காஷ்மீர்: புல்வாமா தாக்குதலை முன்கூட்டியே தடுத்திருக்க முடியுமா?

காஷ்மீர் படத்தின் காப்புரிமை Reuters

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரின் புல்வாமாவில் நடைபெற்ற தீவிரவாதிகளின் தற்கொலைத் தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்த சுமார் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

வெடிபொருட்கள் நிறைந்த வாகனத்தை பாதுகாப்பு படையினரின் வாகனத்தின் மீது மோதி தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல், ஆஃப்கானிஸ்தான் அல்லது இராக்கை நினைவுபடுத்துகிறது.

தற்கொலைத் தாக்குதலுக்கு முன்னர் துணை ராணுவப்படையினர் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த கொடூர தாக்குதல் பற்றி விசாரணை நடைபெற்றாலும், இந்த தாக்குதல் நடைபெற்றது எப்படி? எந்த இடத்தில் குறைபாடுகள் ஏற்பட்டன என பல கேள்விகள் எழுகின்றன.

ஏ.எஃப்.பி நியூஸிடம் பேசிய ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மலிக், "பெருமளவிலான வெடிபொருட்கள் நிரம்பிய வாகனம் சுற்றிக் கொண்டிருந்து எப்படி நிர்வாகத்தின் கண்களில் இருந்து தப்பியது என்பது வருத்தப்படச் செய்கிறது," என்று தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய சி.ஆர்.பி.எஃப் தலைவர் ஆர்.ஆர்.பட்நாகர், ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு சென்றுக் கொண்டிருந்த சி.ஆர்.பி.எஃப் வாகனங்களில் 2500 வீரர்கள் இருந்தாக என்று தெரிவித்தார்.

இது குறித்து பேசிய மலிக், "துணை ராணுவப்படையினரின் வாகன அணிவகுப்பு எதோவொரு இடத்தில் உடைக்கப்பட்டிருக்கிறது. 2500 பேர் ஒன்றாக செல்ல முடியாது. ஐ.ஈ.டி குண்டு வெடிப்பு நடைபெறுவதாக இருந்தால் வாகனங்கள் வேகமாக சென்று கொண்டிருக்க வேண்டும். ஆனால், வாகனங்கள் அணிவகுத்துச் செல்லும்போது, அவை மிதமான வேகத்தில்தான் செல்லும். யாரோ வந்து வாகன அணிவகுப்பின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் என்னும்போது, நமது தரப்பில் எங்கோ தவறு நடைபெற்றிருப்பது தெளிவாக தெரிகிறது," என்று கூறுகிறார்.

சி.ஆர்.பி.எஃப் படைக்குள் இருந்தே தீவிரவாதிகளுக்கு உதவி கிடைத்திருக்கலாம் என்ற சாத்தியங்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மலிக், "உளவாளிகள் எல்லா இடங்களிலும் இருக்கின்றனர்," என்று சொல்கிறார்.

இந்த தற்கொலைத் தாக்குதல் பற்றிய பல்வேறு அம்சங்கள் குறித்து சி.ஆர்.பி.எஃப்., பி.எஸ்.எஃப் மற்றும் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளிடம் பிபிசி பேசியது.

படத்தின் காப்புரிமை Getty Images

இதுபோன்ற தாக்குதல் முதன்முறையாக நடந்திருப்பதை சுட்டிக்காட்டும் அதிகாரிகள், இதை தடுக்க, காஷ்மீர் பள்ளத்தாக்கில் செயல்படும் முறையை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

இதற்கு முன்னதாக, ஐ.ஈ.டி வெடிப்பு அல்லது துப்பாக்கிச்சூடு போன்ற முறைகளில் பள்ளத்தாக்கில் படைவீரர்கள் தாக்குதல் நடைபெறும் என்று சி.ஆர்.பி.எஃப்பின் முன்னாள் தலைவர் திலீப் திரிவேதி கூறுகிறார். இதை தவிர்ப்பதற்காக வாகன அணிவகுப்பு செல்லும் பாதைகளில் தீவிர பாதுகாப்பு சோதனை எனப்படும் ஆர்.ஓ.பி (Road opening party) மேற்கொள்ளப்படும்.

சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் இந்த ஆர்.ஓ.பி நடைமுறையை அதிக அளவில் பயன்படுத்துவார்கள்.

ராணுவ வீரர்கள் செல்லும் பாதை முற்றிலுமாக சோதிக்கப்பட்டு பாதுகாப்பை உறுதி செய்வது இந்த ஆர்.ஓ.பி பிரிவினவரின் பணியாகும்.

படையினர் செல்லும் வழிகள், சாலைகள், பாலங்களின் ஓரங்களில் இருக்கும் கடைகள் மற்றும் கிராமங்களில், மோப்ப நாய், நவீன உபகரணங்களை பயன்படுத்தி வெடிபொருட்கள் இருக்கிறதா என்பதை பரிசோதிப்பார்கள். மேலும், கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதை கண்டறிவதற்காக, அந்தப் பகுதிகளில் நிலத்தில் எதாவது குழிகள் தோண்டப்பட்டிருக்கிறதா என பல்வேறுவிதமான சோதனைகளையும் மேற்கொள்வார்கள்.

இந்த ஆர்.ஓ.பி பிரிவினரின் பணி, வெறும் சாலை மற்றும் அதையொட்டிய கிராமங்களில் சோதனைகளை மேற்கொண்டு பாதுகாப்பை உறுதிபடுத்துவது மட்டுமல்ல, சாலையிலிருந்து தொலைவில் இருக்கும் பகுதிகளையும் தங்கள் கண்காணிப்பு வலையத்திற்குள் கொண்டுவரும் பணியையும் அவர்கள் மேற்கொள்வார்கள் என்கிறார் எல்லைப் பாதுகாப்புப் படையின் முன்னாள் தலைவர் பி.கே மிஷ்ரா.

ஆனால் நெடுஞ்சாலைகளில் இதுபோன்ற கடுமையான சோதனைகளை மேற்கொள்வது சுலபமானதல்ல என்கிறார் மிஷ்ரா. இந்த ஆர்.ஓ.பி பிரிவில் ஆயிரக்கணக்கான வீரர்கள் பணிபுரிவதாக மிஷ்ரா கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை Reuters

ஆனால் திலீப் திரிவேதியின் கருத்துப்படி, "முதன்முறையாக வெடிபொருட்கள் நிரம்பிய வாகனம் மூலம் தற்கொலைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதை யாருமே எதிர்பார்க்கவில்லை".

எனவே இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், இந்த புதிய உத்தியிலான தாக்குதலில் உயிரிழப்பை தவிர்த்திருக்க முடியாது. எனவே, தீவிரவாதத்தை தவிர்க்க வேறு புதிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

உளவுத்துறையின் குறைபாடு

இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடக்கம் முதலே பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக திலீப் கருதுகிறார்.

"இவ்வளவு அதிக அளவிலான வெடிமருந்துகள் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது எப்படி? காரில் டெடனேட்டர்கள் பொருத்தப்பட்டதும், காரில் ஏற்றப்பட்டதும் எப்படி? பாதுகாப்புப் படைகளின் வாகனங்கள் அருகே அந்த கார் எப்படி வந்தது? இதுபோன்ற பல கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை," என்று சந்தேகங்களை எழுப்புகிறார் திலீப்.

"தாக்குதல் நடத்துவதற்காக வாகனம் மற்றும் வெடிபொருட்களை தயார் செய்வதற்கு பல நாட்கள் ஆகியிருக்கும். ஆனால் இதுபற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை என்பது கவலைக்குரிய விஷயம்," என்கிறார் ராணுவத்தின் முன்னாள் தலைவர் வி.பி மலிக்.

இதுபோன்ற விஷயங்களை கண்காணித்து உளவுத் தகவல்களை வழங்கவேண்டியது உள்ளூர் உளவுத்துறை அதிகாரிகளின் பொறுப்பு. அவர்கள் இதில் தவறியிருக்கிறார்கள்.

படத்தின் காப்புரிமை Reuters

தீவிரவாத அச்சுறுத்தல் அதிகமாக இருக்கும் தெற்கு காஷ்மீர் பகுதியில் பெருமளவிலான வீரர்கள் ஒரே நேரத்தில் பயணிப்பது பாதுகாப்பானதா என்ற கேள்வியும் எழுகிறது.

இது பாதுகாப்பானது இல்லை என்று உறுதியாக பதிலளிக்கிறார் வி.பி மலிக். பனிப்பொழிவின் காரணமாக ஸ்ரீநகருக்கு பணிக்கு சென்றுக் கொண்டிருந்த வீரர்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டதால்தான் பெருமளவிலான வீரர்கள் ஒரே நேரத்தில் கிளம்ப வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என்கிறார் அவர்.

சில மாதங்களுக்கு முன்பு வரை, ராணுவத்தினரின் வாகன அணிவகுப்பு செல்லும் சமயத்தில், பொதுமக்களின் வாகனங்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அரசியல் ரீதியிலான அழுத்தங்களுக்கு பிறகு அந்த நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு, ராணுவ வாகனங்கள் அணிவகுத்துச் செல்லும்போது, பிற வாகனங்கள் செல்வதற்கும் அனுமதிக்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்டுகிறார் மலிக். தற்போதைய தாக்குதலுக்கு பிறகு புதிய நடைமுறை மாற்றப்பட்டுவிட்டதாக அவர் கூறுகிறார்.

"வாகனங்கள் அதிக அளவில் செல்லாவிட்டாலும், வெடிபொருட்கள் கொண்ட கார் வருவதை எப்படி தடுத்திருக்க முடியும்?" என்று கேட்கிறார் சி.ஆர்.பி.எஃப்பின் முன்னாள் தலைவர் துர்கா பிரசாத்.

