மக்களவைத் தேர்தல் 2019: 'தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி இறுதியானது'

அதிமுக படத்தின் காப்புரிமை Arun karthick

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: "அதிமுகவுக்கு 25, பாஜகவுக்கு 15 - கூட்டணி உடன்பாடு?"

வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு 25, பாஜகவுக்கு 15 என கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அதிமுக - பாஜக இடையே கூட்டணி உருவாகி உள்ளது. ரகசியமாக நடந்து வந்த கூட்டணி பேச்சுவார்த்தைகள் தற்போது அதிகாரப்பூர்வமாக நடந்து வருகிறது.

பாரதிய ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்து அதிமுக தேர்தல் குழுவுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார்.

தமிழகம் - புதுவையில் மொத்தம் உள்ள 40 இடங்களில் அதிமுகவுக்கு 25 தொகுதிகள், பாஜகவுக்கு 15 தொகுதிகள் என முடிவாகி உள்ளதாக தெரிகிறது. அ.தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுக்கும், பாரதிய ஜனதா தனது கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும்.

அதிமுக தனது தொகுதிகளில் த.மா.கா, என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்தது போக 22 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

பாரதிய ஜனதா தனது தொகுதிகளில் பா.ம.க.வுக்கு நான்கு தொகுதிகளும், தே.மு.தி. க.வுக்கு மூன்று தொகுதிகளும் ஒதுக்கீடு செய்தது போக மீதம் உள்ள எட்டு தொகுதிகளில் போட்டியிடும் என தகவல் வெளியாகி உள்ளது" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து தமிழ் - "சேவாக்கிற்கு குவியும் பாராட்டு"

படத்தின் காப்புரிமை Twitter

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாத தற்கொலைப்படைத் தாக்குதலால் வீர மரணம் அடைந்த 40 சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"ஒவ்வொரு மாநில அரசும் வீரமரணம் அடைந்த வீரர் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தால், அவருக்கு நிவாரணத் தொகையை அறிவித்து வருகின்றன.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், அனைவரையும் நெகிழச் செய்யும் விதமாக, வீர மரணம் அடைந்த 40 வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவையும் ஏற்பதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார். அதோடு, வீர மரணம் அடைந்த வீரர்களின் புகைப்படங்கள், அவர்களின் பெயர் பட்டியலையும் சேவாக் வெளியிட்டுள்ளார்.

ட்விட்டரில் சேவாக் கூறியிருப்பதாவது, " வீரமரணம் அடைந்த இந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு நாம் எது செய்தாலும் அது போதுமானதாக இருக்காது. ஆனால், என்னால் முடிந்தவரை குறைந்தபட்சமாக வீரமரணம் அடைந்த வீரர்களின் குழந்தைகளின் முழுமையான கல்விச் செலவு அனைத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன். என்னுடைய சேவாக் சர்வதேச பள்ளியில் படிக்க வைக்கிறேன், " எனத் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

"வந்தே பாரத்' ரயில் சேவை தொடங்கிய 2-ஆவது நாளிலேயே சிக்கல்

படத்தின் காப்புரிமை Twitter

பிரதமர் நரேந்திர மோதியால் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்ட "வந்தே பாரத்' விரைவு ரயிலின் இரண்டாவது நாள் பயணத்தின்போது கோளாறு ஏற்பட்டதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

"டெல்லியிலிருந்து முதல் பயணமாக வாராணசி வந்த "வந்தே பாரத்' அதிவேக ரயில், வாராணசி சந்திப்பிலிருந்து தில்லிக்கு வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டது. உத்தரப்பிரதேசத்தின் துண்ட்லா சந்திப்பிலிருந்து 15 கிமீ தொலைவில் ரயில் வந்து கொண்டிருந்தபோது காலை 6.30 மணியளவில் கோளாறு ஏற்பட்டு நிறுத்தப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து வடக்கு ரயில்வே மண்டல அதிகாரி தீபக் குமார் கூறுகையில், "வந்தே பாரத் ரயில் கால்நடைகள் மீது மோதியதன் காரணமாக, அதன் சக்கரங்கள் தண்டவாளத்தின் மீது சறுக்கியதையடுத்து ஒரு மணி நேரம் வரை ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது' என்றார். இந்த நிலையில், அதில் பயணித்த செய்தியாளர்கள் மற்றொரு ரயிலில் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - பாதிரியாருக்கு 60 ஆண்டுகள் சிறை

கேரளாவைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் ஒருவர், 2017இல் சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி, கருவுறச் செய்த வழக்கில், கன்னூர் நீதிமன்றம் ஒன்று அவருக்கு 60 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

அதில் 20 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்னொரு பாதிரியார், மூன்று கன்னியாஸ்திரிகள் உள்ளிட்ட ஆறு பேர் இந்த வழக்கில் போதிய சாட்சியங்கள் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :