"ஜல்லிக்கட்டு கோவை பகுதிக்கு அவசியமற்ற ஒன்று" - கார்த்திகேய சிவசேனாபதி

ஜல்லிக்கட்டு

ஒவ்வொரு பகுதியிலும் இருப்பதுதான் அந்த பகுதிக்குரிய நாட்டு மாடுகள். அந்த கால்நடை சார்ந்த விளையாட்டுகள் அந்தந்த பகுதியில் நடப்பதுதான் பாரம்பரியம் என்பதால் கோவையில் ஜல்லிக்கட்டு தேவையில்லை என்றே கருதுகிறேன் என்று கோவையில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு குறித்து பேசியுள்ளார் கார்த்திகேய சிவசேனாபதி.

கோவை மாவட்டத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.

இந்த ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாடுகள் வந்துள்ளதாகவும், 600கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் கலந்து கொள்கின்றனர் என்றும், விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். சென்ற வருடம் முதன் முதலாக ஜல்லிக்கட்டு நடைபெற்றது, இது இரண்டாம் வருடம்.

கொங்கு பகுதிக்கும், ஜல்லிக்கட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன, இந்தப் பகுதியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றதற்கான வரலாறு உள்ளதா என்பது குறித்து, சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் கார்த்திகேய சிவசேனாபதி அவர்களிடம் பேசினோம்.

"சங்க காலத்தில் இருந்து ஏறுதழுவுதல் இருந்ததற்கான எச்சங்கள் இருக்கின்றன. விஜய நகர நாயக்க மன்னர்கள் மதுரையினை ஆளும் பொழுதான் அது ஜல்லிக்கட்டு என்று மாறுகின்றது. அதற்கு முன்பு வரை ஏறு தழுவுதல் தான்.

13ம் நூற்றாண்டில் காங்கேயம் பகுதியில் ஏறு தழுவுதல் நடைபெற்றதாக கல்வெட்டுகள் உள்ளன என்று குறிப்பிடுகின்றனர். இந்தப் பகுதியில் நடைபெற்றதற்கான மிகப் பழமையான ஆதாரம் அதுதான்." என்கிறார் கார்த்திகேய சிவசேனாபதி.

"ஜல்லிக்கட்டு ராமநாதபுரம், புதுக்கோட்டை போன்ற 12 மாவட்டங்களில் நடைபெறும், அதில் மதுரையில் நடப்பதுதான் பிரசித்தி பெற்றது" என்று கூறும் அவர், கோவையில் நடைபெறும் ஜல்லிக்கட்டினை இரண்டு விதமாக பார்க்கலாம் என்கிறார்.

"ஜல்லிக்கட்டு நடத்த விட மாட்டோம் என்று கூறிய அமைப்புகளுக்கு பதிலடி, ஒரு ஊரில் நடத்த விடாமல் தடுத்தால் தமிழகம் முழுக்க நடத்துவோம் என்று காட்டுவதாக இருக்கலாம்."

"எனக்கு தமிழர்களை பற்றி நன்றாகத் தெரியும், நான் சென்னை சட்டக் கல்லூரியில் படித்தேன்.அவர்கள் எந்தப் பிரச்சினைக்கும் செல்ல மாட்டார்கள், ஆனால் அவர்கள் மொழியில், கலாசாரத்தில் தலையிட்டால் பொங்கி எழுவார்கள், ஒரு சில ஊர்களில் நடப்பதை தமிழகம் முழுவதும் நடக்க வைக்கப் போகிறீர்கள் என்று உச்ச நீதிமன்றத்தில் சொல்லிக் கொண்டே இருந்தேன் என்று உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த செல்லமேஷ்வர் தெரிவித்திருந்தார். அந்த அடிப்படையில் இது தமிழர்களின் கோவத்தின் வெளிப்பாடாக பார்க்கலாம்.”

ஆனால், கோவையில் ஜல்லிக்கட்டு நடத்துவது தேவையில்லை. ஏனெனில் கொங்குப் பகுதிக்கும் ஜல்லிக்கட்டுக்கு பெரிய தொடர்புகள் இல்லை என்கிறார் சேனாபதி.

முழுக்க, முழுக்க இளைய சமுதாயம் மீட்டெடுத்ததுதான் ஜல்லிக்கட்டு. இப்படி, மீட்டெடுக்கப்பட்ட ஜல்லிக்கட்டு வணிக மயமாகி விடக் கூடாது என்று கூறும் அவர், "அலங்காநல்லூர் , பாலமேடு ஆகிய ஊர்களில் எல்லாம் ஜல்லிக்கட்டு நடைபெறும் பொழுது, முன் தினமே அந்த ஊருக்கு சென்று தங்கி, ஊர் மக்களோடு சேர்ந்து இந்த விழாவினைக் கொண்டாடுகிறோம். பாரம்பரிய பண்பாட்டு அடையாளங்களோடு இந்த விழா நடை பெறும், அந்த ஊரில் கிடைக்கும் உணவுப் பொருட்களை உண்டு, மக்களோடு பழகி ஜல்லிக்கட்டினை காண வேண்டும்."

"சமுக, பண்பாட்டு அடையாளங்களை இழக்காமல் இருப்பதற்கும், உள்ளூர் பொருளாதாரத்தை நிலைப் படுத்தவும் இவை பயன்படும்."

"பெப்சி, பர்கரை கைகளில் வைத்துக் கொண்டு ஜல்லிக்கட்டு பார்ப்பது ஜல்லிக்கட்டுக்கு ஆகாது" என்கிறார்.

"கொங்கு பகுதியின் பாரம்பரிய கால்நடை சார்ந்த விளையாட்டு ரேக்ளா, அந்த விளையாட்டு பிரசித்தி பெற்றால் தான் காங்கேயம் கால்நடைகளை பாதுகாக்க முடியும்." என்கிறார் அவர்.

மேலும், "நாட்டுமாடு என்பதில் இன்றைக்கு பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இருக்கும் எல்லாவற்றையும் நாட்டுமாடு என்று நினைத்துக் கொள்கிறோம். இந்திய நாடு என்பது ஒரு புவியியல் அமைப்பு.

நாட்டு மாடு என்பது,- பாண்டிய நாட்டில் இருப்பது புளியங்குளம் என்ற மாடு, கொங்கு நாட்டில் இருப்பது காங்கேயம் மாடு, பர்கூர் மாடு. சோழ நாட்டில் இருப்பது , ஒம்பலசேரி மாடு.

இப்படி ஒவ்வொரு பகுதியிலும் இருப்பதுதான் அந்த பகுதிக்குரிய நாட்டு மாடே தவிர, நாடு முழுவதும் இருப்பது பொதுவாக நாட்டு மாடு என்பதாகாது" என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :