இந்தியாவால் ஏன் பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது?

  • அபிஜித் ஸ்ரீவாத்சவ்
  • பிபிசி செய்தியாளர்
இந்தியா நிர்வாகத்தின் கீழ் இருக்கும் காஷ்மீரின் செனாப் ஆற்றில் 450 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பக்லிஹார் நீர் மின் திட்டம் 2008 ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கியது.

பட மூலாதாரம், Reuters

காஷ்மீரின் புல்வாமாவில் சி.ஆர்.பி.எஃப் வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த 'நெருங்கிய நட்பு நாடு' என்ற அந்தஸ்தை ரத்து செய்வதாக இந்தியா அறிவித்தது.  ஆனால், இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பலர் குரல் எழுப்புகின்றனர்.   ஆனால் அதிகாரபூர்வமாக இது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

"எந்த அளவு கடுமை காட்ட வேண்டுமோ அந்த அளவு இந்தியாவால் கடுமை காட்ட முடியவில்லை. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள வேண்டும்.  அப்போதுதான் பாகிஸ்தான் வழிக்கு வரும்" என்று சொல்கிறார் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி அரசில் வெளியுறவுச் செயலராக இருந்த கம்வல் சிப்பல்.

ஆனால் இது அவ்வளவு சரியானது இல்லை என்று பல நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்தியாவின் நீர்மின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஜம்மு-காஷ்மீருக்கு நீர் அவசியம் தேவை என்றாலும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வது பிரச்சனைக்குரிய ஒன்று" என்று கூறுகிறார் பாகிஸ்தானுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் ஜி. பார்த்தசாரதி.

இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலர் முச்குந்த் தூபேவின் கருத்துப்படி, "ஒப்பந்தத்தை ரத்து செய்து பாகிஸ்தானின் உரிமையை தர மறுத்தால் பெரிய அளவிலான பிரச்சனைகள் எழலாம், தேவையில்லாத சிக்கல்களை சந்திக்க நேரிடலாம்".

உண்மையில், கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரிக்கும் போதெல்லாம், சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்படுகிறது.   

காஷ்மீரின் உரியில் ராணுவத் தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு, நீர் பங்கீடு தொடர்பாக டெல்லியில் நடைபெறவிருந்த கூட்டத்தை இந்தியா ரத்து செய்தது.

அப்போது பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழான 'த நியூஸ்' வெளியிட்ட கட்டுரையில், "காலநிலை மாற்றங்களை எதிர் கொள்ளும் இந்த நேரத்தில் நீர் தட்டுப்பாடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  இந்தியா, 'தண்ணீரை ஆயுதமாக பயன்படுத்தும்' சாத்தியங்கள் அதிகரிக்கும்" என்று எழுதியிருந்தது.

"எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன்" என்ற பத்திரிகையில், காலநிலை மாற்றத்தினால் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சர்ச்சைகளில், நீர் பங்கீடு பிரச்சனையே தலையாயதாக இருக்கும் என்று கூறியிருந்தது.

"தண்ணீர் பிரச்சனைகள் பற்றி பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். பாகிஸ்தான் அதன் நலன்களை பாதுகாக்க வேண்டும்" என்று கராச்சியைச் சேர்ந்த உருது பத்திரிகை 'டெய்லி எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டிருந்தது.

பட மூலாதாரம், Getty Images

சிந்து நதி ஒப்பந்தம்

பிரிட்டன் ஆட்சிக் காலத்திலேயே தெற்கு பஞ்சாபில் சிந்து நதிப்படுகையில் மிகப் பெரிய கால்வாய் ஒன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி தெற்காசியாவின் முக்கிய விவசாயப் பகுதியாக மாறியது.

நாடு விடுதலையடைந்து பாகிஸ்தான், இந்தியா என்று இரண்டாக பிரிக்கப்பட்டபோது, பஞ்சாபும் பிரிந்தது. பஞ்சாபின் கிழக்கு பகுதி இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கு மேற்குப் பகுதியும் கிடைத்தது.

பிரிவினையின்போது, சிந்து நதிப்படுகை மற்றும் அதன் பரந்த கால்வாயும் பாகப் பிரிவினை செய்யப்பட்டாலும் தண்ணீருக்காக பாகிஸ்தான் இந்தியாவை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

நீர் வரத்தை பராமரிப்பதற்காக கிழக்கு மற்றும் மேற்கு பஞ்சாபின் முதன்மை பொறியியலாளர்களுக்கு இடையில் 1947ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் நாளன்று ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டது.

அதன்படி, இந்திய பிரிவினைக்கு முன்பு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட தண்ணீரை 1948 மார்ச் 31 வரை பாகிஸ்தானுக்கு வழங்குவதாக முடிவு செய்யப்பட்டது.

1948 ஏப்ரல் முதல் நாளன்று ஒப்பந்தம் முடிவடைந்ததால், இந்தியா, இரண்டு முக்கிய கால்வாய்களில் இருந்து செல்லும் நீரை நிறுத்தி வைத்தது. இதனால், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் 17 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டது.

இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பல காரணங்கள் கூறப்பட்டது.  காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுப்பதும் அதில் ஒன்றாகும். பிறகு ஏற்பட்ட ஒப்பந்தத்திற்கு பிறகு தொடர்ந்து தண்ணீரை திறந்துவிட இந்தியா ஒப்புக்கொண்டது.

1951இல், அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, டென்ஸி பள்ளத்தாக்கின் முன்னாள் தலைவர் டேவிட் லீலியந்தலை இந்தியாவுக்கு அழைத்து வந்து ஆய்வு மேற்கொள்ள பணித்தார்.  பாகிஸ்தானுக்கும் சென்று ஆய்வுகளை மேற்கொண்ட டேவிட் லீலியந்தல், சிந்து நதி நீர் பங்கீடு பற்றிய கட்டுரை ஒன்றை எழுதினார்.

அந்தக் கட்டுரையை உலக வங்கியின் தலைவரும் லீலியந்தலின் நண்பருமான டேவிட் ப்ளைக் என்பவரும் படித்தார்.  அவர் இது தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடன் பேசினார்.  பிறகு, இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அந்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு தொடர்ந்தது.  இறுதியில் 1960ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் கராச்சியில் கையெழுத்தானது.

ஒப்பந்தத்தின் சரத்துகள் என்ன?

சிந்து நதி உடன்படிக்கையின் கீழ், அந்த நதி கிழக்கு மற்றும் மேற்கு நதிகளாக பிரிக்கப்பட்டது என்று ஜி பார்த்தசாரதி கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

உடன்படிக்கையின் படி, சிந்து படுகையின் கிழக்கு பகுதி நதிகளான ரவி, பியாஸ் மற்றும் சட்லஜ் ஆகிய இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்டது. சிந்து படுகையின் மேற்கு நதிகளான ஜீலம் மற்றும் செனாப் ஆகியவற்றில் 80 சதவீத நீர் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டது.

ஒப்பந்தத்தின் படி, சில விதிவிலக்குகள் தவிர, கிழக்கு நதிகளின் நீரை இந்தியா முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.   அதே நேரத்தில், மேற்குப் பகுதி நதிகளின் தண்ணீரைப் பயன்படுத்த இந்தியாவுக்கு கட்டுப்பாட்டுடன் (மின்சார உற்பத்தி, விவசாயம் போன்றவற்றுக்கு குறிப்பிட்ட அளவு தண்ணீர்)   கூடிய உரிமைகள் கொடுக்கப்பட்டிருந்தது.   

இரு நாடுகளும், ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்தவும், பரஸ்பரம் தள ஆய்வு மேற்கொள்வதற்கான சரத்துகளும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின்படி, சிந்து நதி நீர் ஆணையம் உருவாக்கப்பட்டது. அதன்படி இரு தரப்பு ஆணையர்களும் சந்திக்க வேண்டும் என்ற முன்மொழிவும் வைக்கப்பட்டது.

அதாவது ஒப்பந்தம் தொடர்பாக எந்த ஒரு பிரச்சனையையும் பற்றி இரு தரப்பு ஆணையர்களும் பேச்சுவார்த்தை நடத்தலாம்; அதற்காக அவர்கள் அவ்வப்போது சந்தித்து பேசவேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு நாடுகளில் எந்தவொரு நாடும் இந்த நதிகளில் எதாவது திட்டத்தை செயல்படுத்தும்போது, அதற்கு மற்றொரு நாடு ஆட்சேபனை ஏதேனும் எழுப்பினால், அதற்கு சம்பந்தப்பட்ட நாடு பதிலளிக்கவேண்டும். இரு நாடுகளும் சந்தித்து பேச வேண்டும்.

கூட்டத்தில் தீர்வு ஏதும் ஏற்படவில்லை என்றால், இரு அரசுகளும் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும்.  

அத்துடன், நடுநிலையான வல்லுநரின் உதவியையோ அல்லது நடுவர் நீதிமன்றத்தையோ அணுகவேண்டும்.

சர்ச்சைக்குரிய விவகாரம்

சிந்து நதிப் படுகையின் தண்ணீர் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இழுபறி நிலவுகிறது.

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் செயல்படுத்தப்படும் மிகப்பெரிய நீர்மின் திட்டங்களான பாகல் (1,000 மெகாவாட்), ராத்லே (850 மெகாவாட்), கிஷன்கங்கா (330 மெகாவாட்), மியார் (120 மெகாவாட்) மற்றும் லோயர் கல்நாயி (48 மெகாவாட்) ஆகியவற்றிற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவிக்கிறது.

"காஷ்மீர் அதன் நீர் வளங்களை முழுமையாக பயன்படுத்த முடியவில்லை" என்று ஜி. பார்த்தசாரதி கூறுகிறார்.

அதே நேரத்தில், காஷ்மீருக்கு, தன்னுடைய மாநிலத்தின் நீர்வள ஆதாரத்திலிருந்து எந்தவொரு நன்மையும் கிடைப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன் மெஹ்பீபா முஃப்தி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக இர்நுதபோது, சிந்து நதி ஒப்பந்தத்தால் காஷ்மீர் மாநிலத்திற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் நட்டம் ஏற்படுகிறது என்றும், அதற்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.   

மத்திய அரசின் செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் நீர் வளத்துறை செயலாளர் என பல முக்கிய பொறுப்புகளை வகித்தவரான நரேஷ் சந்திராவிடம் இது தொடர்பாக பிபிசி பேசியது. 

"காஷ்மீரில் துல்பூல் திட்டம் செயல்படுத்தலாம் என்ற முடிவெடுக்கப்பட்ட போது, அதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது.  அந்தத் திட்டத்தின்படி, மழைக்காலத்தில் நீரை தேக்கி வைக்கும் விஷயம் பேசப்பட்டது, ஒப்பந்தத்தின்படி அவ்வாறு செய்யமுடியாது.  ஏனென்றால், நதியில் எப்போதும் நீர் வரத்து இருக்கவேண்டும் என்பது ஒப்பந்தத்தின் சரத்து" என்று நரேஷ் சந்திரா கூறினார்.

இருந்தபோதிலும் கூட, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான சிந்து நதி நீர் ஒப்பந்தம் மிகவும் வெற்றிகரமானது என்று அவர் கூறுகிறார்.

இந்தியா ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியுமா?

சிந்து நதிப் படுகை ஒப்பந்தத்தில், 1993 முதல் 2011 ஆண்டு வரை பாகிஸ்தான் தரப்பில் ஆணையராக இருந்த ஜமாத் அலி ஷாவிடம் பிபிசி பேசியது.

பட மூலாதாரம், Getty Images

"ஒப்பந்தத்தின்படி, எந்தவொரு நாடும் ஒருதரப்பாக ஒப்பந்தத்தை ரத்து செய்யவோ, மாற்றவோ முடியாது. இந்த ஒப்பந்தத்தில் மாற்றம் எதாவது செய்வதாக இருந்தாலும், புதிய ஒப்பந்தம் மேற்கொள்வதாக இருந்தாலும், அதை இரு நாடுகளும் இணைந்துதான் செய்ய முடியும்" என்று அவர் சொல்கிறார்.

உலகச் சண்டைகள் பற்றி புத்தகம் எழுதியிருக்கும் பிரம்மா சேலானி இவ்வாறு கூறுகிறார், "இந்தியா-வியன்னா ஒப்பந்தத்தின் 62வது சரத்தின் கீழ், குறிப்பிடப்பட்டிருப்பது போல, இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத குழுக்களை பாகிஸ்தான் பயன்படுத்துகிறது என்று சொல்லி இந்தியா ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கலாம்.  அதேபோல் அடிப்படை நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டால், ஒப்பந்தம் ரத்து செய்யப்படலாம் என்று சர்வதேச நீதிமன்றம் கூறியிருக்கிறது".

"இந்திய பிரிவினைக்குப் பிறகு, உலக வங்கி, சிந்து நதிப்படுகையின் நதி தொடர்பான மத்தியஸ்தத்தை செய்தது.  எனவே, இந்தியா இந்த ஒப்பந்தத்தை மீறினாலோ, ரத்து செய்தாலோ, பாகிஸ்தான் உலக வங்கியைத் தான் முதலில் அணுகும்.  ஒப்பந்தத்தை மீறக்கூடாது என்று இந்தியாவிற்கு உலக வங்கி அழுத்தம் கொடுக்கும். இதனால், இந்தியாவுக்கு உலக வங்கி மற்றும் அதன் உறுப்பு நாடுகளுடனான உறவு சீர்கெடும்".  

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :