மக்களவை தேர்தல் 2019: அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 இடங்கள் ஒதுக்கீடு

மக்களவை தேர்தல் 2019: அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 இடங்கள் ஒதுக்கீடு

பட மூலாதாரம், FACEBOOK

2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக மற்றும் பாமக ஆகிய இரு கட்சிகள் இடையே கூட்டணி உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது.

இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் நடந்த சந்திப்பில் அதிமுகவின் சார்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும், பாமகவின் சார்பில் அக்கட்சியின் நிறுவன தலைவர் ராமதாஸ், நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், ''2019 மக்களவை தேர்தலில் போட்டியிட அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 நாடாளுன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 2019-ஆம் ஆண்டு ஒரு மாநிலங்களவை இடமும் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.

''தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கும்போது அங்கு அதிமுகவுக்கு பாமக தனது முழு ஆதரவை அளிக்கும் என்பதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்து கொள்கிறோம்'' என்று ஓ.பன்னீர்செல்வம் மேலும் குறிப்பிட்டார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் பேசுகையில், ''அதிமுக மற்றும் பாமக இடையிலான மக்கள் நலக்கூட்டணி மெகா கூட்டணியாக அமையும். பாமக போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது பின்னர் அறிவிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரப்பட வேண்டும், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம், தமிழகத்தில் சாதிவாரியான கணக்கெடுப்பு, ராஜீவ் வழக்கு தொடர்பாக சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுதலை செய்யவேண்டும் உள்பட மக்கள் நலனுக்காக 10 கோரிக்கைகளை அதிமுகவிடம் பாமக முன்வைத்துள்ளது'' என்றும் ராமதாஸ் தெரிவித்தார்.

முன்னதாக, இன்று அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணியை பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா அறிவிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், அமித்ஷா தனது சென்னை வருகையை ரத்து செய்துவிட்டதாக செய்திகள் தெரிவித்தன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :