காஷ்மீர் நிர்வாகம் பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை திரும்ப பெற்றது

ராஜ்நாத் சிங் படத்தின் காப்புரிமை @RAJNATHSINGH

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பிரிவினைவாத தலைவர்கள் ஐந்து பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் திரும்ப பெற்றுள்ளது.

பிரிவினைவாத தலைவர்களான மிர்வாஸ் உமர் ஃபரூக், அப்துல் கனி பட், பிலால் லோன், ஹஷிம் குரேஷி, மற்றும் ஷபிர் ஷா ஆகியோருக்கான பாதுகாப்புகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

ஆனால் இதில் பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதி சையத் அலி ஷா கிலானியின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

இந்த ஆணையின்படி, ஞாயிறு மாலையுடன் பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து பாதுகாப்பு மற்றும் வாகனங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படும்.

படத்தின் காப்புரிமை TWITTER / MIRWAIZ

குறிப்பிடப்பட்ட பிரிவினைவாத தலைவர்களை தவிர பிற பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பும் மறுஆய்வு செய்யப்பட்டு திரும்பப் பெறப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உயர் அதிகாரிகளுடன் சனிக்கிழமையன்று சந்திப்பு ஒன்றை நடத்தினார். அந்த கூட்டத்துக்கு பின் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை செயலர் ராஜிவ் கெளபா மற்றும் உளவுத் துறை இயக்குநர் ராஜிவ் ஜெயின் ஆகியோர் இருந்தனர்.

இந்த சந்திப்பில் ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு தொடர்பாகவும், பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளியன்று ஸ்ரீநகரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், "பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் உளவு அமைப்புக்கு நிதி உதவி செய்பவர்களுக்கான அரசு பாதுகாப்பு குறித்து மறுபரிசீலனை செய்யப்படும்" உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

புல்வாமா தாக்குதல்

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரின் புல்வாமாவில் வியாழனன்று நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் நாற்பதுக்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர்.

வெடிபொருட்கள் நிறைந்த வாகனத்தை பாதுகாப்பு படையினரின் வாகனத்தின் மீது மோதி தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :