குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருக்க கூட்டம் போட்டு விவாதிக்கும் தம்பதிகள்

  • சாய்சுதா
  • பிபிசி தமிழுக்காக
"குழந்தைகளை பெற்றெடுக்காதீர்கள்"

"குழந்தைகளை பெற்றெடுக்காதீர்கள்," என்ற செய்தியை பரப்புவதே வாழ்க்கையின் லட்சியமாக சிலர் கொண்டுள்ளனர். காரணம்? குழந்தைகளை உலகத்திற்கு கொண்டுவருவதற்கு முன் யாரும் அவர்களிடம் அனுமதி கேட்பது கிடையாது.

"குழந்தைகளை பெற்றெடுக்காதீர்கள்" இயக்கத்தினர் பெங்களூவில் சில நாட்களுக்கு முன்பு சந்தித்து இந்த இயக்கத்தை அரசு சாரா நிறுவனமாக மாற்றுவதை பற்றி ஆலோசித்தனர். சுமார் 30 நபர்கள் மட்டுமே பங்கேற்றிருந்தாலும் இருத்தலியல் பற்றிய கேள்விகள் பல எழுப்பப்பட்டது.

"இது ஒரு தார்மீக இயக்கம். எனது நண்பர்கள் பலருக்கும் குழந்தை பெற சிறிதும் ஈடுபாடு கிடையாது. குழந்தை பெற்றெடுப்பதும் பெற்றெடுக்காமல் இருப்பதும் ஒருவரின் தனிப்பட்ட உரிமை என்ற கருத்தை பரப்ப இந்த இயக்கத்தை உருவாக்கியுள்ளோம்," என்கிறார் மும்பையை சேர்ந்த 27 வயதான ரஃபேல் சாமுவேல். தனது பெற்றோர்கள் மீது வழக்கு தொடுப்பதாக அறிவித்ததன் மூலமாக சமூக ஊடகங்களில் பிரபலமானவர் ரஃபேல் சாமுவேல்.

பட மூலாதாரம், RAPHALE SAMUEL/ FACEBOOK

படக்குறிப்பு,

ரஃபேல் சாமுவேல்.

பிறப்பு குறித்த எதிர்மறையான எண்ணம், தன்னார்வ மனித அழிவு இயக்கம் போன்ற கொள்கைகளை அடிப்படையாக வைத்து இந்த இயக்கத்தை துவக்கியுள்ளனர். இந்த கூட்டத்திற்கு வந்த பலரிடமும் இந்த கொள்கைகள் சற்று தீவிரமாகவே காணப்பட்டது. இவர்கள் அனைவரையும் இணைத்த கருத்து குழந்தை இன்றி வாழ்வது.

"திருமணமானவர்கள் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏன்?" என்கிறார் சென்னையில் இருந்து இந்த கூட்டத்தில் பங்கேற்க பெங்களூருக்கு வந்த பிருந்தா.

மேலும் குழந்தையை வளர்க்க 100 சதவீத அர்ப்பணிப்பு தேவைப்படுவதாகவும் தனக்கும் தனது கணவருக்கும் வேலை மீது கவனம் செலுத்த விருப்பம் என்று கூறினார்.

எதற்காக இந்த கூட்டத்தில் கலந்து கொண்டீர்கள் என்று கேட்டதற்கு, "எனக்கும் எனது கணவருக்கும் குழந்தை இன்றி வாழ்வதில் உடன்பாடு இருந்தும் எங்களது பெற்றோர்களுக்கு இதில் சற்றும் உடன்பாடு கிடையாது. குழந்தை பெற வேண்டும் என்ற வற்புறுத்தல் அதிகம் உள்ளது. எங்களது நண்பர்கள்கூட எங்களை புரிந்து கொள்ளவில்லை என்று நாங்கள் நினைக்கின்றோம். எங்களைப்போலவே யோசிப்பவர்களை சந்திக்க இந்த கூட்டத்திற்கு வந்தோம்,'' என்று கூறினார் பிருந்தா. இவர் குழந்தைகள் இல்லாத வாழ்க்கை குறித்து இவர் ஒரு குறும்படம் இயக்கி வருகிறார்.

பெங்களூருவை சேர்த்த வேலேரியன் செகுய்ரா மற்றும் பல்லவி சக்ரபர்த்தி தம்பதியினர் இரண்டு காரணங்களுக்காக குழந்தை இன்றி வாழ முடிவெடுத்து உள்ளனர்.

"மக்கள் தொகை எண்ணிக்கையில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. மனிதர்களால் கார்பன் பாதிப்பு உலகில் அதிகமாகிறது. இந்த எண்ணிக்கை அதிகரிப்பதற்கு நாங்கள் காரணமாக இருக்க விரும்பவில்லை," என்கிறார் பல்லவி.

இவர் வன விலங்குகளை பாதுகாக்கும் துறையில் பணிபுரிந்து வருகிறார். அவரது கணவர் வேலேரியனுக்கும் இந்த கருத்தில் உடன்பாடு இருக்கிறது. இவர் உறவுகள் தொடர்பான ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார்.

"எனக்கு எனது வாழ்வின் அர்த்தம் எனது பணியில் இருந்து வருகிறது. குழந்தை பெற்று வளர்ப்பது 20 ஆண்டு கால திட்டம். குழந்தை பெற்றால் எனது பணிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் குறைந்துவிடும்" என்கிறார்.

சிலருக்கு குழந்தை பெறாமல் இருப்பதற்கு சுற்றுச்சூழல் ஒரு காரணம், இன்னும் சிலருக்கு தனது வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது காரணம் பெங்களூரில் காப்பீட்டுத்துறை வல்லுனராக பணிபுரியும் மோஷின் நெய்க்வாடி உலகத்தில் உள்ள துன்பத்தை நீக்க வேண்டும் என குழந்தை இன்றி வாழ தேர்தெடுத்துள்ளார்.

வாழ்க்கையின் 90 சதவீதம் துன்பமே நிறைந்திருக்கையில், வாழ்வதில் என்ன பயன் என்று கருதுகிறார். படிக்க வேண்டும், வேலை தேட வேண்டும் என வாழ்க்கை ஒரு சக்கர ஓட்டமாகிவிடுகிறது. அந்த சக்கரத்தில் ஒரு குழந்தையை கொண்டுவர எனக்கு உடன்பாடு இல்லை.

இந்த இயக்கத்தின் மூலமாக குழந்தைகளை தத்தெடுப்பதை ஊக்குவிக்க முடிவெடுத்துள்ளார். பலர் இனப்பெருக்கம் என்றால் குழந்தை பெறுவது என்று கருதுகிறார்கள். அந்த கண்ணோட்டத்தை மாற்ற எண்ணுகிறோம் என்கிறார் இந்த துறையில் ஆய்வு செய்துவரும் சாந்தினி பம்பாணி.

குழந்தைகளை தத்தெடுப்பதன் மூலம் பல ஏழைக் குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை கொடுக்க முடியும் என இவர் நம்புகிறார்.

"இத்தகைய இயக்கத்திற்கு இந்தியாவில் பெரிய அளவிற்கு ஆதரவு கிடையாது. குழந்தை இன்றி வாழ்வதை குறித்து பேசினால் என்னை பைத்தியம் என்று கூறியிருக்கிறார்கள்." என்கிறார் இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அனுராக் சர்மா.

"குழந்தை இன்றி வாழ்வதை பரப்புவதே எங்களது குறிக்கோள். அப்படியும் குழந்தை பெற எண்ணினால், ஒரு குழந்தையுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறுவோம்." என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :