் இந்த கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் ஆதிலின் கிராமம் இருக்கிறது.

வியாழனன்று, ஒன்றன்பின் ஒன்றாக அணி வகுத்துச் சென்று கொண்டிருந்த சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்புப் படையினரின் வாகனங்களில், பேருந்து ஒன்றை குறிவைத்து மோதிய வெடிபொருட்கள் நிரம்பிய ஸ்கார்பியோ கார் வெடித்துச் சிதறியது.

சுமார் 350 கிலோ அளவிலான வெடிபொருட்கள் இருந்த அந்தக் கார் மோதியபோது, ஏற்பட்ட வெடிச் சத்தம் பல கிலோமீட்டர் அளவிற்கு கேட்கக்கூடியதாக இருந்தது என இந்த கொடூர தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

தற்கொலைத் தாக்குதல்

1998இல் கார்கில் போருக்கு பிறகு, ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா ஆகிய தீவிரவாத அமைப்புகள் பல தற்கொலைத் தாக்குதல்களை நடத்தின.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஜனவரி நான்காம் தேதியன்று அவந்திபுராவில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்

ஆனால், இதுபோன்ற தற்கொலைத் தாக்குதல்களை நடத்துபவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.

தற்போது வியாழனன்று நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலை நடத்தியது புல்வாமாவைச் சேர்ந்த ஆதில் என்று அழைக்கப்படும் வகாஸ் கமாண்டோ என்று ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலின் வீரியம் எந்த அளவுக்கு இருந்ததென்றால், வெடிபொருட்கள் கொண்ட வாகனம் மோதியதால் சிதைந்த சி.ஆர்.பி.எஃபின் பேருந்து உருக்குலைந்து, இரும்பும், ரப்பர் துண்டுகளும் கொண்ட சிதைபாடுகளாக ஆங்காங்கே சிதறிக் கிடந்தது.

இந்த கொடூரமான தாக்குதலை நடத்திய ஆதிலின் தந்தை குலாம் ஹசன், மிதிவண்டியில் வீடு வீடாக சென்று துணிகளை விற்கும் வேலை செய்பவர்.

அம்மா அப்பா மற்றும் இரண்டு சகோதரர்கள் கொண்ட ஆதில், 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பில் இணைந்தபோது 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவன்.

காஷ்மீரின் தெற்குப் பகுதியில் கடந்த ஓராண்டில் தீவிரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். பி.டி.ஐ செய்தி நிறுவனத்தின்படி, கடந்த ஆண்டு பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 230 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இவ்வாறான தீவிரமான நடவடிக்கைகளுக்கு பிறகும், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் மேலும் 240 தீவிரவாதிகள் இருக்கலாம் என்று இந்திய பாதுகாப்புப்படை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

ஜெய்ஷ்-இ-முகமதில் இணைந்த சகோதரன்

ஆதிலின் ஒன்றுவிட்ட சகோதரன் சமீர் அகமதும் தீவிரவாதி என்றும் கூறப்படுகிறது. ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பில் ஆதில் இணைந்த அடுத்த நாளே சமீரும் அந்த அமைப்பில் இணைந்தான் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த சமீர், படிப்பை விட்டு விலகி, தீவிரவாத அமைப்பில் இணைந்ததாக கூறப்படுகிறது.

ஆதிலின் குண்டிபாக் கிராமத்தில் அவனின் மரணத்திற்கான இறுதித் தொழுகையான நமாஜ்-இ-ஜனாஜா மூன்று முறை நடத்தப்பட்டது. அப்போது அங்கு பெருமளவிலான மக்கள் கூடியிருந்தனர்.

தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக, ஆதில் ஒரு வீடியோ எடுத்துள்ளார். அதில், தான் தற்கொலைத் தாக்குதல் நடத்தவிருப்பதாகவும், தன்னை ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் காமாண்டர் என்றும் ஆதில் தெரிவித்துள்ளான். இதைத் தவிர ஆதிலின் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்