காஷ்மீர் தாக்குதல்: தீவிரவாதிகளுக்கு இழப்பீடு வழங்குவதாக காங்கிரஸ் அறிவித்ததா? #BBCFactCheck

செய்தித்தாள் பதிவு படத்தின் காப்புரிமை Vikas Pandey
Image caption இந்தி செய்தித்தாள் பதிவு

"தீவிரவாதிகளின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாயை காங்கிரஸ் வழங்கும்" என்கிற ஒரு செய்தித்தாளின் புகைப்படப் பதிவு தீவிர வலது சாரி ஊடகக் குழுக்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை இந்தியாவின் கட்டுப்பாட்டு காஷ்மீரின் புல்வாமாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர், இந்த பதிவு வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

சி.ஆர்.பி.எஃப் வாகன அணி மீது தற்கொலை குண்டுதாரி நடத்திய இந்த தாக்குதலில் குறைந்தது 46 இந்திய படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த பகிர்வு ஆயிரக்கணக்கான முறை பகிரப்பட்டு, பார்க்கப்பட்டுள்ளது.

"நமோ ஃபேன்" மற்றும் "பிஜேபி மிஷன் 2019" போன்ற ஃபேஸ்புக் குழுக்களில் இந்த புகைப்படம் கடந்த 48 மணிநேரங்களில் பலமுறை பகிரப்பட்டுள்ளது.

ஆனால், எமது புலனாய்வில் தற்போதைய காஷ்மீர் தாக்குதலுக்கும், இந்த செய்திக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

படத்தின் காப்புரிமை EPA

இந்த செய்தி தகவல் 2018ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் ஹாஜி சாகீர் சாயீர் கான் பற்றியதாகும். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், தீவிரவாதிகளின் குடும்பத்தினருக்கு பண உதவி வழங்கப்படும் என்று அவர் கூறியிருந்தார்.

"தீவிரவாதத்தின் பெயரில் கொல்லப்பட்ட குற்றமிழைக்காதவரின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீட்டுத்தொகை வழங்குவோம். அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலை வழங்குவோம். தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தில் சிறையில் அடைக்கப்பட்ட குற்றமறியாதோரை விடுதலை செய்வோம். மாநிலத்தில் அமைதியை மீட்டேடுப்போம்," என்று ஹாஜி சாகீர் சாயீர் கான் தெரிவித்திருந்தார்.

ஆனால், அதிகாரபூர்வமற்ற அறிக்கை வழங்கியதற்காக பின்னர் கட்சியிலிருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images

காங்கிரஸ் கட்சியின் காஷ்மீர் செய்தி தொடர்பாளர் ரவீந்தர் ஷர்மா பிபிசியிடம் பேசுகையில், காங்கிரஸ் கட்சி இந்த கருத்தை ஏற்கவில்லை. நாட்டின் ஒன்றுமைக்கு எதிரான எதையும் கட்சி ஆதரிக்காது என்று அவர் கூறினார்.

"தீவிரவாதத்தை எதிர்ப்பதில் நாங்கள் இந்திய நாட்டுக்கு ஆதரவாக இருக்கிறோம்" என்று அவர் மேலும் கூறினார்.

ஹாஜி சாகீர் சாயீர் கான் அவரது சர்ச்சைக்குரிய அறிக்கையால் இடைநீக்கம் செய்யப்பட்டதை ஜம்மு - காஷ்மீர் பிரதேச குழுவின் பொதுச் செயலாளர் விக்ரம் மல்கோத்ரா உறுதி செய்தார்.

"கட்சியின் கொள்கைகள் பற்றி பேச சாயீர் கானுக்கு அதிகாரம் இல்லை. முட்டாள் தனமான அறிவிப்பை வெளியிட்டதற்காக அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

"எந்த வடிவத்திலான தீவிரவாதத்தையும் காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்வதில்லை," என்று அவர் மேலும் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :