‘மக்களவை தேர்தல் 2019: பாஜக-அதிமுக-பாமக கூட்டணி, யாருக்கு லாபம்? யாருக்கு நட்டம்?

  • மு. நியாஸ் அகமது
  • பிபிசி தமிழ்
ஜெயலலிதா

பட மூலாதாரம், Getty Images

தமிழக அரசியல் களம் தகிக்க தொடங்கிவிட்டது. அதிமுகவுடன் பா.ம.க கரம் கோர்த்துவிட்டது. இந்த கூட்டணியில் பாரதிய ஜனதாவும், தே.மு.தி.கவும் இணைவது ஏறத்தாழ முடிவாகி விட்டது.

'மோடியா லேடியா'

கடந்த (2014) பாராளுமன்ற தேர்தலில் உரக்க ஒலித்த ஒரு குரலை அவ்வளவு சுலபமாக மறந்துவிட முடியாது. பாரதிய ஜனதாவுக்கு எதிரான குரல் அது. ஜெயலலிதாவின் குரல் அது. சென்னையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில்,"மோடியா லேடியா" என்றார் ஜெயலலிதா.

தேர்தல் முடிவு 'லேடி'தான் என்றது.

இந்திய அளவில் மிகப்பெரிய அளவில் பா.ஜ.கவின் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றிருந்தாலும், தமிழகத்தில் அந்த அணிக்கு கிடைத்தது என்னவோ இரண்டு இடங்கள்தான்.

பா.ஜ.க வென்றது ஒரே ஒரு இடத்தில்தான். பொன் ராதாகிருஷ்ணன் மட்டும் கன்னியாகுமரியில் வென்றார்.

தருமபுரி நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியில் நின்று வெற்றி பெற்றார் அன்புமணி ராமதாஸ். அப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர், "அதிமுக அலையிலும் எதிர்த்து நின்று பா.ம.க வென்றுவிட்டது." என்றார்.

'அன்புமணியாகிய நான்'

'அன்புமணியாகிய நான்' என்று தனியனாக அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலை சந்தித்தது பாட்டாளி மக்கள் கட்சி.

அன்புமணி உட்பட அந்த கட்சி சார்பாக போட்டியிட்ட அனைவரும் தோற்று இருந்தாலும், அன்புமணி தீவிரமாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்தார். "இனி எப்போதும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை" என்றார்.

ஆளுங்கட்சிக்கு எதிராக தீவிரமாக பேசினார், எதிர்க்கட்சியான திமுகவும் ஆக்கபூர்வமாக செயல்படவில்லை, நாங்களே மாற்று என்றார்.

இப்படி எதிரெதிராக நின்றவர்கள் இப்போது கரம் கோர்த்து இருக்கிறார்கள்.

இதனால் யாருக்கு நன்மை கிடைக்கும்?

அதிமுகவுடன் கூட்டணி இல்லை

தேவை மற்றும் நிர்பந்தத்தின் அடிப்படையில் இயற்கைக்கு முரணாக அமைந்த கூட்டணி இது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் டி. சுரேஷ்குமார்.

பட மூலாதாரம், Getty Images

"அமைச்சரை ஊழல் குற்றச்சாட்டில் விசாரிக்கிறார்கள், தலைமை செயலகத்திற்குள் ரெய்டு நடக்கிறது, இந்த அரசின் கீழ் பணிபுரியும் பல அதிகாரிகள் ஊழல் குற்றச்சாட்டில் விசாரணை வளையத்திற்குள் இருக்கிறார்கள். இதனையெல்லாம் கடந்து, சென்றாண்டு சென்னையில் அமித் ஷா என்ன பேசினார்? நேரடியாக தமிழக அரசை ஊழல் அரசு என்று குற்றஞ்சாட்டினார். ஊழலற்ற அரசை அகற்றுவதே பாரதிய ஜனதா கட்சியின் நோக்கமென்றார். ஆனால் இப்போது அதிமுகவுடன் கூட்டணி வைக்கிறார்கள் என்றால் என்ன பொருள்" என்று கேள்வி எழுப்புகிறார்.

மேலும் அவர், "அதிமுகவின் இரண்டாம் நிலை மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு பா.ஜ.கவுடன் கூட்டணி வைப்பதில் எந்த உடன்பாடும் இல்லை. அவர்கள் அதிருப்தியிலே இருக்கிறார்கள். இதனை அதன் தலைவர்களும் உணர்வார்கள். ஆனால், அதிமுக தலைவர்களுக்கு வேறு நிர்பந்தம் இருக்கிறது. அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மத்திய புலனாய்வு அமைப்புகள்தான் விசாரிக்கின்றன. இந்த நிர்பந்தத்தின் அடிப்படையில்தான் இவர்கள் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள்" என்று தெரிவிக்கிறார்.

பா.ம.க குறித்து சுரேஷ்குமார், "இந்த ஆட்சியை கடுமையான வார்த்தைகளில் விமர்சித்திருக்கிறார் ராமதாஸ். இனி திராவிட கட்சிகளுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்றிருக்கிறார். இப்போது என்ன ஆனது?. இந்த கூட்டணிக்காக பத்து அம்ச கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறது பா.ம.க.

பட மூலாதாரம், Facebook

ராஜீவ் காந்தி கொலையில் தண்டனை பெற்ற ஏழு தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்பது கோரிக்கைகளில் ஒன்று. அது குறித்துதான் ஏற்கெனவே தமிழக சட்டசபையில் தீர்மானம் போட்டு நிறைவேற்றியாகிவிட்டதே. பின், டாஸ்மாக்குகளை மூட வேண்டும் என்கிறார், அதிமுக அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக செய்யாததையா இப்போது செய்ய போகிறது?. அதில் உள்ள பிற கோரிக்கைகளும் அதிமுக மற்றும் பா.ஜ.க அரசு செவிசாய்காதவை" என்றார் சுரேஷ்குமார்.

இது முழுக்க முழுக்க சந்தர்ப்பவாத கூட்டணி என்கிறார் சுரேஷ்குமார்.

அதிமுக பாமக கூட்டணி குறித்து டிவிட்டரில் கருத்து பகிர்ந்துள்ள அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன், இதனை தந்திரமான நகர்வு என்று விவரித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :