“அதிமுக - பாஜக கூட்டணி குறித்து இன்று அறிவிப்பு?”

அமித் ஷா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

அமித் ஷா

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ் - "அமித் ஷா இன்று சென்னை வருகை"

அதிமுக - பாஜக கூட்டணி பேச்சு வார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதால் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இன்று (செவ்வாய்க்கிழமை)சென்னை வருவதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக தீவிரம் காட்டி வந்தது. கடந்த சில மாதங்களாக திரைமறைவில் அதிமுக - பாஜக தலைவர்கள் பேச்சு நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 14-ம் தேதி திடீரென சென்னை வந்த மத்திய ரயில்வே அமைச்சரும், தமிழக பாஜக பொறுப்பாளருமான பியூஷ் கோயல், அதிமுக அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோருடன் பேச்சு நடத்தினார்.

இரவு 10 முதல் 1 மணிவரை சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

இந்நிலையில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இன்று காலை 11 மணியளவில் சென்னை வருகிறார். அதிமுக - பாஜக கூட்டணியும், தொகுதிப் பங்கீடும் முடிவு செய்யப்பட்டு விட்டதாவும், அதனை அறிவிப்பதற்காகவே அமித்ஷா சென்னை வரவிருப்பதாகவும் கூறப்படுகிறது" என்று அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி: "கிரண்பேடியுடன் 4½ மணி நேரம் பேச்சுவார்த்தை: தற்காலிகமாக போராட்டம் வாபஸ்"

கவர்னர் கிரண்பேடியுடன் நாராயணசாமி நேற்று மாலை 4½ மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்ததாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"புதுச்சேரியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் ஆரம்பம் முதலே மோதல் இருந்து வருகிறது. இந்தநிலையில் கிரண்பெடியை திரும்பப் பெறக் கோரி கவர்னர் மாளிகை முன்பு முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்களுடன் கடந்த 13-ந் தேதி முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து இரவு பகலாக போராட்டம் நடத்திய விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து கிரண்பேடி மக்களின் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தார்.

ஆனால், இதில் பங்கேற்க நாராயணசாமி 3 நிபந்தனைகளை விதித்தார். அதை கவர்னர் ஏற்க மறுத்ததால் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இந்தநிலையில் திடீரென நிபந்தனைகளை தளர்த்திக் கொண்டதையொட்டி நாராயணசாமியை கவர்னர் கிரண்பேடி பேச்சுவார்த்தை நடத்த மீண்டும் அழைப்பு விடுத்தார்.

கூட்டம் முடிந்தவுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசின் கோரிக்கைகள் தொடர்பாக கவர்னரிடம் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக 4½ மணி நேரம் பேசினோம். அதில் பல விவகாரங்களில் சுமூக முடிவு எடுக்கப்பட்டது.

கடந்த 6 நாட்களாக இரவு பகலாக நடந்து வந்த தர்ணா போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம். மக்கள் மத்தியில் சென்று பிரச்சினைகளை முன்வைக்க ஏகமனதாக முடிவு செய்துள்ளோம்" என்று கூறியதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி: "தை மாதத்தில் மட்டுமே ஜல்லிக்கட்டு?"

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை தை மாதத்தில் மட்டுமே நடத்த வேண்டும் என்பது குறித்து அரசு பரிசீலித்து உரிய முடிவு எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது என்று தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

பழங்காநத்தம் ஊர்காவலன் சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு, பிப். 25-ஆம் தேதியன்று ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால், கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்திய விழாக் குழுவினருக்கும், நிகழாண்டில் நடத்த உள்ள விழாக் குழுவினருக்கும் இடையே சில பிரச்சனைகள் உள்ளன.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஆண்டு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தினால் போலீஸாருக்கும், வருவாய்த் துறைக்கும் வேறு பணிகள் இல்லையா என கேள்வி எழுப்பியதோடு, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை தை மாதம் மட்டுமே நடத்த வேண்டும் என்பது குறித்து அரசு பரிசீலித்து உரிய முடிவு எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்" என்று அந்த செய்தி விவரிக்கிறது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - "மகாராஷ்டிராவில் சிவ சேனா - பாஜக கூட்டணியில் உடன்பாடு"

பட மூலாதாரம், Hindustan Times

வரும் மக்களவை தேர்தல் மற்றும் மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக சிவ சேனா - பாஜக இடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

"மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 மக்களவை தொகுதிகளில் 25ல் பாஜகவும், 23ல் சிவ சேனாவும் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலின்போது தங்களது கூட்டணியில் சிறு கட்சிகளுக்கும் இடமளிப்பதற்கு இரண்டு கட்சிகளும் முடிவு செய்துள்ளன. மும்பையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது இந்த அறிவிப்பை தற்போதைய மகாராஷ்டிர முதல் தேவேந்திர பட்னாவிஸ், பாஜக தலைவர் அமித் ஷா, சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :