‘’ஜெயலலிதாவின் வழியில் நானும் பாஜக எதிர்ப்பு அரசியலை தொடர்கிறேன்’’ - தனியரசு

தனியரசு

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு,

தனியரசு

பாஜக அரசை ஜெயலலிதா எதிர்த்துவந்ததுபோல தானும் பாஜக எதிர்ப்பு அரசியலை தொடர்வதாகவும், சசிகலா, டிடிவி தினகரனுடன் கூட்டணி அமைத்தால் அதிமுக ஒன்றுபட்டு வலுப்பெறும், வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்று கொங்கு இளைஞர்பேரவை நிறுவன தலைவர் தனியரசு கூறியுள்ளார்.

2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக இடையே கூட்டணி குறித்து பல்வேறு தரப்பு விவாதங்கள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், அதிமுக-வின் தோழமை கட்சியான கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனரும் தலைவருமான காங்கேயம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான தனியரசு கூட்டணிக்கு எதிராக தான் பதிவு செய்த கருத்து குறித்து பிபிசி தமிழின் ஸ்வீட்டி ஜாஸ்மினிடம் பேசினார்.

''அதிமுகவின் மூத்த தலைவர்கள், கொள்கைபரப்பு செயலாளர் தம்பித்துரை, முன்னாள் அமைச்சர் பொன்னையன் என பலரும் பாஜக அரசிற்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்து வந்த நிலையில், கூட்டணி அமையுமா என கேள்வியுடன் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும், பாஜக தேசிய பொறுப்பாளரும் அமைச்சருமான பியூஸ்கோயல் மற்றும் அதிமுகவின் முக்கிய தலைவர்கள் மற்றும் ஆட்சி பொறுப்பில் உள்ளவர்கள் இணைந்து கூட்டணிகுறித்து பேசுவதாகவும், கூட்டணிக்கான வாய்ப்பு அதிகம் என கேள்வியுறும் போது, அத்தகைய கூட்டணியை தவிர்க்குமாறு நீண்ட நாட்கள் அதிமுகவோடு இணைந்து நிற்கும் தோழமைகட்சிகள் வலியுறுத்துகிறோம்'' என்று தனியரசு குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், AIADMK

''மேலும், மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக பொதுசெயலாளருமான ஜெயலாலிதா அவர்கள் மாநில உரிமை சார்ந்த பிரச்சனைகளான கட்சத்தீவு, முல்லை பெரியார், காவிரி ஆற்று பிரச்சனை, கெயில், மீத்தேன் போன்றவை, நீட், தமிழர்களின் பரம்பரிய உரிமையான ஜல்லிக்கட்டு போன்ற எண்ணற்ற பிரச்சனைகள் குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரும் போது தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக மிக கடுமையான நிலைபாடு கொண்டிருந்தார்'' என்றார் தனியரசு.

''அந்த அடிப்படையில் பார்க்கும் போது தமிழக அரசு அல்லது மக்களின் கோரிக்கைகளை இதுவரை நிறைவேற்றாத செவிசாய்க்காத நிலையை கொண்டிருந்த பாஜக அரசுடன் இத்தேர்தல் சமயத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை என கேள்விப்படுவது தோழமைகட்சிகளுக்கு தடுமாற்றத்தையும் , மனவருத்தத்தையும் ஏற்படுத்துவதாக அமைகிறது என்றும் இதை தவிர்க்க வலியுறுத்தியே பாரதிய ஜனதா கூட்டணியை தவிர்க்குமாறு கோரிக்கையை பொதுவெளியில் முன் வைத்ததாக'' அவர் தெரிவித்தார்.

''நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் நடைபெறும் அதிமுக அரசு குறித்தும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரின் திட்டங்களும் செயல்பாடுகளை ஏற்று கொண்டு அதிமுக அரசின் மீது மக்களுக்கு படிப்படியாக நம்பிக்கை துளிர்விடும் இச்சமயத்தில் மக்களின் உணர்வுகள் எதிராக செயல்படும் பாஜக அரசு மற்றும் அதன் மீது உள்ள பழியை ஏன் சுமக்க வேண்டும்,? வாக்குகளை இழக்க வேண்டும்? இக்கூட்டணி அவசியமா'' என அதிமுகவை நேசித்த தோழமைகட்சியாக தனது கேள்வியை முன்வைத்ததாக தனியரசு தெரிவித்தார்.

தமிழகத்தின் 99 விழுக்காடு மக்கள் எரிவாயு விலைஏற்றம், ஜி.எஸ்.டி வரியினால் மேற்கு தமிழகத்தில் அழிந்த சிறுகுறு நிறுவனங்கள், இதனால் வேலை இழந்த எண்ணற்ற மக்கள், பணமதிப்பிழப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு நரேந்திர மோதி அரசை நிராகரிக்கும் மனநிலையிலும், அம்மாவின் வழியில் நடைபெறும் அதிமுக அரசை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இருந்தாலும் இவ்விதமான முரண்பாடான கூட்டணியால் வாக்குகள் பெறுவதற்கான வாய்ப்பை அதிமுக இழக்கநேரும் என்றும், மக்களின் நலன் சார்ந்த அரசாக தமிழக அரசும், மக்கள் விரோத அரசாக மோதி உள்ள நிலையில் முரண்பாடான கூட்டணி வெற்றி வாய்ப்புகளை இழக்க வழிவகுக்கும் என்பதே தனது ஆதங்கம் என அவர் குறிப்பிட்டார்.

மேலும் கொங்கு இளைஞர் பேரவை அதிமுகவுடன் 2011 சட்டமன்ற பொதுதேர்தலில் இணைந்தது முதல் இருந்து இன்றுவரை நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல், கூட்டுறவு தேர்தல், 2014 நாடாளுமன்ற தேர்தல் என அனைத்திலும் தனித்து நின்று அதிமுக போட்டியிட்டது .மோதியா,லேடியா என 2014 நாடாளுமன்ற பொது தேர்தல் பாஜக வை எதிர்த்து மிகப்பெரிய வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய அரசியல் கட்சி என்ற பெருமையை அதிமுக பெற்றது எண்டுறம் அவர் நினைவுகூர்ந்தார்.

பட மூலாதாரம், DIPR

படக்குறிப்பு,

எடப்பாடி பழனிசாமி

''2016 சட்டமன்ற பொது தேர்தலில்கூட தனித்து நின்றே ஆட்சிக்கு வந்து ஜெயலலிதா சாதனை படைத்தார்.நானும் மறைந்த அதிமுக முதல்வரின் வழியை பின்பற்றி பாஜக எதிர்ப்பு அரசியலை தொடர்கிறேன், ஆனால் அம்மா விரும்பாத முரணான கூட்டணியை ஒபிஎஸ், இபிஎஸ் இணங்கி விரும்புவது எனக்கு நெருக்கடி தந்துள்ளது. அவ்வாறு அதிகார பூர்வமா அறிக்கை வந்தால் இதுவரை வலிமையான ஆதரவு தெரிவித்து வந்த கொங்கு இளைஞர் பேரவையின் தேர்தலின் நிலைப்பாடு குறித்து தமிழக உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் , கொங்கு இளைஞர் பேரவை பொது குழு, செயற்குழு என முக்கிய நிர்வாகிகளுடன் இணைந்து ஆய்வுக்குட்பட்டு பின் முடிவுக்கு வருவோம்'' என தெரிவித்தார்.

சசிகலா, டிடிவி தினகரனுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த தனியரசு, பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பிரிந்து இருக்கும் தற்போதைய நிலை தவிர்க்கப்படும் என்றும், ''இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இணைந்ததை போல இவர்களுடன் இணைந்து கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தால் கட்சிக்கு வலிமை மற்றும் கூடுதலாக மக்கள் வாக்களிக்கவும் வெற்றி பெற உதவும்'' என்று கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :