"போர் ஒத்திகையில் இந்திய விமானப்படை - மீண்டும் ஒரு துல்லிய தாக்குதலுக்கு திட்டம்?"

"போர் ஒத்திகையில் இந்திய விமானப்படை - மீண்டும் ஒரு துல்லிய தாக்குதலுக்கு திட்டம்?" படத்தின் காப்புரிமை Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: "போர் ஒத்திகையில் இந்திய விமானப்படை - மீண்டும் ஒரு துல்லிய தாக்குதலுக்கு திட்டம்?"

140 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி இந்திய விமானப்படை இரவு-பகலாக மிகப்பெரிய போர் ஒத்திகை நடத்தியதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"'வாயு சக்தி' என்ற பெயரில் இந்திய விமானப்படை பிரமாண்டமான போர் ஒத்திகையை நடத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நேற்று முன்தினம் பகலில் தொடங்கி இரவையும் கடந்து விடிய, விடிய நடந்த இந்த ஒத்திகையில் 140 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் நவீன ஏவுகணைகள் என அதிகமான தளவாடங்கள் பயன்படுத்தப்பட்டன.

இலகு ரக தேஜாஸ் விமானங்கள், நவீன தாக்குதல் ஹெலிகாப்டர்கள் (ஏ.எல்.எச்.), தரையில் இருந்து வான் இலக்கை தாக்கும் ஆகாஷ் ஏவுகணை, வானில் இருந்து வான் இலக்கை தகர்க்கும் அஸ்திரா ஏவுகணை போன்றவை இரவிலும் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி தங்கள் வலிமையை உறுதி செய்தன.

இதைத்தவிர மிக்-29 தாக்குதல் ரக விமானம், சுகோய்-30, மிராஜ் 2000, ஜாகுவார், மிக்-21 பைசன், மிக்-27, ஐ.எல்.78, ஹெர்குலிஸ், ஏ.என்.32 போன்ற விமானங்களும் இந்த ஒத்திகையில் சிறப்பாக செயல்பட்டன. ஹெர்குலிஸ் போர் விமானம் குறுந்தொலைவு கொண்ட ஓடு தளத்தில் ஏறி இறங்கி வீரர்களையும், தளவாடங்களையும் கொண்டு சேர்த்தது சிலிர்ப்பை ஏற்படுத்தியது" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து தமிழ் - ''சட்டப்பேரவைக்கு சென்றால் சட்டையை கிழித்துக் கொள்ள மாட்டேன்''

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கமல் ஹாசன்

சட்டப்பேரவைக்கு சென்றால் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன், அப்படி சட்டை கிழிந்தாலும் நல்ல சட்டை போட்டுக் கொண்டுதான் வெளியில் வருவேன் என திமுக தலைவர் ஸ்டாலினை கமல்ஹாசன் மறைமுகமாக விமர்சித்துள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:

தாமதமாக அரசியலுக்கு வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அரசியல் மாணவர்களுக்கு தேவையில்லை என்று சொல்வதை ஏற்க மாட்டேன். மாணவர்களைப்போல நாட்டில் அனைவருக்கும் அரசியல் தேவை. சாதி பெருமை பற்றி பேசாமல் இருந்தாலே கலவரம் குறையும்.

முதல்வர் என்பவர் மக்களுக்காக உழைக்கும் அதிகாரி. ஆட்சியில் இருப்பவர்கள் 5 ஆண்டுகள் சரியாக ஆட்சி செய்கிறார்களா? என்பதை கவனியுங்கள். அரசியலில் என்னுடைய நேரத்தையும் முதலீடு செய்துள்ளேன். சட்டப்பேரவைக்கு சென்றால் சட்டையை கிழித்துக்கொள்ளமாட்டேன். அப்படி சட்டை கிழிந்தாலும் நல்ல சட்டை போட்டுக் கொண்டுதான் வெளியில் வருவேன்" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி - "5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு"

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழகத்தில் 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து வந்தாலும் பொதுத்தேர்வு நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை தொடங்கியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

"சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதா வேண்டாமா என்பது குறித்து கொள்கை முடிவு எடுக்கப்பட வேண்டும். விரைவில் அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இருப்பினும் அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்தே தமிழகத்தில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு நிகழாண்டே பொதுத் தேர்வுகளை நடத்துவதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இதற்காக அமைக்கப்படவுள்ள தேர்வு மையங்கள், பொதுத்தேர்வில் பங்கேற்கவுள்ள மாணவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஒரு பள்ளியில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் தலா 20 மாணவர்கள் இருந்தால் அங்கு பொதுத்தேர்வு மையம் அமைக்கப்படும்" என்று அந்த செய்தியில் மேலும் விவரிக்கப்பட்டுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - "பைக் திருடனை 88 கிலோமீட்டர் துரத்தி சென்று பிடித்த காவல்துறை"

படத்தின் காப்புரிமை Getty Images

சென்னையில் இளைஞர் ஒருவரது இரு சக்கர வாகனத்தை திருடிக்கொண்டு சென்றவர்களை அதில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் கருவியின் உதவியின் மூலம் சுமார் 88 கிலோமீட்டர்கள் துரத்தி சென்று காவல்துறை பிடித்த சம்பவம் சென்னையில் நடைபெற்றுள்ளது.

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், நேற்று அதிகாலை தனது இருசக்கர வாகனத்தை எடுப்பதற்காக சென்றபோது அதை காணவில்லை. பிறகு, தனது இருசக்கர வாகனத்தோடு இணைக்கப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவியின் நோட்டிபிகேஷனை அலைபேசியில் பார்த்தபோது, அதிகாலை மூன்று மணியளவில் இருசக்கர வாகனத்தின் சாவியே இல்லாமல் யாரோ திருடிச்சென்றது தெரியவந்தது.

பிறகு காவல்துறையினரின் உதவியோடு, இருக்கசக்கர வாகனத்தை அலைபேசியை பயன்படுத்தி தேடு தொடங்கினர். கிழக்கு கடற்கரை சாலையை நோக்கி சுமார் 150 கிலோமீட்டர்கள் வேகத்தில் சென்ற வாகனத்தை கூவத்தூர் பேருந்து நிலையம் அருகே பிடித்தனர்.

அந்த இருசக்கர வாகனத்தை திருடிச்சென்றது, அதன் உரிமையாளரின் பள்ளிக்கால நண்பர் என்பதை பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. இருசக்கர வாகனத்தை திருடியவருடன் உடனிருந்த மற்றொரு இளைஞரும் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்