கமல்ஹாசன் 'காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு வேண்டும்' என கூறினாரா? - மக்கள் நீதி மய்யம் விளக்கம்

கமல்ஹாசன் படத்தின் காப்புரிமை Getty Images

நேற்றைய தினம் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் அமைப்பின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரியதாகவும், பாகிஸ்தான் கோரும் அதே விஷயத்தை கமல் ஹாசன் கோருகிறார் எனவும் சில இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

காஷ்மீர் பிரிவினைவாதிகள் மற்றும் பாகிஸ்தான் கோரும் விஷயத்தை கமல் ஹாசனும் தீர்வாக முன் வைக்கிறார் என ’டைம்ஸ் நவ்’ உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

கடந்த வியாழக்கிழமையன்று புல்வாமாவில் நடந்த தாக்குதலில் நாற்பதுக்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்ட பிறகு காஷ்மீரில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் கமல்ஹாசனின் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் சிலர் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு வந்தநிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

’டைம்ஸ் நவ்’ சேனலில் வெளிவந்த செய்தி, மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமலின் பேச்சு முழுமையாக புரிந்து கொள்ளாமல் திரித்து கூறப்பட்டுள்ளது என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

பொது வாக்கெடுப்பு குறித்து கமல் மேற்கோள் காட்டிய விஷயம் அவரது மய்யம் பத்திரிகையில் மூன்று தசாப்தங்களுக்கு முன்பு வெளிவந்த ஒன்று.

முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய சூழ்நிலையில் கமல் அந்த கருத்தை கூறியிருந்தார். அதற்கும் தற்போதைய சூழலுக்கும் சம்பந்தமில்லை. இப்போது மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு என்ன என்பதை சுட்டிக்காட்டும் விதமாகவும் அந்த கருத்து இல்லை என்கிறது மக்கள் நீதி மய்யத்தின் அறிக்கை.

"காஷ்மீரின் முழு பகுதியும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியில் உள்ளடங்குகிறது என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்" என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

படத்தின் காப்புரிமை MNM/twitter

நேற்று கமல் பேசிய காணொளி சமூக வலைதளங்களில் காணக்கிடைக்கிறது.

அதில் ''சமீபத்திய புல்வாமா தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்களை இழந்திருக்கிறோம். காஷ்மீரில் போர் வேண்டும், பழி தீர்ப்பதே பதிலடி என பல விஷயங்கள் ஊடகங்களில் கூறப்படும் நிலையில் நீங்கள் வித்தியாசமான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறீர்கள். நீங்கள் காஷ்மீர் அரசின் ஆலோசகர் விஜயகுமாரை அழைத்து இறந்தவர்களின் குடும்பங்களோடு நேரம் செலவழிக்க விரும்புவதாக தெரிவித்திருக்கிறீர்கள், எது உங்களை அப்படிச் செய்யத் தூண்டியது'' என ஒரு கேள்வி கமலிடம் எழுப்பப்பட்டுள்ளது.

அதற்கு கமல் அளித்த பதிலில், ''ரத்தம் வருகிறது எனில் அதனை தடுத்து நிறுத்துவதுதான் முதல் வேலை. அதன் பின்னரே அறுவை சிகிச்சை ஏற்பாடு செய்ய வேண்டும். ரத்தம் வந்த உடனே அறுவை சிகிச்சை என்றால் எப்படி? அறுவை சிகிச்சையும் வேண்டும் தான். ஆனால் முதலில் ரத்தம் பெருக்கெடுத்து ஓடுவதை நிறுத்த வேண்டும்." என்று அவர் அந்த காணொளியில் தெரிவித்துள்ளார்.

மேலும், "இப்போது 44 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இது கொடூரமான விஷயம் தான். இதற்காக உங்களது பெற்றோர்கள் யாராவது உங்களை ராணுவத்தில் சேர வேண்டாம் என கூறினால் ஒரே ஒரு புள்ளிவிவரத்தை கூறுங்கள். ராணுவத்தில் உயிரிழப்பதை விட தமிழகத்தில் சாலை விபத்தில் இறப்பவர்களே அதிகம்."

"ராணுவத்தில் நிறைய வேலை இருக்கிறது. நான் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களை பார்க்க வேண்டும் என கூறியதற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை.

ராணுவ வீரர்கள் சாவதற்காக தான் அங்கே செல்கிறார்கள் என நீங்கள் சொல்லும்போது உண்மையாகவே வருத்தப்படுகிறேன். நான் அந்த கூற்றை நம்புவது கிடையாது. ராணுவம் என்பதே பழைய பாணியில் இருக்கிறது என நினைக்கிறன். ஒருவரை ஒருவரை அடித்துக் கொள்வதையும் ஒருநாள் நிறுத்த வேண்டியதுவரும். அது தான் நல்ல பண்பு. பத்தாயிரம் வருடத்தில் அதை கூட கற்றுக்கொள்ள வில்லையா இந்த நாகரிகம்?

படத்தின் காப்புரிமை MNM/twitter

வீரர்கள் சாவதற்கானவர்கள் அல்ல. இரு தரப்பு அரசியல் வாதிகளும் ஒழுங்காக நடந்து கொண்டால் ஒரு வீரர் கூட சாக வேண்டியதில்லை. நீங்கள் இரு தரப்பும் தொடர்ச்சியாக மக்கள் சேதம் உண்டாக்குகிறீர்கள். இரு தரப்பும் இரு பக்கமும் இழுக்காதீர்கள். அவர்கள் மக்கள். காஷ்மீர் என்ன ஆகும் என நான் நடத்திய மய்யம் பத்திரிகையில் அப்போதே எழுதியிருக்கிறேன்."

"நான் சற்று நல்ல விதமாக கணித்திருக்க வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எல்லாரையும் பேச வைக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தேன். அதை ஏன் செய்யவில்லை? என்ன பயம் இவர்களுக்கு? நாம் நாட்டை கிழித்து இரண்டாக போட்டதுதானே? ஏன் நீங்கள் அவர்களிடம் மீண்டும் கேட்கக் கூடாது. அவர்கள் பண்ண மாட்டார்கள்.

இனிமே அதெப்படி இந்தியாவுக்கு என்பார்கள். அங்கேயும் அதுதான் நடக்கிறது. பாகிஸ்தானில் தொடர் வண்டிகளில் தீவிரவாதிகளுக்கு பெரிய படம் வரைந்திருக்கிறார்கள். அதுவும் மடத்தனம் தான்.

அந்த மடத்தனத்துக்கு சமமான விஷயத்தை நாம் செய்ய வேண்டும் நினைப்பது அழகல்ல. இந்தியா மிகச் சிறந்த நாடு என நிரூபிக்க வேண்டுமானால் அப்படி நாம் நடந்து கொள்ள கூடாது. அங்கிருந்துதான் புது அரசியல் கலாசாரம் உருவாகும்'' என கமல் ஹாசன் அந்த காணொளியில் பேசியிருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்