புல்வாமா துப்பாக்கி சூட்டில் 4 ராணுவ வீரர்கள், 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு : தொடர்கிறது தேடுதல் வேட்டை

புல்வாமாவில் மீண்டும் துப்பாக்கி சூடு: 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு படத்தின் காப்புரிமை NARINDER NANU
Image caption (கோப்புப்படம்)

இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் உள்ள பிங்க்லானா பகுதியில் இன்று (திங்கள்கிழமை) நடந்த துப்பாக்கிச் சண்டையில் நான்கு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் இரண்டு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த தீவிரவாதிகள் யார் என்று இன்னமும் அடையாளம் காணப்படவில்லை என்றாலும், வியாழனன்று புல்வாமாவில் நடந்த தாக்குதலை திட்டமிட்டவர் என்று கருதப்படும் அப்துல் ரஷீத் காஸி இன்று நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட ஒருவராக இருக்கலாம் என்று ராணுவ தகவல்கள் கருதுகின்றன.

மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இரவு முழுவதும் நடந்த துப்பாக்கிச்சண்டை தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அதேவேளையில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது.

முன்னதாக, இரவு முழுவதும் இந்த பகுதியில் துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பகுதியை சேர்ந்த காவல்துறையின் செய்தி தொடர்பாளர் மனோஜ்குமார் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக பிபிசியிடம் தெரிவித்தார்.

சிஆர்பிஎப் (துணை காவல் படையினர்) மற்றும் ராணுவத்தின் எஸ்ஓஜி பிரிவினர் இணைந்து இந்த பகுதியில் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிங்க்லானா பகுதியில் தீவிரவாதிகள் தங்கியிருந்ததாக ராணுவத்துக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, இந்த பகுதியில் ராணுவம் தேடுதல் வேட்டை நடத்தியது.

படத்தின் காப்புரிமை Getty Images

ராணுவம் தாக்குதல் நடவடிக்கையை தொடங்கிய உடனே, தீவிரவாதிகள் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

முன்னதாக, வியாழனன்று நடந்த தாக்குதலில் 40க்கும் மேலான சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டபின் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பதற்றம் நிலவுகிறது.

ஜம்மு பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு வெள்ளிக்கிழமை முதல் அமலில் இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்