காஷ்மீரில் போராளிகளாக தடம் மாறும் மாணவர்கள் - யார் பொறுப்பு?

புல்வாமா தாக்குதல்: போராளிகளாக உருமாறும் மாணவர்கள் - யார் பொறுப்பு? படத்தின் காப்புரிமை HILAL SHAH
Image caption சித்தரிக்கும் கோப்புப்படம்

2018ஆம் ஆண்டின் தொடக்கப்பகுதியில் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் பாம்போர் பகுதியிலுள்ள மத்திய ரிசர்வ் காவல் படையின் முகாமிற்குள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த ஆயுத போராளிகள் அங்கிருந்த ஐந்து வீரர்களை கொன்றனர். எதிர்த்தாக்குதலின்போது அந்த இரண்டு ஆயுதப போராளிகளும் கொல்லப்பட்டனர்.

உயிரிழந்த இரண்டு ஆயுத போராளிகளில், 15 வயதான ஃபார்டீன் அஹ்மத் காண்டேவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. காஷ்மீர் ஆயுத போராளிகள் குழுவில் சமீப காலத்தில் இணைந்த மிகவும் இளவயது போராளி காண்டேதான். பாம்போரில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக, அதற்காக காரணம் குறித்து விளக்கும் காணொளி பதிவை காண்டே உருவாக்கியிருந்தார்.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் லேத்போரா என்ற பகுதியில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தில் இணைந்து ஐந்து மாதங்களே ஆன, 21 வயதான ஆதில் அகமது நடத்திய தாக்குதலில் குறைந்தது 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

அதேபோன்று, கடந்த ஆண்டு காஷ்மீரின் லோலாப் வாலி என்னும் பகுதியை சேர்ந்த மனான் வானி என்னும் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர் தனது படிப்பை இடைநிறுத்திவிட்டு ஆயுத போராளிகள் இயக்கமான ஹிஸ்புல் முஜாஹிதீனில் சேர்ந்த பத்தே மாதங்களில் என்கவுண்டர் ஒன்றில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் முனைவர்பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மனான் வானி, படிப்பில் சிறந்து விளங்கினார்.

அதேபோன்று, காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பேராசிரியராக பணியாற்றிய ரஃபிக் அஹ்மத் டார் என்பவர் ஆயுத போராளிகள் இயக்கத்தில் இணைந்த அடுத்த சில மணிநேரங்களிலேயே கொல்லப்பட்டார்.

குறிப்பாக கடந்த நான்காண்டுகளில் மட்டும், காஷ்மீரின் தென் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இதுவரை உள்ளதாக அளவில் ஆயுத போராளிகள் இயக்கங்களில் இணைந்து வருகின்றனர். அவர்களில் பெரும்பான்மையானோர் என்கவுண்டர்களில் கொல்லப்படும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

கடந்த 2018ஆம் ஆண்டு காஷ்மீரை சேர்ந்த 191 இளைஞர்கள் ஆயுத போராளிகளாக உருவெடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 2017ஆம் ஆண்டைவிட 65 பேர் அதிகம்.

இந்நிலையில், சமீப காலத்தில் மிகவும் அதிகபட்சமாக கடந்த 2018ஆம் ஆண்டு நடத்தப்பட்ட என்கவுண்டர்களில் மட்டும் 250க்கும் மேற்பட்ட ஆயுத போராளிகள் கொல்லப்பட்டதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு பாதுகாப்பு படையினருக்கும் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தினருக்கும் இடையே நடந்த சண்டையில் அதன் தலைவர் புர்ஹான் வானி கொல்லப்பட்ட பிறகு அதிகளவிலான இளைஞர்கள், போராளிகள் இயக்கங்களில் இணைய தொடங்கியதாக ஜே.கே.சி.சி.எஸ் என்னும் அமைப்பின் ஆண்டறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அதுமட்டுமின்றி, கடந்த சில ஆண்டுகளாக போராளிகள் இயக்கங்களில் இணையும் இளைஞர்கள், கையில் துப்பாக்கிகளுடன் இருக்கும் தங்களது புகைப்படங்களில் சமூக வலைதளங்களில் பகிரும் போக்கும் அதிகரித்துள்ளது.

தங்களது மாநிலத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கான தீர்வை அரசியலின் மூலமாக எட்டமுடியாத சூழ்நிலை நிலவுவதால்தான் இளைஞர்கள் கையில் துப்பாக்கிகளை ஏந்துகிறார்கள் என்று விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

காஷ்மீரை சேர்ந்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான குர்ஷீத் வானி, "நான் சமீபத்தில் பார்த்த காணொளியில், இளைஞர் ஒருவர் தான் தினந்தினம் ராணுவ முகாமுக்கு வரவழைக்கப்பட்டு, சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாக கூறுகிறார். இதன் மூலம் காஷ்மீரை சேர்ந்த இளைஞர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. அதன் காரணமாக ஏற்படும் மன அழுத்தமும், சித்தரவதையை அனுபவிக்கும் சூழலே அவர்களை துப்பாக்கிகளை நோக்கி திசைதிருப்புகிறது" என்று கூறுகிறார்.

"2008 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் மக்கள் தங்களது கோப அலைகளை வெளிப்படுத்தும் விதம் எப்படி மறுபாடடைந்துள்ளது என்பதை எண்ணிப்பாருங்கள். மக்களின் பிரச்சனையை அறிந்துகொள்வதற்கு கூட முயற்சிகள் எடுக்கப்படாத நிலையில், அங்கு அமைதியை மட்டும் நிலைநாட்டுவது எப்படி சாத்தியமாகும்? காஷ்மீரில் நிலவும் பிரச்சனையின் அடிப்படையை புரிந்துகொள்ளாதவரை இதில் எவ்வித முன்னேற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது" என்று அவர் மேலும் கூறினார்.

"தற்போது காஷ்மீரில் நிலவும் சூழ்நிலை புதியதல்ல. இது 1990ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வரும் செயல்பாட்டின் நீட்சியாகவே நான் பார்க்கிறேன். துப்பாக்கியின் மூலம்தான் தங்களது பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும் என்று இருந்த போராளிகள் எண்ணம் மீண்டும் மேலெழ ஆரம்பித்துள்ளது என்பதே உண்மை" என்று கூறுகிறார் காஷ்மீர் மத்திய பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் தலைவரான பேராசிரியர் நூர் மொஹம்மத் பாபா.

படத்தின் காப்புரிமை Getty Images

"போராளிகளை கொன்று குவிப்பது என்பது கண்டிப்பாக இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவராது. போராளிகள் தானாக உருவாவதில்லை. தற்போது மிகவும் கவனிக்கத்தக்க விடயம் என்னவென்றால், முன்னெப்போதும் இல்லாத வகையில் கல்வியில் சிறந்து விளங்கும் இளைஞர்கள்கூட அதிகளவில் போராளிகளாக உருவெடுத்து வருகிறார்கள்."

"காஷ்மீரின் அடிப்படை பிரச்சனையை அரசியல் மற்றும் கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ளாமல், போராளிகளை ராணுவத்தை கொண்டு ஒடுக்குவதற்கு அரசு முனைப்பு காட்டுமானால், அது தற்போதைய சூழ்நிலையை மேலும் மோசமாக்கும்," என்று பேராசிரியர் நூர் மொஹம்மத் மேலும் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்