வெடிபொருட்கள் நிரம்பிய கார் சிறிது தூரம் வரை நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த வாகன அணிவகுப்புடனே சென்றுக் கொண்டிருந்தது. ஒரு இடத்தில் இணைப்புச் சாலையில் பிரிந்து சென்று, நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த படையினரின் பேருந்தின் மீது மோதியது.

"இந்த வாகனத்தை நிறுத்தியிருக்க வேண்டுமானால், நெடுஞ்சாலையின் இணைப்புச் சாலையில் போக்குவரத்தை நிறுத்திவிட்டு, படையினரின் வாகனங்கள் சென்றபிறகு தனியார் வாகனங்கள் செல்ல அனுமதித்திருக்க வேண்டும்" என்கிறார் துர்கா பிரசாத்.

ஆனால் இப்படி செய்வதற்கான சாத்தியங்கள் இருந்ததா?

படத்தின் காப்புரிமை EPA

தீவிரவாத பாதிப்பு அதிகமாக இருக்கும் தெற்கு காஷ்மீர் வழியாக பொதுப் பேருந்தில் வீரர்கள் ஏன் பயணித்தனர் என்ற கேள்வி எழுகிறது. மேலும் ஸ்ரீநகர் செல்வதற்காக ஹெலிகாப்டர்கள் அல்லது கவச வாகனங்கள் பயன்படுத்தப்படாதது ஏன் என்ற கேள்விகளும் எழுகின்றன.

"இதைப் பற்றி தெளிவாக எதுவும் சொல்ல முடியவில்லை என்றாலும், இந்த பேருந்துகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன," என்கிறார் ஜெனரல் மலிக்.

1980களில் இருந்து காஷ்மீரில் ராணுவ வீரர்கள் பேருந்துகளில்தான் பயணம் செய்கின்றனர். இந்த 20-30 ஆண்டுகளில் எல்லாமே சரியாகவே சென்று கொண்டிருந்தது என்று சொல்கிறார் சி.ஆர்.பி.எஃப் முன்னாள் தலைவர் திலீப் திவாரி.

ஆயிரக்கணக்கான வீரர்கள் பயணிக்கும்போது ஹெலிகாப்டர்கள் பயன்படுத்துவதற்கான நடைமுறை அமலில் இல்லை என்றும், தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளும்போது மட்டுமே கவச வாகனங்கள் பயன்படுத்தும் நடைமுறை அமலில் இருப்பதையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பணிக்கு திரும்பிய வீரர்களிடம் ஆயுதங்கள் இருக்கவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. பாதுகாப்புக் காரணங்களுக்காக அதிக அளவிலான ஆயுதங்கள் கொடுக்கப்படவில்லை என்றும், ஆனால் ஒவ்வொரு வாகனத்திலும் பாதுகாப்புக்கு தேவையான ஆயுதங்கள் இருந்ததாக ஜெனரல் மலிக் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை EPA

நெடுஞ்சாலை எண் 44இன் வழியாக சி.ஆர்.பி.எஃப் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இது பொதுபோக்குவரத்துக்காகவும் பயன்படுத்தப்படுகிறது எனவே முழு அளவிலான பாதுகாப்பு சாத்தியமில்லை.

முன்பு நெடுஞ்சாலையில் சில இணைப்புச் சாலைகள் மட்டுமே இருந்தன. ஆனால் தற்போது உள்ளூர்வாசிகளின் கோரிக்கைகளால் பல சாலைகள் இந்த நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறார் துர்கா பிரசாத்.

நெடுஞ்சாலையில் முழு பாதுகாப்பு கொடுக்க வேண்டுமானாலும், கணிசமான இடைவெளிகளில் பாதுகாப்புப் படையினரின் வாகன பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் அதற்கு போதுமான அளவில் வீரர்கள் இல்லை.

சி.ஆர்.பி.எஃப் மீது தொடர் தாக்குதல்கள் ஏன்?

படத்தின் காப்புரிமை EPA

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியாக இருந்தாலும், நக்சல் பாதிப்பு அதிகமாக இருக்கும் சத்தீஸ்கராக இருந்தாலும், சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது ஏன் அதிக அளவிலான தாக்குதல்கள் நடத்தப்படுகிறது, அதில் பல வீரர்கள் உயிரிழக்கின்றனர் என்ற கேள்வியை எழுப்பும் முன்னாள் அதிகாரிகள், சி.ஆர்.பி.எஃப் தலைமையின் மீது கேள்வியை எழுப்பவும் தவறவில்லை.

வீரர்களுக்கு பயிற்சியளிப்பதில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார் ஜெனரல் வி.பி. மாலிக். ஒரு மூத்த சி.ஆர்.பி.எஃப் அதிகாரியின் கருத்துப்படி, 70 முதல் 80 சதவிகித சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் நாட்டின் மிகவும் ஆபத்தான பகுதிகளில் பணியாற்றுகின்றனர். இதனால் தான் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீதான தாக்குதல்களும் அதிகமாக இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்